06/12/2023 (1005)
அன்பிற்கினியவர்களுக்கு:
இருளை விலக்க இருளொடுப் போராடிப் பயன் இல்லை. இருளை விலக்க நாம் முன்வந்து விளக்கை ஏற்ற வேண்டும். இல்லையெனில், அந்த இருளிலேயே முடக்கப்படுவோம்.
நாம் உணர்ந்திருப்போம். இருட்டு நேரம். மின்சாரம் இல்லை. எங்கும் கும்மிருட்டு. நாம் என்ன செய்வோம். அப்படியே, செய்யும் செயலையெல்லாம் நிறுத்திவிட்டு செயலற்று நிற்போம். அஃதாவது, அந்த இருள் நம்மை முடக்கிப் போடும். அப்போதும், தத்தித் தத்திச் சென்று ஒரு விளக்கை ஏற்றுவோம். நமது செயல்பாடுகள் மீண்டும் தொடரும். இதை முன்னிட்டு நம்மைச் சார்ந்திருப்போரும் ஒளி பெறுவர்.
நாம் என்ன செய்வது என்று அறியாமல் முடங்கிவிட்டால், ஒளி மீண்டும் எழும்வரை காத்திருக்க வேண்டியதுதான். யாராவது ஓர் ஒளியைக் கொண்டு வர மாட்டார்களா? என்று ஏங்க வேண்டும். ஒளி மீண்டும் வருமா, வராதா என்ற எண்ண ஓட்டங்கள் நம்மைக் கீழேத் தள்ளும்.
இந்த உலகமானது இரவு, பகல் என்று மட்டும் மாறி மாறி இயங்குவதில்லை; இருள், அருள் என்றும் இயங்கிக் கொண்டுள்ளது. அன்பு என்னும் நெய்யை ஊற்ற ஊற்ற அது அருளென்னும் ஓளியை நம் நெஞ்சத்தில் மேலும் ஒளிவிடச் செய்யும்.
… உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார், தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார். --- மகாகவி பாரதி
இவ்வாறு, ஒளி பொருந்திய உலகம் கைவரும்போது அவர்களுக்கு ஏது இருள் சேர்ந்த இன்னா உலகம்?
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். – 243; அதிகாரம் – அருளுடைமை
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு = அருள் என்னும் ஒளி நெஞ்சினில் ஒளிர அவர்களுக்கு; இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் இல்லை = இருள் கப்பிய இனிமை இல்லாத உலகத்தில், அஃதாவது இகல் கொண்ட சுற்றத்துடன், வாழும் வாழ்க்கை இல்லை. இகல் = மாறுபாடு.
அருள் என்னும் ஒளி நெஞ்சினில் ஒளிர, அவர்களுக்கு,இருள் கப்பிய இனிமை இல்லாத உலகத்தில், அஃதாவது, மாறுபாடு கொண்ட சுற்றத்துடன், வாழும் வாழ்க்கை இல்லை. அது மட்டுமல்ல, அவர்கள் இந்த உலகை விட்டு நீங்கிய பின்னும் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்பது குறிப்பு.
அஃதாவது, அருள் என்னும் விளக்கை நாம் ஏற்றினால் அருகில் இருக்கும் அனைத்தும் ஒளி பெற்றுத் துலங்கும் என்றவாறு.
பி.கு.: இன்னா உலகம் என்பதற்கு நரக லோகம் என்ற அறிஞர் பெருமக்களின் உரைகள் இருக்கின்றன. அஃதாவது, நரகம் மறுமையில் இல்லை.
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments