14/05/2024 (1165)
அன்பிற்கினியவர்களுக்கு:
சான்றாண்மைக்கு இலக்கணமாக இருப்பவர்கள் இருப்பதனால் இந்த உலகம் இருக்கின்றது என்றார் குறள் 990 இல். காண்க 09/05/2024. மீள்பார்வைக்காக:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. – 990; - சான்றாண்மை
அதே போன்று, பண்பு மிக்கோர் இந்த உலகத்தில் இருப்பதானால் இந்த உலகம் நிலைத்திருக்கின்றது என்றார். காண்க 09/09/2023.
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன். - 996; - பண்பு உடைமை
நம் பேராசான் அப்போதைக்கு அப்போது கொஞ்சம் கோபம் வந்தால் நீங்க எல்லாம் மக்களே இல்லை மரம் என்று சொல்லுவார்.
கண்களில் இரக்கம் இல்லையென்றால் மட்கிப்போன மரம் என்றார் குறள் 576 இல். காண்க 04/02/2023. மீள்பார்வைக்காக:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். - 576; - கண்ணோட்டம்
நிரம்ப கோபம் வந்துவிட்து என்றால் உன்னை மரம் என்றுகூட சொல்ல முடியாது. நீ எல்லாம் ஒரு மனிதனா? என்றும் கேட்பார். காண்க 16/08/2022. மீள்பார்வைக்காக:
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு. - 600; - ஊக்கமுடைமை
ஊக்கமில்லாதவனை மரம் என்றும் சொல்ல இயலாது. அவனுக்கு அறிவைக் கொடுத்தது எதற்காக என்பது புரியாமல் இருந்தால் அவனை மனிதனாகவும் கருத இயலாது!
மேலும் சொல்லுவார்: அறிவு இருக்கலாம் அரம் போலக் கூர்மையாக! அன்பு இல்லையென்றால், நல்ல பண்பு இல்லையென்றால் அவர்களை என்னவென்று சொல்வது?
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர். – 997; - பண்பு உடைமை
மக்கள் பண்பு இல்லாதவர் = மக்கள்தாம் என்று சொல்லத் தக்கவகையிலே அன்பு முதலான நல்ல பண்புகள் வெளிப்படாதவர்களிடம்; அரம் போலும் கூர்மையரேனும் = அறிவு இருக்கலாம் அரம் போலக் கூர்மையாக!; மரம் போல்வர் = ஆனால், அவர்களைக் கவையாகி கொம்பாகி காட்டகத்தே நின்றுகொண்டு யாராவது அருகில் வந்தால் குத்திக் கிழிக்கும் மரங்களைப் போல்வர் என்றுதான் சொல்லுதல் வேண்டும்.
மக்கள்தாம் என்று சொல்லத் தக்கவகையிலே அன்பு முதலான நல்ல பண்புகள் வெளிப்படாதவர்களிடம் அறிவு இருக்கலாம் அரம் போலக் கூர்மையாக! ஆனால், அவர்களைக் கவையாகி கொம்பாகி காட்டகத்தே நின்றுகொண்டு யாராவது அருகில் வந்தால் குத்திக் கிழிக்கும் மரங்களைப் போல்வர் என்றுதான் சொல்லுதல் வேண்டும்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments