top of page
Search

அரங்கின்றி வட்டாடி ... 401, 126, 22/04/2024

22/04/2024 (1143)

அன்பிற்கினியவர்களுக்கு:

புலவிக்கு மூன்று அதிகாரங்கள் வைத்துக் காமத்துப் பாலையும், திருக்குறளையும் நிறைவு செய்கிறார்.

 

புலவி (131), புலவி நுணுக்கம் (132), ஊடல் உவகை (133) – இப்படித் திருக்குறளை உவகையில், அஃதாவது, மகிழ்ச்சியில் முடிக்கிறார். இந்த அதிகாரங்களைப் பார்ப்பதற்கு முன் விடுபட்ட சில அதிகாரங்களையும் பாடல்களையும் பார்த்துவிடுவோம்.

 

நம் பேராசான் ஆமை போல் ஐந்தடக்கல் வேண்டும் என்றார். காண்க 11/11/2021. மீள்பார்வைக்காக:

 

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து. - 126; - அடக்கமுடைமை

 

ஆமை ஒடுங்குவதைப் போல, ஒருவன் மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த ஐந்து புலன்களையும் அடக்கும் திறமை வந்துவிட்டால், அந்தத் திறமை அவனுக்கு ஏழு பிறப்புக்கும், அஃதாவது, நீண்ட காலத்திற்கும் பாதுகாப்பாக அமையும்.

 

ஆமை ஒடுங்குவது போல நம் புலன்கள் ஒடுங்கி அற வழியில் நடக்க வேண்டுமானால் நம்முடனே சில ஆமைகள் பொருந்தி இருத்தல் வேண்டும் என்று அறத்துப் பாலில் 10 ஆமைகளை விரிவாக விளக்குகிறார்.

 

அவை யாவன:  1. பிறனில் விழையாமை, 2. அழுக்காறாமை, 3.வெஃகாமை, 4. புறங்கூறாமை, 5. பயன் இல சொல்லாமை, 6. கள்ளாமை, 7. வெகுளாமை, 8. இன்னாசெய்யாமை, 9. கொல்லாமை.

 

மேலும், என்றுமே மறக்கக் கூடாத ஆமையாகிய நிலையாமையையும் பத்தாவது ஆமையாகக் குறிப்பாகக் காட்டுகிறார். அஃதாவது, இதுவும் கடந்து போகும் (This too shall pass) என்ற உண்மையைச் சொன்னார். இந்தப் பத்து ஆமைகளையும் நாம் முன்பே சிந்தித்துள்ளோம்.

 

பொருட்பாலில், ஈட்டிய பொருளைக் கட்டிக் காக்க வேண்டும் என்றால் ஏழு ஆமைகளை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றார். அவை யாவன: 1. சிற்றினஞ்சேராமை, 2. பொச்சாவாமை, 3. வெருவந்தசெய்யாமை, 4. இடுக்கணழியாமை, 5. அவையஞ்சாமை, 6. பெரியாரைப் பிழையாமை, 7. கள்ளுண்ணாமை. இந்த ஆமைகளையும் நாம் சிந்தித்துள்ளோம்.

 

பொருட்பாலில் நாம் சிறக்க வேண்டும் என்றால் தவிர்க்க வேண்டிய ஒரு முக்கியமான ஆமையாகிய 8. கல்லாமையை நாம் கவனமாக விலக்க வேண்டும். இந்த அதிகாரத்தில் உள்ள சில பாடல்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது.


காமத்துப்பாலில், பிரிவாற்றாமை என்ற ஒரு ஆமை காதலில் கட்டுண்டவர்களைப் படாதபாடு படுத்தும் என்றார். இந்த ஆமையையும் நாம் பார்த்துள்ளோம்.

 

ஆக, ஆமை என்று முடியும் அதிகாரங்கள் மொத்தம் 19; அறத்துப் பாலில் 10; பொருட்பாலில் 8, காமத்துப் பாலில் 1.

 

சரி, நாம் பார்க்க வேண்டிய கல்லாமை பாடல்களைப் பார்ப்போம்.

 

நாம் ஆடுகின்ற எந்த விளையாட்டாக இருந்தாலும், அது நன்றாக இருந்தால், அதில் நம் திறமை வெளிப்பட்டால், அதனைக் கண்டு களிக்க, பாராட்ட நான்கு பேர் நிச்சயம் வருவார்கள். நமக்கு அரங்கினுள் விளையாட அனுமதியும் இருக்கும்.

 

நாம் அந்த விளையாட்டைச் சரியாகப் பயிலாமலும், முறையாகப் பயிற்சி செய்யாமலும் இருந்தால் நம் விளையாட்டை யார்தான் இரசிப்பார்கள். நமக்கு யார்தான் விளையாட அரங்கம் தருவார்கள்?

 

வட்டு எறிதல் (Discus throw) என்று ஒரு விளையாட்டைப் பற்றி நமக்குத் தெரியும். வட்டு என்பது வட்ட வடிவில் இரும்பினால் ஆன, அதே சமயம், தட்டையான ஒரு பொருள். அதனை வீரர்கள், பெரிய திறந்த வெளி அரங்கில் சுழற்றி வீசுவார்கள். அது பாய்ந்து செல்லும் தூரத்தை வைத்து வெற்றியைக் கணக்கிடுவார்கள். இந்தப் போட்டியைக் காண பலர் கூடுவார்கள்.

 

இந்த விளையாட்டிற்குக் கடுமையான பயிற்சி தேவை. பயிற்சி செய்யக் கூடிய அளவில், பரந்துபட்ட அரங்கம் அமைய வேண்டும்! அந்த அரங்கமே அமையவில்லை என்றால் ஒருவன் வட்டு எரிதலைப் பயில்வது எங்கனம்? மற்றவர் பாராட்ட வழிதான் ஏது?

 

அதேபோல், ஒரு கோட்டியிலே, (இதனைத்தான் கோஷ்டி என்கிறார்கள் போலும்!) அஃதாவது கற்றிந்தோர் அவையில், ஒருவன் அறிவு செறிவுள்ள நூல்களைக் கற்றுத் தெளியாமல், அவனின் கருத்தைச் சிறப்பாக எடுத்து வைப்பது எங்கனம்?

 

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல். – 401; - கல்லாமை

 

கோட்டி = குழு, அவை, கூட்டம்; வட்டு = ஒரு வகை விளையாட்டு; கொளல் = வெற்றி பெறுதல்

 

நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல் = அறிவுசார் நூல்களின் துணையில்லாமல், அஃதாவது, கல்லாமல், ஓர் அவையை வெற்றி கொள்ளலாம் என்பது; அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே = சரியான ஆடுகளமும், பயிற்சியும் இல்லாமல் வட்டு எறிந்து வெற்றி காண முடியாதோ அவ்வாறே!

 

அறிவுசார் நூல்களின் துணையில்லாமல், அஃதாவது, கல்லாமல், ஓர் அவையை வெற்றி கொள்ளலாம் என்பது சரியான ஆடுகளமும், பயிற்சியும் இல்லாமல் வட்டு எறிந்து வெற்றி காண முடியாதோ அவ்வாறே!

 

“அரங்கின்றி வட்டு ஆடுதல்” என்பதற்கு அறிஞர் பெருமக்கள்

தேவையான கட்டங்களைப் போட்டுக் கொள்ளாமல் உண்டை உருட்டல், தாயம் உருட்டல், சொக்கட்டான் ஆடுதல் என்றும் பொருள் சொல்கிறார்கள்.

 

ஒரு நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்கின்றதா என்பதனை அந்த நாட்டு மக்களின் படிப்பறிவைக் கொண்டும் கணக்கிடுகிறார்கள். மக்களின் கற்றல் திறன் வளர வளர தனி மனித வளர்ச்சியும், நாட்டின் முன்னேற்றமும் உறுதி செய்யப்படுகின்றன.

 

கல்லாமையை விரட்டுவோம்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page