top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

அறன்கடை நின்றாருள் ... 142, 143

22/10/2023 (960)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

இல்லறத்தில் இருந்து வெகுதூரம் சென்றவரை எப்படிக் கண்டுபிடிப்பது? அவரைவிட பேதைமை உடையவர் யார் இருப்பார்? இப்படி இரண்டு கேள்விகளுக்கு நம் பேராசான் பதில் அளிக்கிறார்.


முதல் கேள்விக்குப் பிறரின் துணையைக் கவர நினைக்கும் எண்ணம்தான் அறத்தின் இழிந்த எல்லை என்கிறார்.

சரி, இரண்டாவது கேள்வியான, அவரைவிட பேதை யாராவது இருக்கிறார்களா என்றால் யாரும் இல்லை என்கிறார்.


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை

நின்றாரின் பேதையார் இல்.” --- குறள் 142; அதிகாரம் – பிறனில் விழையாமை


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை நின்றார் = இல்லறத்தின் இழிந்த எல்லையில் நின்றவர்களுள் எல்லாம் இழிந்தவர் பிறரின் துணையைக் கவர ஏங்கி நிற்பவர்; நின்றாரின் பேதையார் இல் = அவர் அறிவில்லாதவர்களுள் மிகக் கீழான அறிவில்லாதவர்.


இல்லறத்தின் இழிந்த எல்லையில் நின்றவர்களுள் எல்லாம் இழிந்தவர் பிறரின் துணையைக் கவர ஏங்கி நிற்பவர். அவர் அறிவில்லாதவர்களுள் மிகக் கீழான அறிவில்லாதவர்.


அஃதாவது, அதற்கு அறிவே இல்லை. (அறிவில்லை என்றதனால் அஃறிணையாகச் சுட்டுவதிலும் தவறில்லை)


வள்ளுவப் பெருந்தகை: தம்பி. அஃறிணை என்றுகூடச் சொல்லக் கூடாது. அவர்கள் செத்தப் பிணம் தம்பி!


நம்மாளு: செத்தப் பயலேன்னுதான் கூப்பிடணும் போல!


விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்தொழுகு வார்.” --- குறள் 143; அதிகாரம் – பிறனில் விழையாமை


தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் = நம்பி நன்றாகப் பழகும் குடும்பத்தினுள் குழப்பம் விளைவிக்கும் விதமாக இணையைத் துணையைக் கவர எண்ணம் கொண்டு தீயச் செயல்களை ஆற்றுபவர்கள்; விளிந்தாரின் வேறல்லர் மன்ற = உயிரோடிருப்பினும் இறந்தவர்கள்தாம் வேறு அல்லர் என்பது திண்ணம். விளிந்தார் = இறந்தார்.


நம்பி நன்றாகப் பழகும் குடும்பத்தினுள் குழப்பம் விளைவிக்கும் விதமாக இணையைத் துணையைக் கவர எண்ணம் கொண்டு தீயச் செயல்களை ஆற்றுபவர்கள் உயிரோடிருப்பினும் இறந்தவர்கள்தாம் வேறு அல்லர் என்பது திண்ணம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Comments


Post: Blog2_Post
bottom of page