28/03/2021 (70)
ஓ வந்தது பெண்ணா?
வானவில்தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா
காதலியே என் மனதை பறித்தது நீதானா
உன் பேரே காதல் தானா
தில்லானா பாட வந்த மானா …
குறள்களையே பார்த்துட்டு இருந்தா களைப்பாயிடுது. அதான், ஒரு மாறுதலுக்கு திரைஇசை பாடல் ஒன்றை யோசனை பண்ணிட்டு இருந்தேன்!
‘அவள் வருவாளா’ங்கிற படத்திலே இருந்து பழனிபாரதி எழுதிய பாடல்!
முதன் முதலா பார்க்கும் போது ஒரு மின்னல் அடிக்குமாம். இவ தான் நம்மாளுன்னு தோனுமாம். அந்த (காதலியின்) அழகே ஒரு வருத்தத்தை உண்டு பண்ணுமாம். கவிஞர்கள் இப்படித்தான் சொல்றாங்க! உங்க அனுபவம் எப்படி?
இங்கே இருந்து திருட்டுத்தனமா ஆரம்பிச்சு அப்புறம் கல்யாணம் முடிச்சு சண்டைகள் போட்டு சமாதானமாகுமாம்!
சரி, இது நம்ம வள்ளுவப்பெருமானுக்குத் தெரியுமான்னு என் ஆசிரியரைக் கேட்டேன்.
அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார், பேராசான் பெரிய ஆளு! ன்னு ஆரம்பிச்சு அவர் சொன்னதை அப்படியே உங்களுக்கு (parcel):
இன்பத்துப்பாலை, இரண்டா, களவியல், கற்பியல்ன்னு பிரிச்சு இருக்காறாம். (களவியலில் திருட்டுத்தனத்தை சொல்லியிருப்பாரோ – என் மைன்ட் வாய்ஸ்; கற்பியலில் ஒழுக்கமா இருக்கனும்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்)
களவியலில் முதல் அதிகாரமே ‘தகை அணங்கு உறுத்தல்’ தான். அணங்குன்னா தேவதை; தகை ன்னா சிறப்பு, அழகுன்னு பொருள். உறுத்தல்ன்னா (கண்ணை உறுத்தறது போல –என் மைன்ட் வாய்ஸ் எப்போ நிக்கும்) வருத்தத்தை கொடுப்பது.
இன்பத்துப்பாலில் முதல் குறள் (1081 வது குறள்) இப்படி ஆரம்பிக்கும்.
“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.” --- குறள் 1081; அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல்
அணங்குகொல் = இவள் தேவதையோ?; ஆய்மயில் = மயில்களிலே ஆகச்சிறந்த மயிலா?; கனங்குழை மாதர் கொல் = பருத்த கூந்தலை உடைய மானுடப் பெண்ணோ? மாலும்என் நெஞ்சு = (என்னன்னு தெரியலையே) என் நெஞ்சு கிடந்து அடிச்சுக்குதே. நகீ மாலும்!
(இந்த குறளைத்தான் நம்ம பழனிபாரதி உல்டா பண்ணியிருப்பாரோ!)
நேரமாயிட்டுது, நாளைக்கு தொடரலாம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentários