07/07/2022 (496)
சூதினால் ஒன்றும் இல்லாமல் வறுமையில் உழல்வர் என்று குறள் 935ல் நம் பேராசான் குறிப்பிட்டு இருந்ததைப் பார்த்தோம். மீள்பார்வைக்காக:
“கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.” --- குறள் 935; அதிகாரம் - சூது
கவறு = சுதாடும் கருவி; கழகம் = அதை ஊக்குவிக்கும் இடம்; கை = தனது திறமை என்று நம்புவது; தருக்கி = இம் மூன்றையும் விரும்பி; இவறியார் = அதித ஆசை கொண்டவர்; இல்லாகியார் = ஒன்றும் இல்லாமல் போவார்
அடுத்து என்ன சொல்கிறார் என்றால் அவர்களின் பசியைப் போக்கக்கூட வழியிருக்காதாம்.
“பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்று பார்த்தோம். சூதினால் அந்தப் “பத்து” எப்போதோ பறந்துவிட்டு இருக்க, பசி மட்டும் நின்று, கொன்று கொண்டிருக்குமாம்.
அகடு என்றால் பள்ளம், முகடு என்றால் உச்சி அல்லது மேடு. ஒலியானது நேர் கோட்டில் செல்லாது. ஒரு அலையைப் போலச் செல்லும் (sine wave). அதாவது, மேலும், கீழுமாக எழுந்தும், விழுந்தும் செல்லும். அதனை, முறையே, முகடு என்றும் அகடு என்றும் சொல்வார்கள்.
அதுபோலத்தான் நம் வயிறும்! உள்ளேயும், வெளியேயும் மாறி மாறி இருக்கும். சாப்பிட்டால் வயிறு பெருத்து வெளியே வரும். சாப்பாடு இல்லையென்றால் உள்ளே சுருங்கி ஒட்டி பள்ளமாக இருக்கும். இந்தப் பள்ளத்தையும் “அகடு” என்று அழைக்கிறார் நம் பேராசான்.
சூதில் சிக்கியதால், பசியினால் ஏற்பட்ட பள்ளம் நிரம்பாதாம். மேலும் பல துண்பங்களும் வந்து சேருமாம்.
“அகடாரார் அல்லல் உழப்பர் சூதுஎன்னும்
முகடியால் மூடப்பட்டார்.” --- குறள் 936; அதிகாரம் – சூது
சூது என்னும் முகடியால் மூடப்பட்டார் = சூது என்னும் பெருமலையால் மூடப்பட்டவர்களுக்கு;
அகடு ஆரார் அல்லல் உழப்பர் = பசித்துண்பம் போகாது; பல சிக்கல்களிலும் உழல்வர்.
முகடி என்றால் மூதேவி என்று பல அறிஞர் பெருமக்கள் பொருள் சொல்கிறார்கள். இது ஒரு குறியீடு. இல்லாமைக்கு குறியீடு மூதேவி; இருப்பதற்கு குறியீடு திருமகள் (ஸ்ரீதேவி)
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments