11/05/2024 (1162)
அன்பிற்கினியவர்களுக்கு:
யார் மாட்டும் காட்சிக்கு எளியனாக இருப்பது முதல் பண்பு.
அடுத்து அன்புடைமை என்கிறார். அன்பு இல்லை என்றால் எதுவும் இல்லை. இதனைத் திருக்குறளில் திரும்பத் திரும்ப வலியுறுத்துவார்.
அன்புடைமையைத் தொடர்ந்து ஆன்ற குடி பிறத்தல். பிறப்பொக்கும் என்றவர் குடி பிறத்தல் என்கிறாரே என்ற ஐயம் தோன்றலாம். ஐயப்படத் தேவையில்லை. நல்ல குடியை நாமே உருவாக்கலாம்!
குடி என்றால் என்னவென்று குடிமை அதிகாரத்தில் சொல்லிய கருத்துகளைக் கவனத்தில் வைக்க. சுருக்கமாக, குறள் 133 இல், ஒழுக்கம் உடைமை குடிமை என்றார். காண்க 06/09/2021. மீள்பார்வைக்காக:
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். - 133; - ஒழுக்கமுடைமை
சரி, நாம் பண்புடைமைக்கு வருவோம்.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. – 992; - பண்புடைமை
அன்புடைமை = பிறர் மேல் அன்பு காட்டுதல்; ஆன்ற குடிப்பிறத்தல் = ஆழ்ந்து அகன்ற அறிவும் ஒழுக்கமும் உள்ளவர்களிடையே இருத்தல்; இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு = ஆகிய இரண்டும் பண்புடைமையின் முக்கியமான கூறுகள் என்று வரையறுக்கப்படும். இஃதே, உலக வழக்கு.
பிறர் மேல் அன்பு காட்டுதல், ஆழ்ந்து அகன்ற அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்களிடையே இருத்தல் ஆகிய இரண்டும் பண்புடைமையின் முக்கியமான கூறுகள் என்று வரையறுக்கப்படும். இஃதே, உலக வழக்கு.
தூதுவனுக்குப் பண்புகளாகச் சொல்லிக் கொண்டு வரும்போது இதே கருத்தை வலியுறுத்தினார். காண்க 03/10/2021. மீள்பார்வைக்காக:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - 681; - தூது
இந்தக் குறளினை நாம் சிந்தித்த பொழுது “ஆன்ற குடிப்பிறத்தல்” என்பதற்குக் “குறையில்லாக் குடும்பத்தில் பிறந்திருத்தல்” என்று சிந்தித்தோம். இல்லையென்றால், அவனின் குடும்பத்தினால் அவனுக்கு ஒரு தாழ்வு வந்துவிடுமோ என்ற அச்சம் தலைவனின் மனத்தில் இருக்கலாம் என்றவாறு சிந்தித்தோம்.
மீள்பார்வையில், அந்த அச்சம் சரியானதா என்ற கேள்வியும் எழுகிறது. சேற்றில்தானே செந்தாமரை மலர்கிறது.
… எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே,
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே …
இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன் அதில் பட்டு துகிலுடன்
அன்னச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் … கவிஞர் புலமைப்பித்தன்; நீதிக்குத் தலை வணங்கு, 1976
மீள்பார்வையில், இக்குறளுக்கும், ஆழ்ந்து அகன்ற அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்கள் இடையே இருத்தல் என்பதே பொருத்தமாக இருக்கலாம்.
தொடர்ந்து பேசுவோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்
Comments