top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

அறனோக்கி யாற்றுங்கொல் ... 189,

17/11/2023 (986)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

ஆசிரியர்: இந்தப் பூமிப் பந்து இருக்கிறதே, அது அகழ்வாரையும் தாங்கிக் கொண்டிருக்கும் அறத்தைக் கடைபிடிக்கிறது. அந்த ஒரு காரணத்தால்தான் அது இந்தப் புறம் பேசுபவர்களை விழுங்கி மண் மேடாக ஆக்காமல் விட்டு வைத்திருக்கிறது.

 

நம்மாளு: ஐயா, இன்னுமொரு காரணம். எப்படியும் அவர்கள் தங்கள் தலைக்கு தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வார்கள் என்றும் இருக்கலாம்.

 

ஆசிரியர்: அருமை. சரி நாம் நம் பேராசான் சொன்னதைப் பார்க்கலாம்.

 

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்

புன்சொ லுரைப்பான் பொறை. - 189; - புறங்கூறாமை

 

புறன் நோக்கிப் புன் சொல் உரைப்பான் பொறை = புறம் பேசுவதையே வழியாகக் கொண்டு அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருப்பவனையும் பொறுப்பது; அறன் நோக்கி ஆற்றுங்கொல் வையம் = ஏன் என்றால் இந்த வையம் அகழ்வாரையும் தாங்கும் தன் அறத்தை விட்டுவிடக் கூடாது என்பதனால்.

புறம் பேசுவதையே வழியாகக் கொண்டு அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருப்பவனையும் பொறுப்பது ஏன் என்றால் இந்த வையம் அகழ்வாரையும் தாங்கும் தன் அறத்தை விட்டுவிடக் கூடாது என்பதனால்.

 

இந்த வையமும் வானமும் பல கோடி ஆண்டுகள் இருக்கும் என்பது அதற்குத் தெரியும். இந்த உயிர்கள் தன்னுள் விரைவில் ஒரு நாள் கலக்கும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Give him a long rope; Let him hang himself. ஒருவனுக்கு வேண்டியமட்டிலும் சுதந்திரத்தைக் கொடு. அதைச் சரியாகப் பயன்படுத்துவதும் அல்லது அக் கயிற்றைக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வதும் அவன் பாடு.

 

நாம் மறக்கக் கூடாத குறள் ஒன்று இருக்குமானால் அதுதான் குறள் 108. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று. மனத்திற்கு அமைதியைக் கொடுக்கும் குறள் இது. இதற்கு அடுத்து நம் மன நிலை கொதி நிலைக்குப் போகாமல் மனத்தை ஒரு கட்டுக்குள் வைக்கும் குறள் எதுவென்றால் புறங்கூறாமையின் கடைசிக் குறள்தான் அது. காண்க 13/06/2021 (111), 10/08/2023 (888). மீள்பார்வைக்காக:

 

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. - 190; - புறங்கூறாமை

 

பிறர் செய்யும் குற்றங்களைக் காணும்போது கொதிக்கும் நாம் இதே போன்ற குற்றங்களை முன்னர் செய்துள்ளோமா என்றும் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, எதிராளியின் நிலை தமக்கு ஒரு வேளை வருமானால் நாமும் அதே போன்ற தவற்றினை இழைக்க வாய்ப்புண்டா  என்பதையும் நினைக்க வேண்டும். அவ்வாறு, ஒரு கணம் நினைக்கத் தொடங்கினால் நமது மனத்தின் கொதிநிலை அடங்கும். மன்னுயிர்கள் செழிக்கும்.

 

“உங்களில் எவன் ஒருவன் பாவம் இல்லாதிருக்கிறானோ அவன் முதல் கல்லை எறியக்கடவன்.” என்றார் யேசு பிரான். ஒரே அமைதி.

 

“Let him who is without sin cast the first stone”  - The Gospel According to John, Chapter 8, Verses 3–7.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page