12/08/2023 (890)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பேதைமையைச் சொல்லி முடித்தார். அதனைத் தொடர்ந்து புல்லறிவாண்மையைக் கூறுகிறார்.
ஆண்மை என்றால் ஆளும் தன்மை என்று விரியும். புல்லறிவாண்மை என்றால் புல்லறிவை ஆளும் தன்மை!
புல்லறிவு என்றால் அறிவு கொஞ்சம் குறைவு! அதனை ஆளும் தன்மை என்றால்?
அதாங்க, அதையே ரொம்பப் பெரிய அறிவாக, “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” மாதிரி, யாரு பேச்சையும் கேட்காமல் சும்மா சுற்றிக்கொண்டு திரிவது.
நாம் இந்த அதிகாரத்தில் இருந்து இரு குறள்களைப் பார்த்துள்ளோம். காண்க 13/12/2021 (27), 14/02/2021 (28), 04/04/2023 (764). அவற்றை ஒரு மீள்பார்வை பார்த்துவிட்டுத் தொடர்வோம்.
“காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு” --- குறள் 849; அதிகாரம் - புல்லறிவாண்மை
உள்வாங்கும் திறன் இல்லாத ஒருத்தருக்கு ஒரு செய்தியைச் சொன்னால் அதை அவர் அறிஞ்சவரையிலே தான் எடுத்துக்கிடுவாரு. அது மட்டுமில்லாமே சொன்னவருக்கு விஷயம் சரியாகத் தெரியலைப் போலன்னும் நினைச்சுப்பாரு.
அஃதாவது, இது எப்படி இருக்கு என்றால் நாம் நல்லது என்று நினைத்து அவருக்குச் சொல்லப்போக நாம் முட்டாளிகிவிடுவோம். அவரைப் பொறுத்தவரை அறிவாளியாகவே இருப்பார்!
அவரை இந்த உலகம் பார்த்து அச்சப்படும் என்று இந்த அதிகாரத்தின் முடிவுரையாகச் சொன்னார்.
“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்” --- குறள் 850; அதிகாரம் – புல்லறிவாண்மை
அலகை = பேய். சான்றோர்களால் ஆய்ந்து அறிந்து, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை ஒருவன் இல்லை என்று கூறினால் அவனை நாம்கொஞ்சம் தள்ளி நின்று தான் பார்க்க வேண்டும்.
இந்த அதிகாரத்தின் முதல் பாடலில் புல்லறிவைப் பற்றிய உலகத்தின் பார்வையை எடுத்துச் சொல்கிறார்.
அஃதாவது, இந்த உலகமானது எது இல்லையென்றாலும் ஏற்றுக் கொள்ளும். ஆனால், அறிவில்லாமல் போனால் அவ்வளவுதான்.
இதுவும் சரிதானே. உன்னிடம் அது இல்லை, இது இல்லை என்று சொன்னாலும் கோபம் வராத நமக்கு “உனக்கு அறிவிருக்கா?” என்று ஒருவர் நம்மைப் பார்த்துக் கேட்டால் நமக்கு உடனே கோபம் வருகிறதல்லவா?
“அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.” --- குறள் 841; அதிகாரம் – புல்லறிவாண்மை
இன்மையுள் இன்மை அறிவின்மை = ஒருவனுக்கு ஆகக் கடைசியான இல்லாமை எது என்றால் அது அறிவில்லாமை; பிறிதின்மை இன்மையா வையாது உலகு = அவனிடம் எது சரி, எது தவறு என்று ஆய்ந்தறியும் அறிவு மட்டும் இருந்தால் போதும். அவனிடம் மற்ற ஏதும் இல்லை என்றாலும் அவனை இந்த உலகம் தூற்றாது.
ஒருவனுக்கு ஆகக் கடைசியான இல்லாமை எது என்று கேட்டால் அதுதான் அறிவில்லாமை. அவனிடம் எது சரி, எது தவறு என்று ஆய்ந்தறியும் அறிவு மட்டும் இருந்தால் போதும். அவனிடம் மற்ற ஏதும் இல்லை என்றாலும் அவனை இந்த உலகம் தூற்றாது.
அறிவுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று வாழ்த்துவார்கள் என்கிறார் நம் பேராசான்.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு. அழகை ஆராதிப்போம்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments