29/12/2022 (665)
குடியும், கோலும், கோனும் காரண காரிய சுழற்சி போல!
ஔவைப் பெருந்தகையின் பாடல், நமக்கெல்லாம் தெரிந்தப் பாடல்தான்:
“வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்” --- ஔவைப் பெருந்தகை
விவசாயி உயர்ந்தால், குடி மக்கள் உயர்வார்கள்; குடி மக்கள் உயர்ந்தால் செங்கோன்மை எளிது; செங்கோன்மை உயர்ந்தால் தலைவர்கள் மிகவும் மதிக்கப் படுவார்கள்.
இது கீழிருந்து மேல் நோக்கி வளரும் முறை. (Bottom-up approach)
மதிக்கப்படும் தலைமை அமைந்தால், செங்கோல் இருக்கும்; செங்கோல் இருந்தால் நன் மக்கள் பெருகுவர். மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி! இது Top-down approach.
தற்காலத்திற்கு இரண்டு முறைகளுமே தேவைப்படுகின்றது.
ஆகையால், நாட்டின் எல்லா வளர்ச்சிக் கூறியீடுகளுக்கும் அரசின் பங்கும் நமது பங்கும் இணைய வேண்டும்.
அரசின் முக்கியமான வேலை செங்கோலைக் கடைபிடிப்பதுதான். அதை, அரசு மட்டுமே செய்ய முடியும். இல்லை என்றால் எல்லாமே அடிபட்டுப் போகும்.
நீதி, நியாயம், அறம், தருமம் எல்லாவற்றிற்கும் அரசின் செங்கோன்மை அவசியம்.
செங்கோல் உயர செம்மை பெருகும்!
இது நிற்க.
நாம் முன்பு ஒரு முறை பார்த்தக் குறளைப் பார்த்துவிட்டு இன்றைய செங்கோன்மைக் குறளுக்குச் செல்வோம். காண்க 13/08/2021 (171).
“அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”--- குறள் 30; அதிகாரம் – நீத்தார் பெருமை
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்= எல்லா உயிர்களிடத்தும் குளிர்ந்த தன் கருணையைக் கொண்டு இருப்பதால்; அந்தணர் என்போர் அறவோர் = அந்தணர்கள் என்பவர்கள் முற்றும் துறந்து துறவியாக நிற்பவர்கள்
அந்தணர்கள் சொல்லும் அறநூற்களுக்கும் , ஏன் அறத்திற்குமே முதல் எது என்றால், அதாவது capital எது என்றால், தலைமையினது செங்கோல்தான் என்கிறார் நம் பேராசான்.
“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னன் கோல்.” --- குறள் 543; அதிகாரம் – செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது = அற நூல்களுக்கும், அறத்திற்கும் காரணமாய் நிற்பது; மன்னன் கோல் = தலைமையின் செங்கோன்மை.
செங்கோன்மையைத்தான் இப்போது ஐக்கியநாடுகளின் சபையும் வலியுறுத்துகிறது. இதை GOVERNANACE என்று அழைக்கிறார்கள். நமது ஒவ்வொரு செயலிலும் மூன்று காரணிகளை வலியுறுத்துகிறார்கள். அவையாவன Environmental, Social and Governance. சுருக்கமாக ESG.
வரும் தலைமுறைகளுக்கு மட்டுமல்ல, வாழுகின்ற தலைமுறைகளுக்கும் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் கவனிக்க வேண்டியது இந்த மூன்று.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தொலைநோக்கு சிந்தனை, ஒட்டுமொத்த சமுதாய உயர்வு மற்றும் திறந்த நிர்வாகம்.
மேலும் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Opmerkingen