15/03/2023 (741)
‘தணிகாசலம்’ என்ற பெயருக்கு பொருள் என்ன?
ஆமாம், இது ஒரு முக்கியமான கேள்வியா? குறளைப் பார்ப்பதைவிட்டு விட்டு இது என்ன ஆராய்ச்சி என்று நீங்கள் கேட்கலாம்.
உங்கள் குறள் ஆர்வத்திற்கு தலை வணங்குகிறேன். கொஞ்சம் பொறுமை. குறளுக்கு போய் விடலாம். ஒன்றுக்கு மூன்று குறள்கள் இன்று – போதுமா?
சலம் என்றால் சஞ்சலம், சபலம், விருப்பு – வெறுப்பு, வஞ்சனை. நாம் ஏற்கனவே இந்தச் சொல்லைப் பற்றியும், இந்தச் சொல்லை நம் பேராசான் இரு முறை பயன் படுத்தியுள்ளதையும் பார்த்துள்ளோம். காண்க 28/07/2022 (517) மீள்பார்வைக்காக:
“சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்தும் என்பார்.”---குறள் 956; அதிகாரம் – குடிமை
குற்றமில்லாக் குலத்தில் வாழ்கிறேன் என்று சொல்பவர்கள், வஞ்சனை எண்ணம் கொண்டு கீழானச் செயல்களைச் செய்யார்.
“சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்து இரீஇ யற்று.” --- குறள் 660; அதிகாரம் – வினைத்தூய்மை
பிறரை ஏமாற்றி பொருள் சேர்த்து பத்திரமாக மறைத்து வைத்தல், பச்சை மண்குடத்தில் நீரை விட்டு பத்திரமாக இருக்கும் என்பதைப் போல!
இது நிற்க. நாம நம்ம தணிகாசலனைப் பார்ப்போம்.
சலன் என்றால் சஞ்சலம் உடையவன்; அசலன் என்றால் அசராமல் இருப்பவன்; தணிகை என்றால் குன்று. ஆக மொத்தம் அசராமல் இருக்கும் குணக் குன்றுதான் தணிகாசலம்! எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே!
‘அ’ என்ற எழுத்து அசலனில் எதிர்மறைப் பொருளைத்தரும். நீதி X அநீதி; சைவம் X அசைவம் என்பதைப் போல!
அதே ‘அ’ என்ற எழுத்து அழகு, சிறப்பு, பெருமை, அதிகம் என்ற பொருளையும் தரும்!
அம்மா என்றால் சிறந்த அழகி!
‘சாவு’ என்றால் ஒடுங்கிவிடுவது. அசாவு என்றால் ரொம்பவே அடங்கிவிடுவது.
(‘சாவு’ என்றால் ஆள் காலி என்று இப்போது வழக்கில் உள்ளது.)
‘இல்லை’ என்பதற்கு ‘இல்லாமை’ எதிர் போல ‘அசாவு’ என்பதற்கு எதிர் ‘அசாவாமை’. இந்த அசாவாமையை ஒரே ஒரு குறளில் மட்டும் பயன்படுத்தியுள்ளார் நம் பேராசான்.
அசாவாமை என்றால் ரொம்பவே ஒடுங்கி போகாம இருப்பது. எப்போது நாம் ரொம்பவே ஒடுங்குவோம்?
ஓரு செயல் மலை போல இருந்தால், மிக மிக கடினமாக இருந்தால் நமக்கு மிக அதிகமான சோர்வும் தளர்ச்சியும் வரலாம். நம் பேராசான் அதையும் கவனித்து சொல்லியிருக்கார். அப்போதும் பெருமை எது தெரியுமா என்று கேட்கிறார்.
பெருமை என்பது எப்போதும் முயற்சியில் உள்ளது என்கிறார்.
“அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.” --- குறள் 611; அதிகாரம் – ஆள்வினை உடைமை
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் = நம்மால் இது இயலுமா என்று எண்ணி ரொம்பவே தளர்ந்திடாம இருக்கனும்; முயற்சி பெருமை தரும் = முயற்சிதான் பெருமை தரும்.
செயல் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சோர்ந்துவிடாமல் முயலுவதுதான் பெருமை. அதுதான் ஆள்வினை உடைமை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
தணிகாசலம் பெயர் விளக்கம் அருமை!! அசாவாமை சரியாக புரியவில்லை... நான் இக்கட்டுரையை படிப்பதற்கு முன் அசாவாமை என்றால் அசையாத உறுதி என்று எண்ணி இருந்தேன். இக்கட்டுரையில் அசாவாமை என்பதற்கு எதிர்மறையான வேறு பொருள் கூறியுள்ளீர்கள்...