top of page
Search

அன்புநாண் ஒப்புரவு ... 983, 984, 05/05/2024

05/05/2024 (1156)

அன்பிற்கினியவர்களுக்கு:

நல்ல குணங்களைப் பட்டியலிட முடியுமா?

இதோ சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள் என்கிறார் நம் பேராசான்.

 

முதலில் அன்பு! எதற்கும் இதுவே அடிப்படை; இரண்டாவதாகப் பழிக்கு அஞ்சுதல்; மூன்றாவதாக, இல்லாதவர்களுக்குத் தேவையறிந்து கொடுத்தல்; நான்காவதாக, அனைத்து உயிர்களின் மேலும் இரக்கம்; ஐந்தாவதாகப் பொய்மை கலவாத, தீமை பயவாத சொல்லலும் ஆகும். இந்த ஐந்து குணங்களை உங்களுடையதாக்குங்கள் என்கிறார்.

 

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ

டைந்துசால் பூன்றிய தூண். – 983; - சான்றாண்மை

 

அன்பு = அன்புடைமையும்; நாண் = பழிக்கு அஞ்சுதலும்; ஒப்புரவு = இல்லாதவர்களுக்குத் தேவையறிந்து கொடுத்தலும்; கண்ணோட்டம் = அனைத்து உயிர்களின் மேல் இரக்கம் கொள்ளுதலும்; வாய்மையொடு =  பொய்மை கலவாத, தீமை பயவாத சொல்லும் செயலும் இந்த ; ஐந்து = ஐந்து பண்புகளும்; சால்பு ஊன்றிய தூண் = சால்பு என்னும் சான்றாண்மையைத் தாங்கி நிற்கும் தூண்களாகும்.

 

அன்புடைமையும், பழிக்கு அஞ்சுதலும், இல்லாதவர்களுக்குத் தேவையறிந்து கொடுத்தலும், அனைத்து உயிர்களின் மேல் இரக்கம் கொள்ளுதலும், பொய்மை கலவாத, தீமை பயவாத சொல்லும் செயலும் இந்த  ஐந்து பண்புகளும், சால்பு என்னும் சான்றாண்மையைத் தாங்கி நிற்கும் தூண்களாகும்.

 

விதித்தன கூறினார் குறள் 983 இல்; விலக்கியன சொல்கிறார் அடுத்து வரும் குறளில்.

 

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு. – 984; - சான்றாண்மை

 

நோன்மை கொல்லா நலத்தது = நோன்பு, தவம் என்பனவெல்லாம் பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பின் சிறப்பு பெறும்; பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு = அது போலப் பிறர்க்குத் தீங்கு விளைவிப்பனவற்றைச் சொல்லாமல் இருப்பது சான்றாண்மைக்குச் சிறப்பு சேர்க்கும்.

 

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்: தவம் செய்வது பிற உயிரைக் கொல்லாமை என்ற கொள்கையைச் சிறப்பாகக் கொண்டது; சான்றாண்மையோ பிறருக்குத் தீமை உண்டாகக்கூடிய எதையும் வாயாலும் சொல்லாமை என்ற கொள்கையைச் சிறப்பாகக் கொண்டது.  

 

அஃதாவது, பிறர்க்குத் தீமை விளைவிக்காதே.

 

புலவர் குழந்தை: நோன்பு நோற்றல் ஓருயிரையும் கொல்லாத அறத்தின்பாலது; அது போல, சால்பு பிறர் குற்றங்களைச் சொல்லாத குணத்தின் பாலது.

 

அஃதாவது, பிறரிடம் குறை காணாதே.

 

எதற்காகப் பிறர் குற்றங்களைச் சொல்லாதே? எந்த குற்றங்களைச் சொல்லாதே? யாரிடம் சொல்லாதே? என்பன போன்ற கேள்விகளெல்லாம் எழுந்தன. அவரவர் தம்மட்டில் பிழைகளைச் செய்து கொண்டிருப்பதனைக் காணாமல் செல்வதா என்றும் குழப்பம்.

 

இவற்றைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, செ.யாக்கோபு (எ) செ.யா. திருந்திளையன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட திருக்குறள் – திருத்த உரையில் என்ன சொல்லியிருக்கிறார் என்று எடுத்து வாசித்த பொழுது அவர் ஓர் அழகான விளக்கத்தை அளித்திருக்கிறார். அஃதாவது, நமக்கு ஒருவர் துன்பம் இழைப்பினும் அந்தச் செயலை மற்றவர்களிடம் சொல்லாமலே கடந்து செல்வது என்கிறார்.

 

செ.யாக்கோபு (எ) செ.யா. திருந்திளையன்: நோற்றல் என்பது கொல்லாமை என்னும் சிறப்பின்பாற்பட்டது. பிறர் தமக்கிழைத்த தீமையைச் சொல்லிக்கூட வருந்தாத சிறப்பினுடையது சான்றாண்மை.

 

அஃதாவது, பிறர் நமக்கிழைத்த தீமையைப் பெரிதுபடுத்தி அதனை மற்றவரிடம் சொல்லி அவர்களைத் தாழ்த்தமை.

 

மேற்கண்ட மூன்று கருத்துகளையுமே நாம் எடுத்துக் கொள்ளலாம். குறையும் காண வேண்டாம்; ஒருவர் நமக்குத் துன்பம் விளைவித்தால் அதனைப் பிறரிடம் பரப்பாமலும் இருக்கலாம்; நாமும் யார்க்கும் எந்த தீங்கும் சொல்லாமலும் செய்யாமலும் இருக்கலாம்.

 

எனவே, இந்தக் குறளுக்கு உரையாக:

 

நோன்பு, தவம் என்பனவெல்லாம் பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பின் சிறப்பு பெறும். அது போலப் பிறர்க்குத் தீங்கு விளைவிப்பனவற்றைச் சொல்லாமல் இருப்பதும், பிறர் நமக்கிழைத்தத் தீமைகளை மற்றவரிடம் சொல்லி அவர்களைத் தாழ்த்தமையும், பிறரிடம் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்திப் பேசாமையும்  சான்றாண்மைக்குச் சிறப்பு சேர்க்கும்.

 

முடியமா என்கிறீர்களா? முயலுவோம். முயற்சி திருவினையாக்கும்!

 

நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comentários


Post: Blog2_Post
bottom of page