04/12/2023 (1003)
அன்பிற்கினியவர்களுக்கு:
துறவறம் சொல்லத் தொடங்குகிறார்.
துறவறம் என்பது மரவுரி தரித்துக் காட்டுக்கு ஏகிக் கடுமையானத் தவங்கள் இயற்றுவதில்லை நம் பேராசான் சொல்வது. இங்கே, துறவறம் என்பது நமது உலக வாழ்வியலில் ஒரு அங்கம். இல்லறம், ஒரு படிநிலைக்குச் சென்றபின் ஓய்வு எடுத்துக் கொள்ள ஒதுங்கிவிட வேண்டிய காலத்தைக் குறிப்பது.
அதற்குத்தான் அரசுகளும் வயது 60 ஆகிவிட்டால் ஓய்வளிக்கிறார்கள். மனித வாழ்வின் நான்கு பகுதிகளை நாம் முன்பே சிந்தித்துள்ளோம். அவை யாவன: கற்கும் பருவம், வாழும் பருவம், ஓய்வு எடுக்கும் பருவம், விலகும் பருவம். இவற்றைப் பெரும்பான்மைக் கருதி இல்லறவியல், துறவறவியல் என இரு இயல்களாகப் பிரித்து அதன் அறக்கூறுகளைச் சொல்கிறார் நம் பேராசான். இவ்விரண்டு இயல்களை இணைத்து அறத்துப்பால் என்றார். அஃதாவது, வாழ்க்கைக்கு இவை மூல அறங்கள். ஏனைய இரண்டு பால்களும், அஃதாவது, பொருட்பாலும், காமத்துப் பாலும் சார்ப்பு அறங்களாகும்.
இந்தத் துறவறவியலையும் விரதம், ஞானம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறார். இங்கு விரதம் என்பது தமது தகுதிக்கு ஏற்றவாறு இந்த அறங்களைச் செய்வேன், இந்த அறமல்லாதவற்றைத் தவிர்ப்பேன் என முடிவு செய்து கொண்டு அதன் வழி நிற்றல். இவற்றை முதல் ஒன்பது அதிகாரங்களில் கூறுகிறார். அவை யாவன: 25. அருளுடைமை; 26. புலால் மறுத்தல்; 27. தவம்; 28. கூடா ஒழுக்கம்; 29. கள்ளாமை; 30. வாய்மை; 31.வெகுளாமை; 32. இன்னாசெய்யாமை; 33. கொல்லாமை.
இவற்றுள் கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய ஐந்து அதிகாரங்களும் இல்லறத்தானுக்கும் பொருந்தும் என்பதையும் சிந்தித்துள்ளோம். காண்க 06/11/2023 (975).
விரதங்களை ஒழுக நமக்கு அறிவு (Knowledge) தோன்றும். அந்த அறிவு ஞானமாக (wisdom) மாறும். அவற்றுள் முக்கியமானவை: நிலையாமை, துறவு, மெய்யுணர்வு, அவா அறுத்தல். இவற்றை நான்கு அதிகாரங்களாக்கி அறத்துப்பாலை நிறைவு செய்கிறார்.
இல்லறத்தில் அன்பு பெருகி அதன் வளர்ச்சியாக அருள் தோன்ற வேண்டும். அன்பு என்பது நமக்குத் தொடர்புடையோரிடம் செலுத்துவது. அருள் என்பது அனைத்து உயிர்களிடமும் கனிவு செலுத்துவது. இது துறவறத்திற்கு முதன்மை என்பதால் முதலில் அருள் உடைமை சொல்கிறார்.
நீண்ட முன்னுரையாகிவிட்டது. பொறுக்க. நாம் அருள் உடைமைக்குள் நுழைவோம். அதன் முதல் பாடல் ஏற்கெனவே பார்த்த பாடல்தான், காண்க 06/03/2021 (48). மீள்பார்வைக்காக:
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள. – 241; - அருள் உடைமை
பூரியார் = இழிந்தார்; செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் = எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் செல்வங்களுள் எல்லாம் சிறந்த செல்வம் என்பது அருளால் வரும் செல்வமே; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள = பொருளால் வரும் பிற செல்வங்கள் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். இழிந்தாரிடமும் இருக்கலாம்.
எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் செல்வங்களுள் எல்லாம் சிறந்த செல்வம் என்பது அருளால் வரும் செல்வமே. பொருளால் வரும் பிற செல்வங்கள் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். இழிந்தாரிடமும் இருக்கலாம்.
எனவே, அருள் செல்வம் வேண்டப்படுவது. பொருள் செல்வம் மட்டுமே சிறப்பு இல்லை என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments