07/10/2021 (226)
நூலாருள் நூல் வல்லன், வேலாருள் வென்றி வினை உரைத்தல் ஆகியன வகுத்து உரைக்கும் தூதுவனுக்குத் தேவை என்று பார்த்தோம் குறள் 683ல்.
நம் பேராசான் தொடர்கிறார்.
நாம ஏற்கனவே ஒரு குறள் ஒன்று பார்த்தோம். என்னதான் பல நூல்களைக் கற்றாலும் தன் உண்மை அறிவே மிகும் என்று சொல்லியிருந்தார் நம் வள்ளுவப் பெருந்தகை.
“நுண்ணிய நூல்பலகற்பினும்மற்றும்தன் உண்மைஅறிவேமிகும்.” ---குறள் 373; அதிகாரம் - ஊழ்
நம்ம எல்லாருக்குமே எல்லா அறிவும் இருக்குதாம். அது வெளிப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நாம் படிக்கிறோமாம். சிலர், படிக்காத மேதைகள் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம். அந்த அறிவுக்குப் பெயர் உண்மை அறிவாம். அதாங்க, இயல்பான அறிவு.
இயல்பாகவே அறிவுடையனாக இருக்கனுமாம் தூதுவன். அது மட்டும் போதுமா என்றால் போதாதாம்.
ஆள் பாதி, ஆடை பாதி என்கிறார்களே அதைப் போல அவனின் உரு, தோற்றம் நல்லா விரும்பத்தக்க தோற்றம் இருக்கனுமாம். பார்த்தீங்களா, தோற்றத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கு.
அதற்கும் மேலே, ஆராய்ச்சி உடைய கல்வி இருக்கனுமாம்.
சாக்கிரட்டீஸ் பெருமகனார் சொன்னார்: “ஏன் என்று கேள், எதையும் ஏதற்கு என்று கேள், எவரிடமும் அஞ்சாமல் கேள், கேள், கேள்” இது மிக முக்கியம். இப்படி கேள்விகளால் கற்பிக்கும் முறைக்கு சாக்ரடிக் கல்வி முறை (Socratic method/pedagogy) என்றே அழைகிறார்கள். இதுதான் ஆராய்ந்த கல்வி முறை. சாக்ரடிஸ் பெருமானாரின் காலம் கி.மு. 350 அளவிலே இருக்கலாம். நம் வள்ளுவப் பெருமானின் காலமும் ஒன்றாக இருக்கலாம்.
உங்களுக்கு ஆச்சரியமாக தோன்றலாம். சாக்ரடிஸ் பெருமகனார் எழுதிய நூல்கள் என்ன என்று கேட்டால் ஒன்றுகூட இல்லை. அவரைக் குறித்து வேறு பலர் எழுதிக் கொண்டிருப்பதுதான் உள்ளது. சிந்திக்க வேண்டிய செய்தி. இது நிற்க.
“அறிவுரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.” ---குறள் 684; அதிகாரம் - தூது
காலத்தின் அருமை கருதி, நிறுத்துகிறேன்.
தொடர்வோம் நாளை. நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
コメント