13/08/2021 (171)
தமிழிலே உள்ள சொற்களை, பெரும்பான்மை கருதி, பெயர்ச்சொல், வினைச்சொல் என்று பிரிக்கலாம். (சொற்கள் நான்கு வகை: பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச்சொல்)
பெயர்ச் சொல்லை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். அதாவது, காரணப் பெயர், இடுகுறிப் பெயர்.
நான்கு கால்கள் இருப்பதால் அது நாற்காலி என்று அழைக்கப்படுகிறதல்லவா, ஆகையாலே அது காரணப்பெயர். ஒரு கால் குறந்தால் அதுவே முக்காலி ஆகிவிடும். யானை என்று அழைக்கிறோம் அல்லவா, இது இடுகுறிப் பெயர். ஒரு கால் இல்லை என்றால் ‘யனை’ என்று அதனின் பெயர் மாறாது!
சரி, இப்போ எதுக்கு இதுன்னு கேட்கறீங்க அதானே? தேவை இருக்கு. சொல்கிறேன். கொஞ்சம் பொறுங்க.
கடவுள் வாழ்த்து அதிகாரத்திலே இறைவனின் இலக்கணங்களை எடுத்துச் சொன்ன நம் பேராசான், ‘அற ஆழி அந்தணன்’ என்று இறையைக் குறிக்கிறார் என்று பார்த்தோம். ‘அந்தணன்’ என்றால் உள்ளத்திலே கருணை உள்ளவன் என்று பொருள்.
நீத்தார்கள் என்பவர்கள் முற்றும் துறந்தவர்கள். அவர்கள் இறைனிலையை அடைந்தவர்கள். இரண்டற கலந்தவர்கள்.
அது என்ன? இரண்டு அற! ஒன்றாக ஆகிவிட்டார்கள் என்று சொல்லலாமே? என்றால் முடியாது. இரண்டும் வேற, வேறதான், ஆனா இரண்டும் ஒன்றாக தோன்றும். உதாரணம்: பாலும் தண்ணீரும். இரண்டு அற கலந்துவிட்டது. சூடு பண்ணா வேறு, வேறு ஆகிவிடும்.
நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் நீத்தார் பெருமை அதிகாரத்திலே கடைசிக் குறளுக்கு வந்துவிட்டோம். முடிவுரையாக ஒரு குறளைச் சொல்லப் போகிறார் – அதற்குத்தான் இந்த அத்திவாரம். சரி, நாம குறளுக்கு வருவோம்.
“அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”--- குறள் 30; அதிகாரம் – நீத்தார் பெருமை
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்= எல்லா உயிர்களிடத்தும் குளிர்ந்த தன் கருணையைக் கொண்டு இருப்பதால்; அந்தணர் என்போர் அறவோர் = அந்தணர்கள் என்பவர்கள் முற்றும் துறந்து துறவியாக நிற்பவர்கள்
அந்தணர் என்பது காரணப் பெயர். என்ன காரணம்? இறைப் பண்பாகிய கருணையை எய்தியவர்கள் ஆகையால் அந்த இறையின் பெயரையை அவர்களுக்கு ஆக்கி அது ஆகு பெயராகிறது! இது ஒரு காலும் பரம்பரைப் பெயர் ஆகாது என்பதையும் குறிக்கிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments