18/08/2023 (896)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நேற்று சோரும் என்றால் தளரும் என்று பார்த்தோம். இன்று ஒரு சொல்லைப் பார்ப்போம். அதுதான் “மிறை”. இந்தச் சொல்லை ஒரே ஒரு பாடலில் மட்டும் பயன்படுத்தியுள்ளார்.
மிறை என்றால் வருத்தம், துன்பம் என்று பொருளாம். சரி இதுவெல்லாம் எதற்கு என்கிறீர்களா? என்ன செய்ய? திரு. புல்லறிவாளரைக் கண்டுபிடிக்கத் தேவைப்படுகிறது என்கிறார் நம் பேராசான்.
கணம் புல்லறிவாளரிடம் அருமறைகளும் சோர்ந்துவிடுமாம்! “என்ன இவர் எப்படி எடுத்துச் சொன்னாலும் நம் வழிக்கு வருவதில்லையே” என்று சோருமாம்!
அரிய, ஆழமான, உண்மைப் பொருள்களை உரைக்கும் அருமறைக்கே சோர்வு! அதுதாங்க வளையல் தளர்ந்தாற் போல.
அருமறையும் தன்பாட்டுக்கு இருந்து கொள்ளும். அதைக் கூர்ந்து கவனித்து அது எடுத்துரைக்கும் கருத்துகளைக் கற்க திரு. புல்லறிவாளார்தாம் சோம்பித் திரிவார்! அவரின் சோர்வை அருமறைமேல் ஏற்றினார்.
சரி அதனால் என்ன ஆகும்? அது கணம் புல்லறிவாளர் அவருக்கே செய்து கொள்ளும் பெருமிறையாம். அதாங்க பெரிய துன்பமாம்.
“அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.” --- குறள் 847; அதிகாரம் – புல்லறிவாண்மை
மிறை = துன்பம்; ‘பெருமிறை’ என்றால் ‘மிடி’ அஃதாவது துன்பம் என்பதை பரிதியாரும் தெளிவுப்படுத்துகிறார். பெருமிறை என்பதனை பெரும் இறை என்று கொண்டு ‘இறை’ என்பதற்குத் துன்பம் என்றும் உரைப்பாரும் உளர்.
அருமறை சோரும் அறிவிலான் = நுண்ணியக் கருத்துகளை எடுத்துச் சொல்லி வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த நூல்களே சோர்ந்து போகச் செய்யும் புல்லறிவாளன்; தானே தனக்கு பெருமிறை செய்யும் = அந்தக் கருத்துகளை உள்வாங்கத் தவறியதால் தானே தனக்குப் பெரும் துன்பம் இழைத்துக் கொள்கிறார்.
நுண்ணியக் கருத்துகளை எடுத்துச் சொல்லி வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த நூல்களே சோர்ந்து போகச் செய்யும் புல்லறிவாளன், அந்தக் கருத்துகளை உள்வாங்கத் தவறியதால் தானே தனக்குப் பெரும் துன்பம் இழைத்துக் கொள்கிறார்.
இந்தக் குறளுக்கு அறிஞர் பெருமக்கள் சிலரின் உரை வேறுவகையில் உள்ளன.
மூதறிஞர் மு.வ.: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான்.
மணக்குடவர் பெருமான்: அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.
அஃதாவது, மறைக்க வேண்டியனவற்றை வெளிப்படுத்தித் தனக்குத் தானே துன்பம் இழைத்துக் கொள்கிறான் என்கிறார்கள்.
ஆனால், அப்படி மறை பொருளை வெளிப்படுத்தினால் அது பேதைமை. அது புல்லறிவாகாது என்கிறார் பரிமேலழகப் பெருமான்.
பரிமேலழகப் பெருமான்: அருமறை சோரும் என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments