01/02/2021 (15)
நன்றி, நன்றி, நன்றி.
கற்பதனால் பயன் இருப்பது நம்ம எல்லோருக்கும் தெரியும். அதனாலே:
“படி, படி, படி
…
காலையிற்படி கடும்பகல்படி மாலை, இரவு பொருள்படும் படி
… சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி அப்படி தெரிந்துபடி
தீமை வந்திடுமே மறுபடி … “
… பாவேந்தர் பாரதிதாசனாரின் வைரவரிகள்
கல்வியின் ஆயபயன் நமக்கு ஒருவாறு இப்போ விளங்கிடுச்சின்னு சொல்லலாம். கல்வி அருளாக மாறனும்,மேலும் அருளாளர்கள் தாள்களை வணங்கி மேலும் கற்கனும்.
அதுக்கு தான் வள்ளுவப்பெருமான்,
கற்க, கற்க நம்முடைய ‘அறியாமை’ தெரிய வரும்ன்றார். அதுவும் எப்படியாம்?
அதுக்கு ஒரு மேற்கோள் காட்டுகிறார்.
கொஞ்சம் கிட்ட வந்து காதை கொடு. பக்கத்திலே யாரும் இல்லை இல்லையான்னு கேட்டுட்டு மெதுவா வள்ளுவப்பெருமான் காதிலே சொன்னதை அப்படியே சொல்றேன். கொஞ்சம் கிட்ட வாங்க ப்ளிஸ்.
உடையவளிடமோ, உடையவனிடமோ ஒவ்வொரு முறை நெருங்கிச் செல்லும் போதும், ‘அடடா, இதுவரை இது தெரியாம போச்சே’ ன்னு அறியாமை வெளிப்படுதில்லையா அது போலன்னு போட்டார் ஒரு போடு.
நம்ம வள்ளுவப்பெருமான் நல்ல ஒரு ரசனையான ஆளா இருந்திருப்பார் போல. அனுபவம் பேசுது!
ம்..ம். பெருமூச்சு விடாதீங்க. குறள், குறள் அதிலே தான் கவனம் இருக்கனும். இதோ அந்த குறள்:
“அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு” --- குறள் – 1110; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
அறிதோறு(ம்) = கற்க, கற்க; அறியாமை கண்டற்றால் = கற்காதது, கற்க வேண்டியது மேலும் இருப்பதுதான் தெரிகிறது;
காமம் செறிதோறும் சேயிழை மாட்டு = (அதைப்போல) என்னவளுடன் நான் இணையும் போதெல்லாம், எனது அறியாமையை அகற்ற மேலும், மேலும் முயல வேண்டும் என்பது தெளிவாகிறது.
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments