10/09/2023 (918)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
விருந்தோம்பலில் நாம் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியை வரவேற்று மகிழ்ந்தோம்.
பசிக்கும் போது சாப்பிடுதல் நன்று. மற்றவர்களுக்குப் பசிக்கும் போது உணவிடுதல் மிக, மிக நன்று. அப்படிச் செய்தால் வாழ்வு தொய்வு இல்லமால் வளரும் என்ற குறளை நாம் முன்பு பார்த்துள்ளோம். காண்க 26/04/2021 (99).
மீள்பார்வைக்காக:
“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.” --- குறள் 83; அதிகாரம் – விருந்தோம்பல்
செய்யான் என்றால் செய்ய மாட்டான். செய்யார் என்றால் செய்ய மாட்டார் என்று பொருள். செய்யாள் என்றால்? செய்ய மாட்டாளா?
அப்படிக் கிடையாதாம்! இடம் பார்த்துதான் பொருள் சொல்லணுமாம். செய்+அவள் = செய்யவள்; இந்தச் செய்யவள் செய்யாள் என்று விகாரப்பட்டு வருமாம்!
செய்யவள் என்றால் நினைத்ததைச் செய்து தருபவள்.
செய் என்றால் சிவப்பு வண்ணத்தையும் குறிக்குமாம். செய்யாள் என்றால் சிவந்த வண்ணத்தை உடையவள் என்றும் பொருள்படுமாம்.
அபிராமி அந்தாதியில் அபிராமபட்டர்பிரானின் அம்பாளைப் பற்றிய வருணனை கீழ்வருமாறு:
“மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே!” --- பாடல் 21, அபிராமி அந்தாதி.
இந்தப் பாடலில் நான்காவது அடியில்:
பொன் நிறம் படைத்த பிங்கலை; நீல நிறத்தினை உடைய நீலி; செந்நிறம் உடைய லலிதாம்பிகை (செய்யாள்); வெண்ணிறம் படைத்த வித்யா தேவி (வெளியாள்); பச்சை நிறம் உடைய உமா தேவி என்றெல்லாம் அபிராமி தேவியை வருணிக்கிறார். செய்யாள் என்றால் செந்நிறம் உடையவள் என்ற பொருளில் ஆள்கிறார்.
நமது பேராசான், செய்யாள் என்ற சொல்லை நினைத்தை நிறைவேற்றித் தருபவள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்.
அப்படி ஒருவள் இருந்தால் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். எனவே அந்தச் சிறப்பானவளைத் திருமகள் என்றனர் அறிஞர் பெருமக்கள். திருமகள் என்றதனால் அவள் செல்வத்தைக் குறிக்கும் கடவுளான லட்சுமியுமானாள்!
செய்யாள் என்றால் நல்லதொரு இல்லாள் என்று பொருள் எடுக்கலாம்! நாம் குறளைப் பார்த்துவிடுவோம்:
“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.” --- குறள் 84; அதிகாரம் – விருந்தோம்பல்
முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் = வீட்டின் வாசலிலேயே இருந்து கொண்டு வரும் விருந்தினர்களை ஆவலுடன் எதிர்நோக்கி நல் விருந்தினை அளிப்பவனின்; இல் அகன் அமர்ந்து செய்யாள் உறையும் = அந்த இல்லத்தினுள்ளே அவனின் எல்லாச் செயல்களுக்கும் காரணமாக திருமகளாகிய இல்லாள் இருப்பாள்.
வீட்டின் வாசலிலேயே இருந்து கொண்டு வரும் விருந்தினர்களை ஆவலுடன் எதிர் நோக்கி வருபவர்களுக்கு நல் விருந்தினை அளிப்பவனின் இல்லத்தினுள்ளே அவனின் எல்லாச் செயல்களுக்கும் காரணமாக திருமகளாகிய இல்லாள் இருப்பாள்.
காரணம் - இல்லாள்; காரியம் - விருந்தோம்பல். காரண காரியத் தொடர்பைச் சொல்வது போல உள்ளது இந்தக் குறள்.
அறிஞர் பெருமக்களின் உரைகள் சிலவற்றையும் பார்ப்போம்:
மூதறிஞர் மு.வரதராசனார்: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
புலவர் நன்னன்: முக மலர்ந்து நல்ல விருந்தைப் பேணும் இல்லத்தில் திரு எனப்படும் செல்வம் கொழிக்கும்.
மணக்குடவப் பெருமான்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண் திருவினாள் மனம்பொருந்தி உறையும். இது கேடின்மையன்றிச் செல்வமும் உண்டாம் என்றது.
பரிமேலழகப் பெருமான்: திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.
(வாழாநிற்கும் என்றால் வாழ்கின்றவள் என்று பொருள்.)
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments