04/11/2022 (610)
எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ‘ஓவிட்’ (Ovid) என்ற ரோமானிய தேசத்து பெரும் புலவர் “Metamorphoses” (உருமாற்றங்கள்) என்ற ஒரு காப்பியத்தைச் சமைத்தார். அதிலே, ஒரு பாத்திரம் (character). அந்தப் பாத்திரம் தன்னைத் தானே அபரிமிதமாக வியந்து கொள்ளும். தான் மட்டும்தான் அழகு. மற்றவர்கள் யாரும் எனக்கு இணை இல்லை என்று இறுமாந்து இருக்கும். தன் உருவத்தை தண்ணீரில் கண்டு அதையே காதலித்தது. பிறகு தான் காதலிக்கும் உருவம் தன்னை காதலிக்க இயலாது என்று ஒரு நாள் கண்டு கொள்ளும். அதன் கதை அன்றோடு முடிந்துவிடும்.
அந்தப் பாத்திரம் ஒரு பெண் என்று நினைத்திருப்பீர்களானால் அது தான் இல்லை. அது ஒரு ஆண். அவனின் பெயர் தான் “நார்சிசஸ்” (Narcissus).
குறியீடுகளால் குறிப்புகளை உணர்த்துபவர்கள்தான் பெரும் புலவர்கள், பேராசான்கள்.
நாம் இப்போது ‘நார்சிஸிஸ்ட்’ (Narcissist) என்று சிலரை அழைக்கிறோமே, அந்தப் பெயர் வந்தது அந்தக் கதா பாத்திரத்தால் தான். இது ஒரு நோயாக கண்டறியப் பட்டு, அந்த நோயை, மருத்துவ உலகம் Narcissistic personality disorder (NPD) என்று அழைக்கிறது. இது குறித்து முன்பும் சிந்தித்துள்ளோம். காண்க 12/01/2022 (321), 30/05/2022 (458). சுருங்கச் சொன்னால் “தன்னை மிகுந்து வியக்கும், பிறரை ஒரு பொருட்டாக மதிக்காது”. இது ஒரு மோசமான நிலைமை.
சரி, இந்தக் கதை இப்போது எதற்கு என்கிறிர்களா? இதோ வருகிறேன். அதற்கு முன் திரிகடுகத்தில் இருந்து ஒரு பாடல்.
தனக்கு வாய்த்துள்ள வலிமைகளை, தானே எப்படி ஒன்றுமில்லாமல் செய்து விடுவது எப்படி? என்றக் கேள்வியை நல் ஆதனார் பெருமானிடம் கேட்டீருப்பார்கள் போல! அதுதான் இந்தப் பாடலுக்கு காரணமாக இருந்திருக்கும்.
“தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய பல் பொருள் வெஃகுஞ் சிறுமையும், - இம் மூன்றும் செல்வம் உடைக்கும் படை.” பாடல் 38; திரிகடுகம் (பதிணென் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று); ஆசிரியர் நல் ஆதனார்
தன்னைத்தானே வியந்து கொள்ளுதலும், கொஞ்சமும் அசராமல் வீணாக மற்றவர்களிடம் கோபத்தை வளர்த்தலும், எல்லாம் எனக்குத்தான் என்று எல்லாவற்றையும் சுருட்டி வைத்துக் கொள்ளுவதும் ஆக இம் மூன்றும் செல்வத்தை உடைக்கும் படை, அதாவது, ‘தன் வலிமை’யை உடைக்கும் படை என்கிறார்.
இந்த மாதிரி வாழ்ந்தவன்தான் நார்சிஸிஸ்ட்!
சரி, குறள் எங்கே என்கிறீர்களா? உங்கள் குறள் ஆர்வத்தைத் தடுக்க முடியுமா? இதோ:
மற்றவர்களோடு இணைந்து இருக்கமாட்டான், தன் உயரம் எது என்றும் உணர்ந்திருக்க மாட்டான், ஆனால், தன்னை தானே பெரிய ஆளுன்னு சொல்லிட்டு திரிவான். அவன் என்ன ஆவான்னு நினக்கறீங்க?
அதைத்தான் நம் பேராசான் இப்படிச் சொல்கிறார்:
“அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.” குறள் – 474; அதிகாரம் – வலியறிதல்
அமைந்தாங்கு ஒழுகான் = தனக்கு அமைந்துள்ள அருட் கொடைகளான சுற்றம், நட்பு, துணை எதையும் ஒழுங்காக வைத்துக் கொள்ள மாட்டான்; அளவறியான் = தன் உயரம் என்னவென்று அறிந்திருக்க மாட்டான்; தன்னை வியந்தான் = என்னைப்போல யாரு இந்த உலக்கத்திலே என்று வியந்து கொண்டிருப்பான்; விரைந்து கெடும் = அந்த மாதிரி இருப்பவனுக்கு, ரொம்ப சீக்கிரமே ஒன்றும் இல்லாமல் போகும்.
‘ன்’ விகுதியை தொடர்ந்து உபயோகித்தவர், இறுதியில் ‘ம்’ விகுதி போட்டு முடித்திருப்பதில் இருந்து நம் பேராசானின் கருணை வெளிப்படுகிறது.
ஐயோன்னு போவான்னு சொல்லியிருக்கலாம். ஆனால், ஒன்றும் இல்லாமல் போகும் என்று அன்போடு எடுத்துச் சொல்கிறார்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments