31/05/2023 (818)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
சாக்கடை நீர் தீர்த்தமாகுமா? ஆகுமாம்.
(சாய்க்கடை என்பதுதான் சாக்கடை என்று மருவி தற்போது பயன்பாட்டில் உள்ளது. தீர்த்தம் = பயன்படுத்தக் கூடிய நீர்)
சிறிய அளவில் ஒடும் சாய்க்கடை நீர், ஒரு பெரிய ஆற்றினில் கலந்தால் அந்த சாய்க்கடை நீரும் தீர்த்தமாகுமாம். நான் சொல்லலைங்க நாலடியாரில் சொல்லியிருக்காங்க.
நாலடியாரில் என்ன சொல்லியிருக்காங்க என்றால் நாம் தரத்தில் சற்று தாழ்ந்திருந்தாலும், நல்லவர்கள் பலரோடு உறவு வைத்துக் கொண்டால் பூவுடன் சேர்ந்த நாறும் மனப்பதுபோல, நாமும் உயரலாம் என்ற பொருளில் சொல்லியிருக்காங்க.
“ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓருங்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.” பாடல் 175; அதிகாரம் – நல்லினம் நாலடியார்
ஊர் அங்கண நீர் = ஊரின் சாக்கடை நீர்; உரவு நீர் = பெரும் நீர் பரப்பு
அதான் சொல்லிட்டாங்களே என்று நம்மாளுங்க சாக்கடை நீரையும் கழிவு நீரையும் அப்படியே எடுத்துட்டுபோய் ஆற்றிலேயேயும் கடலிலேயும் கலந்துவிட்டு ஆற்றையும் கடலையும் சாக்கடை நீராக மாற்றிவிடுகிறார்கள்.
சரி, இப்போ எதற்கு இந்த நாலடியார் என்று கேட்கிறீர்கள், அதானே?
அந்த அங்கணம் இருக்கே அதை கவனத்திலே வையுங்கள்.
ஒரு கற்பனை செய்யுங்கள்: ஒருத்தர், ஒரு மருந்து கண்டு பிடித்திருக்கிறார். அந்த மருந்தை உட்கொண்டால் போதும் அது உங்களை இளமையாகவும், வளமையாகவும் எப்போதும் வைத்துக் கொள்ளும் என்று கூறி அந்த மருந்துக் குப்பியை உங்களுக்குத் தருகிறார். நீங்கள் அதை எப்படி கையாள்வீர்கள். மிகவும் பொறுமையாக, நிதானமாக ஒரு இடத்தில் அமர்ந்து அதை அருந்துவீர்கள் அல்லவா?
அதுபோல் அல்லாமல், அரக்க பரக்க அதைத் திறந்து குடிக்க, அது கை தவறி கீழே விழ, அதுவும் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையில் விழ ... அனைத்தும் வீணாகப் போகும்படி செய்வோமா?
இந்தக் கேள்வியை ஏதோ நான் கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். நம் பேராசான் கேட்கிறார். இதோ அந்தக் குறள்:
“அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.” --- குறள் 720; அதிகாரம் – அவையறிதல்
தம் கணத்தார் அல்லார் முன் கோட்டி கொளல் = தம்மைப் போன்று ஒத்தவர்களாக இல்லாதவர்களின் கூட்டத்தின் முன், அதாவது புல்லவையுள், சொல்லற்க (அதையும் மீறி நீங்கள் சொல்வது என்பது எதனைப் போன்றது என்றால்); அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் = சாய்க்கடையில் சிதறிய சாவா மருந்தைப் போன்றது; உக்க = சிதறிய.
கோட்டி = சபை. இதைத்தான் ‘கோஷ்டி’ என்று சொல்கிறார்கள் போல.
ஐந்தாம் திருமுறையில் உள்ள திருநாவுக்கரசப் பெருமான் திருவிசயமங்கை என்னும் ஊரில் அருளிய எழுபத்தி ஓராம் பாடலில்:
“கண்பல் உக்க கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழ லுத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.” --- பாடல் 71; ஐந்தாம் திருமுறை: திருநாவுக்கரசப் பெருமான்
கண்ணும் பல்லும் சிந்திவிட்ட மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி உண் பலிக்கு திரியும் உத்தமனே! வெண்பிறைக் கண்ணியை உடைய விசய மங்கையின் நண்பனைத் தொழப் பெற்றது நன்மையே என்கிறார் திருநாவுக்கரசப் பெருமான்.
‘உக்கு’ என்ற சொல்லை இலங்கைப் பெருமக்கள் உளுத்துப்போவதற்குப் பயன்படுத்துகிறார்கள். உ-ம்: மரமெல்லாம் உக்க ஆரம்பித்துவிட்டது.
உகு என்ற சொல் (கண்ணீர்) சிந்துதல், உதிர்த்தல், வடித்தல் என்ற பொருளில் பயின்று வருகிறது. உ-ம்: ஏன் தேவையில்லாமல் வார்த்தைகளை உகுக்கிறாய்? சொல்லாராய்ச்சி நிற்க.
தம்மைப் போன்று ஒத்தவர்களாக இல்லாதவர்களின் கூட்டத்தின் முன், அதாவது புல்லவையுள், சொல்லற்க. அதையும் மீறி நீங்கள் சொல்வது என்பது எதனைப் போன்றது என்றால், சாய்க்கடையில் சிதறிய சாவா மருந்தைப் போன்றது.
சொல்லைச் சரியான அவையில் சரியான வகையில் பயன்படுத்துவோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments