top of page
Search

அச்சமும் நாணும் ... 25/05/2024

25/05/2024 (1176)

அன்பிற்கினியவர்களுக்கு:

நாம் நேற்று பார்த்த குறளில் வரும் பிற வகை நாணம் என்பதற்குக் குல மகளிர் நாணம் என்றும் கணிகையர் நாணம் என்றெல்லாம் அறிஞர் பெருமக்கள் உரை காண்கிறார்கள்.

 

பிற வகை நாணம் எல்லார்க்கும் பொதுவாக வெளிப்படுவதினை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஒரு வேளை அந்த நாணம் பெண்களுக்கு அழகாக இருப்பதனால் அவ்வாறு பொருள் கண்டு இருக்கலாம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 

அது மட்டுமல்ல, பெண்களின் குணமாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றும் சொல்கிறார்கள். இவை ஏன் பெண்களுக்கு மட்டும் என்று வெகுண்டு மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும், மற்றும் பல அறிஞர் பெருமக்களும் அடி அடியென்று வெளுத்து வாங்கியுள்ளார்கள்.

 

இவர்களுக்குப் பதில் சொல்லும்விதமாக “முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல” என்ற ஒரு வாதத்தோடு தொல்காப்பியரை இழுக்கிறார்கள்.

 

என்ன, தொல்காப்பியர் பெருமானே சொல்லியுள்ளாரா?

 

ஆமாம் என்று அழுத்திச் சொல்கிறார்கள்.

 

எங்கே அந்தப் பாடலைக் காட்டும் என்றால் “இதோ” என்று நீட்டுகிறார்கள்.

 

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த

நிச்சமும் பெண்பாற்கு உரியன – பாடல் 1045; களவியல், பொருளதிகாரம், தொல்காப்பியம் – புலவர் வெற்றியழகனார் எளிய உரை.

 

சரி, இதற்குப் பொருள் என்னவென்றால், அதுதான் பட்டியலிட்டுவிட்டாரே பெண்களுக்கு அச்சம், மடம், நாணம் உரியன என்று இதனை மறுக்க நீர் யார் என்கிறார்கள். தொல்காப்பியரே சொல்லிவிட்டார். நீர் என்ன அவரைவிட அறிவாளியா என்றும் கேட்கிறார்கள்.

 

நம்மாளு: சரி, அந்தப் பயிர்ப்பைக் காணோமே?

 

திருவாளர் கலவரம்: ஆங்… அது, அது தொல்காப்பியர் மறந்து விட்டுவிட்டார். பின்னர் வந்த அறிஞர்கள் சேர்த்துவிட்டார்கள். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

 

நம்மாளு: சரி, பயிர்ப்பு என்றால் என்னவென்று விளக்க முடியுமா?

 

திருவாளர் கலவரம்: பயிர்ப்பு என்றால் அருவருப்பு. அதுகூடத்  தெரியாதா?

 

நம்மாளு: சரி, எதன்மேல் அருவருப்பு கொள்வது பெண்களுக்கு உரியது?

 

திரு. கவன்னா: ஓஒ.. அதுவா? பிற ஆண்களைத் தொடுவதில் அருவருப்பு கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கற்பு காப்பாற்றப்படும்.

 

நம்: சரி, இந்தப் பண்பு ஆண்களுக்கு கிடையாதா?

 

திரு. க: இதுபோன்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

 

நம்: மிகச் சரி. உங்களிடம் பதில் இருக்காது. இதனால்தான் மகாகவியும், பாவேந்தரும் உங்களையெல்லாம் வெளுத்து வாங்குகிறார்கள்.

 

திரு. க: அந்தப் பயிர்ப்பை வேண்டுமானால் விட்டுவிடுங்கள். மீதமுள்ள அச்சம், மடம், நாணம் பெண்களுக்கு உரியன என்று நீங்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கு உங்களின் பதில் என்ன?

 

நம்: சரியான கேள்வியை எழுப்பியுள்ளீர். இப்படி நீங்கள் உங்களையே கேள்விகளைக் கேட்டிருந்தால் உங்களுக்கே விளங்கியிருக்கும். நம் பேராசான், எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது முக்கியம் என்றல்லவா சொல்லியிருக்கிறார்.

 

அந்தப் பாடல் தொல்காப்பியத்தில் எந்தப் பகுதியில் உள்ளது என்பதனைப் பாருங்கள். அது களவியலில் வரும் பாடல். களவியல் என்பது காதலிக்கும் பருவம்.

 

அந்தப் பருவத்தில் பெண்மகளுக்குப் பெரும்பான்மையாக இருப்பனவற்றைச் சொல்லியுள்ளார்.

 

அச்சம் அது நிச்சயமாக இருக்கும். அவன் வருவானா? நம்மைதான் மணம் முடிப்பானா? என்றெல்லாம் நிச்சம் நிச்சயம் இருக்கும். நிச்சம் என்றால் நித்தம் என்று பொருள். அவை மட்டுமல்ல. தாங்கள் மறைவாகச் சந்திக்கப் போகிறோமே யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்றும் அச்சம் இருக்கும்.

 

மடம் என்றால் பேதைமை. அவள் காதலிக்கும் ஆண் மகனை மிகவும் நம்புவாள்!

 

நாணம் என்றால் அவனைக் காணும் பொழுதும், அவன் அருகில் இல்லாத பொழுதும் அவன் சொன்னதையும் செய்ததையும் நினைத்துப் பார்க்கும்போது நிச்சயம் வெட்கப்படுவாள்.

 

எனவே, களவியலில் அச்சம், மடம், நாணம் என்னும் இந்த மூன்றும் நிச்சமும் பெண்பாற்கு உரியன என்றார். அவை களவியலில் முந்துறும் என்றும் சொல்கிறார்.

 

இதனை வைத்துக் கொண்டு பெண்கள் எப்பொழுதும் அப்படியேதான் இருக்கவேண்டும் என்று பொருள் கான்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

 

கேள்விகளைக் கேட்டுக் கொள்ளும் நண்பரே! கேள்விகளால் வேள்விகளைச் செய்யுங்கள்.  நானும் உரக்கச் சொல்வேன் முன்னோர்கள் முட்டாள்களில்லை! அவர்களை முட்டாள்கள் ஆக்குவதும் நம் வேலையில்லை.

 

நம்முடைய ஆதிக்க மனப்பான்மையின் காரணமாக முன்னோர்களின் வார்த்தைகளைத் திரிக்கிறோம். அதில் நம் கருத்துகளைத் திணிக்கிறோம். அவ்வளவே!

 

… ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்

பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்

போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;

நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;

பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! … புதுமைப் பெண்; மகாகவி பாரதியார்

 

“நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் … ” பெண்களுக்கு எப்பொழுதும் நாணமும் அச்சமும் வேண்டும் என்று சொல்பவர்களை எப்படி தாக்குகிறார் பாரீர். 

 

பெண்களுக்குத் தேவை ஞான நல்லறம், வீர சுதந்திரம் என்கிறார். இந்தப் பாடலில் புதுமைப் பெண்களின் குணங்களாக இருக்க வேண்டுவனவற்றை விவரமாக விரித்துள்ளார். நேரம் கிடைப்பின் வாசிக்க வேண்டும்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page