11/11/2022 (617)
காலமறிதல் அதிகாரத்தின் முதல் குறளில் காலத்தின் முக்கியத்துவத்தைப் ‘பகல் வெல்லும் கூகையை காக்கை’ என்றார். அதைத் தொடர்ந்து, அது மட்டும் போதாது, அந்தக் காலத்தோடு ஒட்ட ஒழுக வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, சரியான கருவிகள் வேண்டும் என்கிறார். கருவிகள் என்றால் என்ன என்பதற்கு மூவகை ஆற்றல், நால் வகை உபாயங்கள் என்கிறார் பரிமேலழகப் பெருமான்.
அது என்ன மூவகை ஆற்றல் என்றால் அறிவு, ஆண்மை, பெருமை என் கிறார்கள் ஆன்றோர்கள். நால் வகை உபாயங்களாவன: சாம, தான, பேத, தண்டம்.
இங்கே அறிவு என்பது சமயோசித அறிவாக இருக்கும். ஆண்மை என்பது நீர்வாகத் திறமையாக இருக்கலாம். பெருமை என்பது கிடைக்கப் போகும் வெற்றியால் நாம் பெறப் போவது என்ன என்பதாக இருக்கலாம்.
சில சமயம் வெற்றியடைந்துவிடுவோம். அது இரண்டு கண்களைக் கொடுத்து மாற்றானின் ஒரு கண்ணை எடுத்தது போல் இருக்கும்!
புறக் கருவிகள் ஏராளமாக இருக்கலாம். அது, அது அந்த அந்தச் செயல்களுக்கு ஏற்றார்போல் சரியாக இருக்க வேண்டும். இருப்பினும் அகக் கருவிகள்தான் மிக முக்கியம்.
பாரதப் போரில் பாண்டவர்களிடம் ஏழு அக்குரோணி சேனைகள்.
துரியோதனனிடம் பதினோரு அக்குரோணி சேனைகள், கிருஷ்ண பரமாத்தமாவின் சேனைகள் உட்பட.
ஒரு அக்குரோணி சேனை என்பது தேர், யானை, குதிரை, ஆட் படைகள் 1:1:3:5 விகிதத்தில் அமைந்திருக்கும் என்கிறார்கள். அதாவது 21,870 தேர்கள், அதற்கு இணையாக 21,870 யானைகள், 65,610 குதிரைகள், 1,09,350 வீரர்களாம். இது போல பதினோரு அமைப்பு!
அம்மாடியோவ்! தலை சுற்றுகிறது. ஆக மொத்தம், பதினெட்டு அக்குரோணி சேனைகளும் இறுதியில் மாண்டதுதான் மிச்சம்! போர் என்பது எந்தக் காலத்திலும் அழிவினை நோக்கியே!
அன்மையில் நிகழ்ந்த வியட்நாம் போர் நினைவுக்கு வருகிறது. அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசாக இருந்தாலும், வெற்றியை உறுதி செய்ய இயலவில்லை.
இதனை அறிந்துதான் மூவகை ஆற்றல் என்றார் நம் பேராசான். அதாவது, அறிவு, ஆண்மை, பெருமை.
நாம் குறளுக்கு வருவோம்.
களம், காலம், கருவி ஆகியவைகள் சரியாக அமைந்துவிட்டால், செய்து முடிக்க இயலாத செயல்கள் என்று ஏதேனும் உண்டோ என்று கேட்கிறார் நம் பேராசான்.
“அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.” --- குறள் 483; அதிகாரம் – காலமறிதல்
கருவியான் காலம் அறிந்து செயின் = தக்க கருவிகளை, தக்க தருணத்தில், தக்க விதத்தில் பயன்படுத்தினால்; அருவினை என்ப உளவோ = செய்ய முடியாத செயல்கள் என்பது ஏதாவது இருக்கிறதா?
தக்க கருவிகளை, தக்க தருணத்தில், தக்க விதத்தில் பயன்படுத்தினால் செய்ய முடியாத செயல்கள் என்பது ஏதாவது இருக்கிறதா?
அதாவது வெற்றி நிச்சயம் என்கிறார்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Commentaires