14/09/2021 (203)
“…
வண்ணத்தமிழ் பெண் ஒருத்தி என் எதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள் …
… அன்னம் கூட அவளித்தில் அஞ்சி நடை பழகும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
இன்னிசையில் பாடம் கேட்க எண்ணிவரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும் ….”
பாவை விளக்கு என்ற திரைப்படத்தில் மாபெரும் கவிஞர் மருதகாசி அவர்கள் 1960ல் எழுதிய பாடல்
“பெண்ணொருத்தி பென்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் …
ஓ பிரம்மா ஓபிரம்மா இது தகுமா இது தகுமா …”
ஜெமினி என்ற திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து 2002ல் எழுதிய பாடல்
இரண்டுக்குமே பாடல் தோன்றுய சூழ்நிலை ஒன்று தான்.
நம்ம பேராசான் என்ன சொல்லப்போகிறார் என்று பார்க்கலாம்.
அன்னம் போல அசைந்து வரும் இயல்பினாள்; அதிலே ஓர் அழகு
ஆங்கே நான் நோக்கும்போது கனிந்த ஒரு பார்வை;
சிரித்தாளா இல்லையா என்பதுபோல் ஒரு புன்சிரிப்பு
அதுதான் குறிப்பு – இப்படி பொருள் படுவது போல் வருகிறது அந்தக் குறள்.
“அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினாள் பைய நகும்.” --- குறள் 1098; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
படிப்பதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கு. அப்படியே கடிக்க சாரி, படிக்கக் கூடாது. இது பலாச் சுளை. பல கவிஞர்களுக்கு இது எண்ணச்சுரங்கம்.
இப்படி மாற்றி எழுதிக்குவோம்: ‘அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு’
அசையினாள் = அன்னம் போல அசைந்து வருபவள்; ஆண்டு = ஆங்கு; ஓர் ஏர் உண்டு= ஒரு அழகு இருக்கு; யான் நோக்க = நான் பார்க்க; பசையினாள் = கனிந்த நெஞ்சம் கொண்டவள்; பைய நகும் = மெல்லச் சிரித்து (என்னை கொள்ளை கொள்வாள்)
நீங்களும் கற்பனையை தட்டிவிடுங்க. நாளை சந்திப்போம்.
நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்.
Comments