02/06/2024 (1184)
அன்பிற்கினியவர்களுக்கு:
எல்லையில் இருக்கும் விரர்கள் நாட்டிற்கு எப்படி முக்கியமோ அவர்களைப்போல் நம் குடியை உயர்த்த கடுமையாக உழைப்பவர்களும் நம் பாராட்டிற்கு உரியவர்களே என்கிறார்.
அமரகத்து வன்கண்னார் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. – 1027; - குடி செயல் வகை
அமரகத்து வன்கண்னார் போல = ஒரு போர் என்று வந்துவிட்டால் தம் நாட்டிற்காகத் தயங்காமல் முன்னின்று போராடும் கள வீரர்களை ஒரு நாடு எப்படிப் பாராட்டித் தலைமேல் வைத்துக் கொண்டாடுமோ அது போல; தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை = தம் குடிக்கு வரும் சோதனைகளுக்கு அஞ்சாமல் முன்னின்று அவற்றைக் களைய போராடுபவர்கள் மீதே புகழ் நிலைக்கும்.
ஒரு போர் என்று வந்துவிட்டால் தம் நாட்டிற்காகத் தயங்காமல் முன்னின்று போராடும் கள வீரர்களை ஒரு நாடு எப்படிப் பாராட்டித் தலைமேல் வைத்துக் கொண்டாடுமோ அது போலத் தம் குடிக்கு வரும் சோதனைகளுக்கு அஞ்சாமல் முன்னின்று அவற்றைக் களைய போராடுபவர்கள் மீதே புகழ் நிலைக்கும்.
குடியை உயர்த்த நினைப்பவர் காலம் நேரம் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டே இருப்பார்கள் என்றார் குறள் 1028 இல். காண்க 03/04/2021. மீள்பார்வைக்காக:
குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும். - 1028; - குடி செயல் வகை
குடியை உயர்த்த உழைப்பவர்க்கு உறுதுணையாக ஒரு அறிவுரையைத் தந்துள்ளார் நம் பேராசான் குறள் 1029 இல். மீள்பார்வைக்காக:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு. -1029; - குடி செயல் வகை
குற்றத்தை மறைக்க வேண்டா. அதனையும் ஏற்றுக் கொண்டு மேலும் அவ்வாறு நிகழாமல் தடுப்பவன்தான் தலைவனாகக் காலம் கடந்தும் வாழலாம் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios