top of page
Search

அடல்வேண்டும் ... 343, 27

28/01/2024 (1058)

அன்பிற்கினியவர்களுக்கு:

ஐந்து பொறிகளால் அனைத்தையும் துய்க்கிறோம். அவை யாவன: வாய், கண், மெய் (சருமம், உடல்), காது, மூக்கு.

 

கண் நேரடியாகப் பார்ப்பது இல்லை. உள்ளே இருக்கின்ற ஏதோ ஓன்றுதான் கண் மூலமாகவும், பிற உறுப்புகள் மூலமாகவும் பார்க்கிறது. பிற பொறிகளும் அவ்வாறே. அவற்றைத் தன் மாத்திரைகள் என்றும் புலன்கள் என்றும் சொல்கிறார்கள். ஐந்து பொறிகளும் செல்லும் புலங்கள் முறையே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

 

இவற்றின் வகைகளைக் காரண காரியத் தொடர்பைக் கொண்டு 96  தத்துவங்களாக விரிக்கிறது  நம் தமிழ்த் தத்துவ மரபு. இவற்றைச் சுருக்கமாக, 27 ஆம் குறளைச் சிந்திக்கும்போது  நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 10/08/2021.

 

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. - 27; - நீத்தார் பெருமை

 

இந்தத் தன் மாத்திரைகளை முழுதுமாக அடக்கி ஆள்பவர்கள் “முற்றும் நீத்தவர்கள்”.

 

நாம் பார்த்துக் கொண்டு இருக்கும், இந்தத் துறவு அதிகாரத்தில் இருப்பவர்கள், முற்றும் நீத்தவர்கள் அல்லர். இவர்கள், இல்லறத்தில் ஒரு நிலையை எய்தி அதன் பின் ஓய்வு எடுக்கும் காலத்தில் மனத்தில் அமைதியோடு இந்த உலகை விட்டு நீங்க முயல்பவர்கள்.

 

சரி, ஏன் இந்த மீள்பார்வை என்றால் ஒரு தெளிவிற்காக! யாருக்கு? எனக்குதான்!

 

துறவு அதிகாரத்தின் மூன்றாம் பாடலில் “ஐந்தன் புலத்தை அடல் வேண்டும்” என்கிறார். அஃதாவது, ஐந்து பொறிகளின் புலன்களை அழித்தல் வேண்டும். அதற்காக, “வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்”. அஃதாவது, தாம் இதுவரை “இது தேவை, அது நான் செய்தது” என்ற பொருள்களின் மேலுள்ள பற்றுகளை எல்லாம் ஓர் ஒழுங்குடன் விடல் வேண்டும் என்கிறார்.

 

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய வெல்லாம் ஒருங்கு. – 343; - துறவு

 

ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற நுகர்ச்சிகளை அழிக்க வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் =அதற்கு ஏதுவாக, அந்த நுகர்ச்சிகளைப் பெறுவதற்கு நாம் உருவாக்கிய பொருள்களின் மேல் உள்ள பற்றுகளை எல்லாம் ஓர் ஒழுங்குடன் விடுதல் வேண்டும்.

 

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற நுகர்ச்சிகளை அழிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக, அந்த நுகர்ச்சிகளைப் பெறுவதற்கு நாம் உருவாக்கிய பொருள்களின் மேல் உள்ள பற்றுகளை எல்லாம் ஓர் ஒழுங்குடன் விடுதல் வேண்டும்.

 

ஒருங்கு என்றால் முறை, ஓழுங்கு, ஒரு சேர என்று பொருள்படும். இந்தக் குறளுக்கு உரை எழுதிய அறிஞர் பெருமக்கள் பலரும் “ஒரு சேர” என்ற பொருளில் உரை கண்டுள்ளார்கள்.

 

நாம் அகந்தையைக் குறித்துச் சிந்தித்தபோது அவை இருவகைப் படும் என்றும், அவை யாவன நான் (அகங்காரம்), எனது (மமகாரம்) என்றும் பார்த்தோம். “யான் – எனது” என்று இந்தச் செருக்குகள் வரும்போது வரும். அவை போகும்போது “எனது – நான்” என்று போகும் என்றும் பார்த்தோம்.

அஃது, எங்ஙனம் என்றால், உள்ளாடையைப் (Vest / Baniyan) போட்டு, மேலாடையைப் (shirt) போடுகிறோம். அவற்றைக் கழட்டும் போது மேலாடையைக் கழற்றி பின்னர் உள்ளாடையைக் கழற்றுகிறோம் என்று வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்கள் கூறிய ஒரு உவமையையும் சுவைத்தோம். காண்க 25/10/2022.

 

பிறந்த குழந்தை அழும். “தான்” இருப்பதை அன்னைக்கும் பிறர்க்கும் உணர்த்தும். பின்னர் அதற்குத் தரும் பொருள்களிடம் “எனது” என்று பற்று வைக்கும். அவை அப்படியே வளரும்.

 

முதுமைப் பருவத்தில் பொருள்களின் மேல் உள்ள நாட்டம் குறையும். தன்னை மட்டும் கவனிக்கும். பின்னர் அதுவும் அழிந்து போகும். இதுதான் உலகப் பொது வழக்கு. இவை நம்மால் முடியாமல் போகும்போது வேறு வழியில்லாமல் நடப்பது.

 

ஆனால், நம் பேராசான் சொல்வது என்னவென்றால், இவ்வியல்பை அறிந்த நீங்கள் தன் முயற்சியால் இவற்றைச் செய்யுங்கள். புத்த பிரான் சொன்னது போல முக்தி அடையுங்கள்  என்கிறார்.

 

புத்த பிரான் என்ன சொன்னார் என்று கேட்கிறீர்களா? காண்க 26/01/2024.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page