12/06/2024 (1194)
அன்பிற்கினியவர்களுக்கு:
அறைபறை என்பது வினைத்தொகை என்று பார்த்தோம். காண்க 29/02/2024. அஃதாவது, அறைகின்ற பறை, அறைந்த பறை, அறையும் பறை.
கயவர்களுக்கு ஒரு செய்தி எட்டிவிட்டால், அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்றெல்லாம் சிந்திக்காமல், அச் செய்தியை ஊருக்கெல்லாம் பரப்பி மகிழ்ச்சி கொள்வார்கள். அதை அனுபவித்தும் சொல்வார்கள். பார்த்தியா, நீங்களெல்லாம் யோக்கியர்கள் மாதிரி சொன்னீங்க. இப்ப பாருங்க அவர் அங்கே வழுக்கி விழுந்துட்டார்; இவர் இங்கே சறுக்கிட்டார் என்பார்கள்.
ஆனால், அவர்கள் இருப்பதே சாக்கடையில்தான் என்று உணர்ந்து கொள்ளாமல் ஓங்கிச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இந்தக் கயவர்களை நம் பேராசான் அறைபறை என்கிறார்.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான். – 1076; - கயமை
கயவர்தாம் கேட்ட மறை = கயவர்களின் காதுகளுக்கு ஒரு செய்தி எட்டிவிட்டால், அந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்றெல்லாம் சிந்திக்காமல்; உய்த்து பிறர்க்கு உரைக்கலான் = அச் செய்தியை மிகவும் மனம் மகிழ்ந்து பிறர்க்குச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்; அன்னர் அறைபறை = எனவே அவர்கள் காலம், நேரம் தெரியாமல் ஓயாத ஒலிக்கும் பறையைப் போன்றவர்கள்.
கயவர்களின் காதுகளுக்கு ஒரு செய்தி எட்டிவிட்டால், அந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்றெல்லாம் சிந்திக்காமல், அச் செய்தியை மிகவும் மனம் மகிழ்ந்து பிறர்க்குச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எனவே அவர்கள் காலம், நேரம் தெரியாமல் ஓயாத ஒலிக்கும் பறையைப் போன்றவர்கள்.
பெரியோரின் குணங்களுள் ஒன்று பிறரின் குற்றங்களை ஊதிப் பெரிதாக்கமல் இருப்பது என்றார் குறள் 980 இல். காண்க 15/08/2022. மீள்பார்வைக்காக:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். - 980; - பெருமை
அஃதாவது, பெரியோர் எனப்படுபவர்க்குப் பெருமை புரளி பேசாமல் இருப்பது. சிறுமைதான் புரளியைப் பரப்பிக் கொண்டிருக்கும் என்கிறார்.
புரளியைப் பரப்புவது கயவர்களின் ஒரு பண்பு என்று மீண்டும் தெளிவுபடச் சொல்லும் நம் பேராசான், அடுத்த பண்பாகச் சொல்வது ஈரக் கையால் காக்கையை விரட்டமாட்டான் என்பது.
தாம் உண்டுவிட்டுக் கையைக் கழுவிய பின்பு அந்த ஈரக் கையால் காக்கையைத் துரத்தினால் அந்தக் கையில் உள்ள வாசம் பிறர்க்குச் சென்றுவிடும் என்பதனால் அந்தக் கையையும் ஆட்டமாட்டாதவன் கஞ்சனிலும் கஞ்சன். அதுபோன்ற கஞ்சர்களும் கயவர்களே என்கிறார்.
இதுவரை சரி. அந்தக் கயவர்களே, மறுபுறம் வாரி வாரி வழங்குவார்களாம்! இது என்ன அதிசயமாக இருக்கிறதே என்கிறீர்களா? ஆமாங்க, அப்படிதான் சொல்கிறார் நம் பேராசான்.
நம்மாளு: அது எப்படி?
ஆசிரியர்: அது ஒன்றும் இல்லை, அண்ணன் தம்பிக்கு உதவாதவன் அடிக்கு உதவுவான் என்பார்களே அந்த வழிமுறைதான். அவனின் தாடைகளை அடித்துப் பெயர்ப்பதுபோல ஒருவன் வந்தால் அவனுக்கு அடங்கி அவர்கள் கையில் உள்ள பொருள்களை அள்ளி அள்ளிக் கொடுப்பார்களாம்!
கொடுறு என்றால் கன்னம் என்று பொருள். கூன் கை என்றால் முறுக்கிய கை.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு. – 1077; - கயமை
கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு = கன்னத்தை அடித்துப் பெயர்ப்பது போல கைகளை முறுக்கிக் கொண்டு வருபவர்க்கு அல்லால்; கயவர் ஈர்ங்கை விதிரார் = கயவர்கள் தங்கள் ஈரக்கைகளை உதறவும் மாட்டார்கள்.
கன்னத்தை அடித்துப் பெயர்ப்பது போலக் கைகளை முறுக்கிக் கொண்டு வருபவர்க்கு அல்லால், கயவர்கள் தங்கள் ஈரக்கைகளை உதறவும் மாட்டார்கள்.
கயவர்களை வழிக்குக் கொண்டுவர அடி உதவுவதுபோல வேறு ஏதும் உதவாது என்கிறார். வன்முறையைத் தூண்டுகிறாரா வள்ளுவப் பெருமான் என்று கேட்கலாம். ஆனால், கயவர்களை அடக்குவது தலைமையின் கடமைகளுள் ஒன்று.
அடுத்த குறளில் வன்முறையில் உச்சம் தொடுகிறார். நாளைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments