16/05/2022 (444)
'மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று…” --- கணியன் பூங்குன்றனார்
பொருதல் = அராவுதல்
‘பொருதல்’ என்றால் அராவுதல். அராவுதல் என்றால் அரத்தால் தேய்த்தல். தேய்த்தலா அது? உண்மையில் அறுத்தல்.
‘அரம்’ என்றால் அது ஒரு கருவி (tool). அதை ஆங்கிலத்தில் ‘File’ என்பார்கள். பொதுவாக, ‘file’ என்றால் ‘கோப்பு’ என்று பொருள். கோப்பில் உள்ளது பிற்காலத்தில் வெளியே வந்து பலரின் கழுத்தை அறுப்பதால் ‘அரம்’ என்பதற்கும் அந்த ‘file’ யே பயன்படுத்திவிட்டார்களா? இது நிற்க.
சரி, இப்போ இந்த ரம்பமெல்லாம் எதற்கு?
காரணம் இருக்கு.
தங்கம் (gold) இருக்கிறதல்லவா (அது எங்கே இருக்கு? அதுதான் இறக்கை கட்டி பறக்குதே!ன்னு சொல்கிறீர்களா? அதுவும் சரிதான்) அது மிகவும் மென்மையானது. அதன் மேல் அரத்தை வைத்து தேய்தால் வலியே தெரியாமல் பொடி ஆக்கிடலாம்.
யாருக்கு வலி தெரியாமல் என்பதுதான் கேள்வி? தேய்ப்பவர்களுக்குத்தான்! தங்கம், தன்மட்டில், உள்ளுற அழுது கொண்டுதான் இருக்கும்.
அது போல, ஒரு குடியின் உரத்தை, அதாவது வலிமையை, கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்து பொடி, பொடி ஆக்கிடுமாம்.
எது அது?ன்னு தானே கேட்கறீங்க? அதாங்க உட்பகை.
உட்பகை உரத்தைக் கொல்லும்; எது போலவென்றால், தங்கத்தை அரம் பொடி, பொடி ஆக்குவது போல என்கிறார் நம் பேராசான்.
“அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.” --- குறள் 888; அதிகாரம் – உட்பகை
அரம்பொருத பொன் போலத் தேயும் = அரட்த்தினால் பொரப்பட்ட பொன் அழியும், அதன் உருவம் இல்லாமல் போகும்; உட்பகை உற்ற குடி உரம் பொருது(ம்) = உட்பகை உற்ற குடியின் வலிமையும் அவ்வாறே தேயும், அழியும்.
உட்பகை உற்ற குடி எப்படியானது என்பதை குறல் 887லும், அது எவ்வாறு அழியும் என்பதை குறள் 888லும் விளக்குகிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments