06/01/2023 (673)
செங்கோன்மையைத் (55ஆவது அதிகாரம்) தொடர்ந்து, அதற்கு மாறுபாடான கொடுங்கோன்மையை(56ஆவது) வைக்கிறார். இது நிற்க.
ஒரு மனிதன் செய்யும் குற்றங்களில், கொடிய குற்றமாகக் கருதப்படுவது சக மனிதர்களைக் கொலை செய்வது.
நம் பேராசானைக் கேட்டால் எந்த ஒரு உயிரைக் கொல்வதையும் தவிர்க்க வேண்டும் என்பார்.
‘கூறியது கூறல்’ குற்றம் என்றாலும், ரொம்ப நாளானதாலே மறந்தால் போல் இருக்கிறது. அதனால் ஒரு மீள்பார்வை. அது மட்டுமல்லாமல், நம்முடன் சமிபத்தில் வந்து இணைந்தவர்களும் இருப்பதால் அவர்களுக்கும் இது பயனளிக்கலாம். பொறுத்தறுள்க.
கல்வியின் பயன் அறிவு, அறிவிலிருந்து ஒழுக்கம், அதிலும் அன்பு, அன்பிலிருந்து அருள் இப்படித்தான் வளர்ச்சி இருக்க வேண்டும். அன்பு என்பது தொடர்புடையாரிடம் காட்டுவது. அருள் என்பது அனைத்து உயிர்களிடமும் செலுத்துவது. காண்க 30/01/2021, 31/01/2021.
வாழ்க்கையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கறாங்க என்பதையும் நாம் பார்த்தோம். காண்க 25/02/2021. ஒன்று – கற்கும் பருவம், இரண்டு – வாழும் பருவம், மூன்று – ஒய்வு எடுக்கும் பருவம், நான்கு – விலகும் பருவம்.
இதைத்தான், பிரம்மச்சரியம், கிருகஹஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும் சந்நியாஸம்ன்னு நாலு ஆச்சிரமங்கள்ன்னு சமஸ்கிருத்ததிலே சொல்றாங்க என்பதையும் பார்த்துள்ளோம்.
இல்லறவியலில் அன்பை வலியுறுத்துவார். உதாரணத்திற்கு ஒரு குறள். காண்க 13/03/2021:
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.” – குறள் 80; அதிகாரம் – அன்புடைமை
உயிர் உடம்பில் இருக்கு என்பதையே அன்பைக் கொண்டுத்தான் அளக்கனும். அன்பு இல்லை என்றால் அந்த உடம்பு சும்மா தோல் போர்த்திய ஒரு உடம்புன்னு நினைக்க வேண்டியதுதான்!
இல்லறவியலின் அடுத்த படிநிலை துறவறம். அங்கே, அன்பு அருளாக உயர்ந்து இருக்க வேண்டும்.
துறவறவியலில் ‘தவம்’ என்று ஒரு அதிகாரம் (27ஆவது). அதில் முதல் பாடல்:
“உற்றநோய் நோன்றல் உயிருக்கு ஊறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.” --- குறள் 261; அதிகாரம் – தவம்
உற்றநோய் நோன்றல் = நமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, அதாவது கோபப் படாமல் இருப்பது; உயிருக்கு ஊறுகண் செய்யாமை = பிற உயிர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் இருப்பது; அற்றே தவத்திற்கு உரு = அவ்வளவுதான் தவம் என்பது; உரு = இயல்பு.
தவம் என்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டார். வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்; கோபப்படாமல் இருங்கள். அடுத்து, பிற உயிர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் இருங்கள். இப்படி இருந்தாலே நீங்கள் தவம் புரிகிறீர்கள் என்று பொருள்.
ஆக, கொலை என்பது கொடுமையின் உச்சம். தனி மனிதர்களுக்கே இவ்வாறெனில், அரசனுக்கு அல்லது தலைமைக்கு இது வாளின் மேல் நடப்பது போல. இதைத் தெளிவுபடுத்தத்தான் செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்கள்.
அப்பாடா, ஒரு வழியாக மீண்டும் விட்ட இடத்திற்கு வந்து விட்டேன்.
நாளை தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
முந்தையப் பதிவுகளுக்கு காண்க www.easythirukkural.com
Comentarios