11/11/2023 (980)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
சேர்த்து வைத்திருக்கும் செல்வத்திற்கு இயல்பு என்னவென்றால் குறைந்து கொண்டே இருப்பதுதான்!
செலவே செய்யாமல் வைத்திருந்தாலும் பணவீக்கத்தினால் அதன் மதிப்பு குறைந்து கொண்டே இருக்கும்.
நம் பேராசான் ஒரு முக்கியமான இரகசியத்தைச் சொல்லப் போகிறார். நாம் வைத்திருக்கும் செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமா? என்று கேட்கிறார்.
அந்த இரகசியத்தை வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?
வள்ளுவப் பெருந்தகை: காதைக் கொஞ்சம் கிட்டே காட்டுங்கள் சொல்கிறேன்.
பிறர் கைப்பொருளை, அவர்களின் உழைப்பினால் ஈட்டியப் பொருளை விரும்பாமல் இருந்தால் அதுவே போதும். இதுதான் உங்கள் செல்வத்தை குறைக்காமல் பாதுகாக்கும் இரகசியம். சிந்தித்துப் பாருங்கள் இதன் உண்மைத் தன்மையை!
நம்மாளு: ஐயா, சரியாகத்தான் இருக்கு. பிறரிடம் அடித்துப் பிடிங்கினால் ஒன்றுக்கு இரண்டாக நம்மிடம் வசுலிக்க வழிமுறைகள் இருக்கத்தானே இருக்கு. அதுவும் சட்டப்படி!
எல்லார்க் குற்றங்களும் வெளிப்படாமல் போவதில்லை! வெளிப்படும்போது அது அவர்கள் அடித்துச் சேர்த்தப் பொருளோடு அனைத்தையுமே எடுத்துச் செல்கிறது. காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை.
அடித்துப் பிடுங்குவது மட்டும் வெஃகுதல் இல்லை. ஒருவனுக்கு நியாமாகச் சேர வேண்டிய கூலியைக் கொடுக்காமல் இருப்பதும் வெஃகுதல்தான். நாம் நமக்கு உரித்தானக் கூலியை எதிர்பார்க்கும்போது, நம்மிடம் பிறர் எதிர்பார்ப்பது எவ்வகையில் தவறு? பிறர் வயிற்றில் அடிப்பதும் வெஃகுதல்தான். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடித்துக் குறைக்கும்போது நமக்கு வென்றதுபோல மகிழ்ச்சி இருக்கலாம். வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு. இது நிற்க.
தாராளாமாக இருங்கள். அது நம்மை உயர்த்தும். நாம் குறளுக்கு வருவோம்.
அஃகுதல் என்றால் சுருங்குதல். அஃகாமை என்றால் சுருங்காமல் இருத்தல்.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். - 178; – வெஃகாமை
செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் = சுருங்கும் தன்மையுடைய செல்வத்தின் தன்மையை மாற்றி சுருங்காமை அமைய என்ன செய்ய வேண்டும் என்றால்;
பிறன்கைப் பொருள் வெஃகாமை வேண்டும் = பிறர்க்கு உரித்தானப் பொருளை விரும்பாமல் இருத்தல் வேண்டும்.
சுருங்கும் தன்மையுடைய செல்வத்தின் தன்மையை மாற்றி சுருங்காமை அமைய என்ன செய்ய வேண்டும் என்றால் பிறர்க்கு உரித்தானப் பொருளை விரும்பாமல் இருத்தல் வேண்டும்.
இங்கே, இன்னுமொரு குறளையும் பார்ப்போம்.
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். - 319; - இன்னாசெய்யாமை
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் = நாம் ஒருவர்க்குச் செய்யக் கூடாததை முன்னர் செய்தால்; தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் = நமக்கும் கொடுமைகள் பின்னர் தாமாகவே நிகழும்.
நாம் ஒருவர்க்குச் செய்யக் கூடாததை முன்னர் செய்தால் நமக்கும் கொடுமைகள் பின்னர் தாமாகவே நிகழும்.
முற்பகல், பிற்பகல் என்பன முன்னர், பின்னர் என்ற பொருளில் வந்துள்ளன.
“தாமாகவே” என்றால் நாம் எதுவும் செய்யத் தேவையில்லை. முன்னர் நாம் தப்பு செய்திருப்பின், நமக்கு நேரப் போகும் கொடுமைகள் பின்னர் இலவசம்!
தப்புகளைத் தவிர்ப்போம். தவறுகளை மீண்டும் செய்யாது ஒழிவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
コメント