18/07/2023 (866)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
தாக்க வரும் எதிரிகளின் திறம் அறிந்து வெற்றி மாலைகளை அணிந்து கொண்டு வெற்றிநடை போட வேண்டும் என்றார் குறள் 767 இல். அதாவது, நம்பிக்கையோடு முன் கூட்டியே திட்டமிடுதல் (Action in Advance).
நம்மாளு: இது என்ன ஐயா? சும்மா வெற்றி மாலைகளை அணிந்து கொண்டு வெற்றிநடைப் போட்டால் போதுமா? நம்ம திறம் என்ன, அதற்குரிய ஆற்றல் இருக்க வேண்டாமா?
ஆசிரியர்: வேண்டாம்!
நம்மாளு: வேண்டாமா ... இது என்ன ஐயா, நீங்கள் சொல்வது புரியவில்லை!
ஆசிரியர்: பகைவரை அழிக்கும் திறம், அதற்குரிய ஆற்றல் இதெல்லாம் ஒரு படைக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நம் பேராசான் சொல்கிறார்.
நம்மாளு: அப்படிக் கூடச் சொல்லியிருக்காரா? ஆச்சரியம்தான். சரி, அப்போ எதாவது இருக்கணும் என்று சொல்லியிருக்காரா?
ஆசிரியர்: மகிழ்ச்சி தம்பி. நிச்சயம் சொல்லியிருக்கார். படைக்கு ‘படைதகை’ இருக்க வேண்டும் என்கிறார்.
படைதகை என்றால் படைக்கு நிச்சயம் நீங்காமல் இருக்க வேண்டிய பண்புகள், குணங்கள். அவைகள் இருக்கணும்.
இது வாழ்க்கைப் போராட்டத்திற்கும் பொருந்தும். இது வெற்றி பெற வேண்டும் என இருக்கும் அனைவர்க்குமே ஒரு பொது விதி.
ஒழுக்கமும், விடாமுயற்சியும் (discipline and persistence) நம்மை வெற்றியை நோக்கி நகர்த்தும்.
விடாமுயற்சியின் இடத்தை இந்த உலகில் எதுவும் அடித்துக் கொள்ள முடியாது; திறமையால் முடியுமா என்றால் முடியாது; திறமையுள்ள மனிதர்கள் தோற்பது என்பது நாம் காணக்கூடியதே. மேதைகள் விதிவிலக்கா என்றால் அதுவும் இல்லை. ஏன் என்றால், இந்த உலகத்தில் படித்த முட்டாள்கள்தாம் ஏராளம்!
உறுதியும், விடாமுயற்சியும் வெற்றிகளை அறுவடை செய்யும்; ஒழுக்கம் அதை நீடித்து நிலைக்க வைக்கும். இவைகள்தாம் ஒரு படைக்குத் தகை!
இவைகள் இருந்துவிட்டால் போதும், மற்றவைகள் தாமாக அமையும். வெற்றியும் உறுதி.
சரி, ஒழுக்கத்தை எப்படிப் பெறுவது?
அதற்கு மகாத்மா காந்தி அவர்கள் கீழ்காணுமாறு சொல்கிறார்:
“நாம் எந்த ஒரு அரிய, காலம் கடந்து நிற்கும், செயல்களைச் செய்ய முயலும் போதும் ஆங்கே திடமான மற்றும் இரும்பைப் போல உறுதியான ஒழுக்கம் இருக்க வேண்டும். அந்த ஒழுக்கம் வெறும் கல்வியாலோ, பகுத்தறிவு தர்க்கங்களாலோ வராது. ஒழுக்கம் என்பது சோதனைகள் என்ற உரைகல்லில் பட்டைத் தீட்டப்படுவதால் வெளிப்படவேண்டும்.” என்கிறார்.
“There will have to be rigid and iron discipline before we achieve anything great and enduring, and that discipline will not come by mere academic argument and appeal to reason and logic. Discipline is learnt in the school of adversity.” --- Mahatma Gandhi
அனைவருமே புத்தர்கள்தாம் சோதனைகள் வரும் வரை!
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.” --- குறள் 768; அதிகாரம் – படை மாட்சி
தானை அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் = படைக்கு எதிரிகளை அழிக்கும் திறமும், அதற்குரிய ஆற்றலும் இல்லை என்றாலும்;
படைத் தகையால் பாடு பெறும் தானை = படைக்கு இன்றியமையாக் குணங்களான ஒழுக்கமும், விடாமுயற்சியும் இருந்துவிட்டால் அவைகள் அந்தப் படைக்கு வெற்றியை உறுதி செய்யும்.
படைக்கு எதிரிகளை அழிக்கும் திறமும், அதற்குரிய ஆற்றலும் இல்லை என்றாலும் படைக்கு இன்றியமையாக் குணங்களான ஒழுக்கமும், விடாமுயற்சியும் இருந்துவிட்டால் அவைகள் அந்தப் படைக்கு வெற்றியை உறுதி செய்யும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments