24/03/2023 (750)
இடும்பைக்கு இடும்பைபடுப்பர் என்றார் குறள் 623ல்.
உறுதியும், விடாமுயற்சியும் உள்ளவன் மட்டுமே அழிவில்லாதவன்!
அதுபோன்ற அழிவில்லாதவனுக்கு அடுக்காக வரும் இடுக்கண்கள், அதாங்க தொடர்ந்துவரும் துன்பங்கள், அவனின் விடாப்பிடியான உறுதியையும், முயற்சிகளையும் பார்த்து, ஆளைவிடு சாமி என்று கதறுமாம்!
“அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.” --- குறள் 625; அதிகாரம் – இடுகணழியாமை
அடுக்கிவரினும் = தொடர்ந்துவரினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் = மன உறுதியிலும், செயல் முயற்சியிலும் அழிவிலாதவன் உற்ற துன்பங்களே துன்பம் அடையும்.
துன்பங்கள் தொடர்ந்துவரினும், மன உறுதியிலும், செயல் முயற்சியிலும் அழிவிலாதவன் உற்ற துன்பங்களே துன்பம் அடையும். அதாவது துன்பங்கள் மறையும் என்கிறார்.
அடுக்கிவரினும் என்றதனால் தனிதனியாக வருவதும் அடங்கும். ‘உம்’ போட்டுள்ளதைக் கவனிக்க. உம்மை முற்றும்மை.
‘கல்லூரிக்கும் போனான்’ என்றால் வேறு எங்கெல்லாமோ சென்றிருக்கிறான் என்று பொருள்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comentários