top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

அடக்கம் அமரருள் ... 121, 122, 31

03/10/2023 (941)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:


நடுவுநிலைமையை அடுத்து அடக்கமுடைமை. அடக்கமுடைமை என்பது மனம், மொழி, மெய்களால் அடங்கி இருப்பது. அஃதாவது, ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது. இது நடுவுநிலைமை வாய்த்தவர்க்கே வயப்படும் என்பதால் அதன்பின் வைக்கப்பட்டது.


மனம் மொழி மெய் நம் கட்டுப்பாட்டில் இருப்பின் எந்த உயரத்திற்கும் செல்லலாம். அவைகளின் கட்டுப்பாட்டில் நாம் இருந்தால் நம்மை அவை எந்த ஆழத்திற்கும் இறக்கிவிடும்.


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.” --- குறள் 121; அதிகாரம் – அடக்கமுடைமை


அமரர் = அழியாப் புகழினை உடையவர்; இருள் = துன்பம்; ஆரிருள் = கொடியத் துன்பம்; அடக்கம் அமரருள் உய்க்கும் = மனம் மொழி மெய்களில் கட்டுப்பாடு இருப்பின் அது ஒருவற்கு அழியாப் புகழ் கொண்ட நல்லவர்களிடையே சேர்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் = அதே சமயம், மனம் மொழி மெய் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது நம்மை மீள முடியாதத் துன்பத்தில் தள்ளிவிடும்.


மனம் மொழி மெய்களில் கட்டுப்பாடு இருப்பின் அது ஒருவற்கு அழியாப் புகழ் கொண்ட நல்லவர்களிடையே சேர்க்கும். அதே சமயம், மனம் மொழி மெய் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது நம்மை மீள முடியாதத் துன்பத்தில் தள்ளிவிடும்.


மனிதன் உயர, வளர, ஓங்கி நிற்க பல காரணிகள் இருக்கலாம். அவற்றுள் சில மிக முக்கியமானது என்போம். அதிலும் ஒன்றே ஒன்று இல்லாவிட்டால் ஆயிரம் இருப்பினும் பயனில்லை. அந்த ஒன்றுதான் அடக்கம் என்கிறார். அதனை ஆங்கிலத்தில் Character என்கிறார்கள்.


“When you lose your money you lose nothing. When you lose your health you lose something. When you lose your character you lose everything.”


“பணத்தை இழக்கும்போது நாம் அவ்வளவாகக் கவலைப்படத் தேவையில்லை. ஆரோக்கியத்தை இழக்கும்போது ஏதோ கொஞ்சம் இழக்கிறோம். ஆனால், நம் குணத்தை இழக்கும்போது எல்லாவற்றையும் இழந்துவிடுவோம்”.


அது எந்த குணம்? அதுதான் நிதானம் தவறாமல் நம்மை ஒரு இருப்பில் வைக்கும் அடக்கம் என்கிறார் நம் பேராசான். அதனை எந்தக் காலத்திலும் பொன் போலப் பாதுகாக்க வேண்டும்.


காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு.” --- குறள் 122; அதிகாரம் – அடக்கமுடைமை


உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை = உயிர்க்கு ஆக்கத்தைவிடச் சிறந்த உண்மைப் பொருள் இல்லை; அடக்கத்தைப் பொருளா காக்க = எனவே, அடக்கம் என்னும் பண்பைப் பொன் போலக் காக்க.


உயிர்க்கு ஆக்கத்தைவிடச் சிறந்த உண்மைப் பொருள் இல்லை. எனவே, அடக்கம் என்னும் பண்பைப் பொன் போலக் காக்க.


உடம்பு அழியும்; ஆனால் உயிர் நிற்கும். அஃதாவது, நம் காலத்திற்குப் பின்னும் செயல்களும் புகழும் நிற்கும். இம்மைக்கு மட்டும் உடல் என்றால் இம்மை மறுமை இரண்டிற்கும் உயிர்.


“உயிர்” என்ற சொல்லை ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தியுள்ளார். “உயிர்க்கு” என்று பதினேழு இடங்களில் பயன்படுத்தியுள்ளார். இந்தக் குறள்களை நாம் கருத்தூன்றிப் பார்க்க வேண்டும் என்றார் ஆசிரியர். அதிலும் முக்கியமானவை மூன்று குறள்கள்.

மேற்கண்ட குறளில் அடக்கம் என்றார்.


மற்ற இரண்டு குறள்கள் நாம் முன்பே பார்த்ததுதான். பாயிரவியலில், 34 ஆவது குறளில் பொதுப்படச் சொன்னார். காண்க 16/02/2021 (30).

அஃதாவது,


சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு. “ ---குறள் 31; அதிகாரம் – அறன் வலியுறுத்தல்


சிறந்த புகழையும் செல்வத்தையும் கொடுக்கும் அறத்தினைக்காட்டிலும் இந்த உயிர்க்கு சிறப்பான பொருள் எதுவாக இருக்க முடியும்? இருக்க முடியாது.

மேலும், இந்த உயிர்க்கு என்ன ஊதியம் கொடுக்கலாம் என்ற கேள்விக்கு ஈதல், இசைபட வாழ்தல் என்றார். காண்க 28/06/2021 (126). அஃதாவது,


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.” --- குறள் 231; அதிகாரம் – புகழ்


இசைபட வாழ்தல் = புகழ் உண்டாக வாழ்தல்;


விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல் அறம். அவ்வளவே.

அடக்கமுடைமை, ஈதல், இசைபட வாழ்தல் முதலியன விதித்தன.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






2 Comments


Unknown member
Oct 03, 2023

மனம் மொழி மெய்களில் கட்டுப்பாடு .... i think மனம் is the most important.. If it is under control the other two would be under control. Is it not ?

Like
Replying to

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் நம் பேராசான். தங்களின் கருத்து மிகச் சரியே.

மனம் ஒடுங்க புலன்கள் கட்டுக்குள்வரும். புலன்கள் ஒடுங்க மனம் ஒடுங்கும். எந்த நிலையில் நாம் இருக்கிறோமோ அதற்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். சிறு வயதில் மனம் நேரடியாக ஒடுங்குவது என்பது சிலருக்கு வாய்க்கலாம் என்றார் என் ஆசிரியர். தங்களின் கருத்துகளுக்கு நன்றி.

Like
Post: Blog2_Post
bottom of page