25/10/2023 (963)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
முடிவுரையாக பிறனில் விழையாமைக்கு ஒரு குறளைச் சொல்ல வேண்டும் என நினைத்த நம் பேராசான்: இல்லறத்தில் இனைந்திருக்கும் இனியர்களே நீங்கள் முன்னர் சொன்ன எந்த அறங்களையும் கடைபிடிக்க முடியாமல் போனாலும் பிறன் மனை நோக்கா அறத்தைக் கடைபிடியுங்கள். அது உங்களை மற்ற அறக் கூறுகளை நோக்கி அழைத்துச் செல்லும் என்கிறார்.
பிறற்குரியதை கவர முயலாமல் இருப்பது, தடுக்காமல் இருப்பது அறங்களுள் எல்லாம் பெரிய அறம் என்றவாறு.
“அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.” --- குறள் 150; அதிகாரம் – பிறனில் விழையாமை
அறன் வரையான் அல்ல செயினும் = தொகுக்கப்பட்ட எந்த அற வரைமுறைகளை மீறி எந்த ஒரு செயலினைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும்; பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று = பிறரின் எல்லைக்குள் உள்ள அவர்களின் துணைகளை விரும்பாமல் இருக்கும் அறம் உயர்ந்தது.
தொகுக்கப்பட்ட எந்த அற வரைமுறைகளை மீறி எந்த ஒரு செயலினைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும், பிறரின் எல்லைக்குள் உள்ள அவர்களின் துணைகளை விரும்பாமல் இருக்கும் அறம் உயர்ந்தது.
பிறன் பொருள் விரும்பாமை முதன்மையான அறங்களுள் ஒன்று.
இது போன்றே, வாய்மை என்னும் அதிகாரத்தில் நமக்கு குறிப்பிட்டுச் சொன்னது:
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.” --- குறள் – 297; அதிகாரம் – வாய்மை
பொய்யாமை = மனத்தில் பொய் இல்லாமல் வாழ்வது; பொய்யாமை = (அதனைத்) இடைவிடாமல் ஒழுகுவது; ஆற்றின் = செய்தால்; அறம்பிற = பிற அறங்களை; செய்யாமை செய்யாமை நன்று = செய்யாமையே செய்யாமையே நல்லது.
இந்தக் குறளுக்கு இரு வகையில் பொருள் சொல்கிறார்கள்.
முதல் உரை: மனத்தில் பொய் இல்லாமல் இருக்கும் பண்பு எக்காலத்திலும் இடைவிடாமல் இருந்தால், பிற அறங்களைச் செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை. பொய்யாமை என்னும் அந்தப் பண்பே பிற அறங்களுக்குச் செல்லும் வழியாக அமையும்.
முதல் அடுக்குத் தொடர்: பொய்யாமை பொய்யாமை. முதல் பொய்யாமைக்கு பொய்யில்லாமை என்றும் இரண்டாம் பொய்யாமைக்கு இடைவிடாமல் என்றும் பொருள் காண்கிறார்கள். இஃது பொருள் பின் வரு நிலை அணி. வந்தச் சொல்லே மீண்டும் வந்து வேறு பொருள் உரைப்பது.
இரண்டாம் அடுக்குத் தொடர் - செய்யாமை செய்யாமை. இரண்டு செய்யாமைகளும் செய்யாமையையே குறிப்பது. இது சொல்ல வந்தக் கருத்தை துணிவுடன் அழுத்திச் சொல்வது. “ஓடாதே ஓடாதே நில்” என்பதைப்போல!
வேறு உரை: மனத்தில் பொய் இல்லாமல் இருக்கும் பண்பு எக்காலத்திலும் இடைவிடாமல் இருந்து, பிற அறங்களைச் செய்வது நல்லது. இல்லையென்றால் பிற அறங்களால் பயன் இருக்காது என்கிறார்கள்.
அஃதாவது, இரண்டாம் அடுக்கினை எதிர்மறை அடுக்காக்கி (double negative) “செய்யாமை செய்யாமை” என்பதற்குச் ‘செய்தல்’ என்று பொருள் எடுக்கிறார்கள்.
இது நிற்க.
நம் பேராசனின் முறைமையைக் கவனித்தால் அவர் சொல்ல எடுத்துக் கொள்ளும் பொருளை உயர்த்திக் காண்பிப்பார். அவ்வகையில், முதல் உரை அமைந்து சிறப்பாகவே உள்ளது. அதுமட்டுமல்ல, நம் பேராசான் முன்பு அறிவுறுத்தியக் கருத்துக்கும் இயைந்துச் செல்கிறது. காண்க 15/02/2021 (29).
மீள்பார்வைக்காக:
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற.” --- குறள் 34, அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
மனத்தில் குற்றம் இல்லாதவராக இருந்துவிட்டால் அதுவே அனைத்து அறம் ;
மற்றவை எல்லாம் அதிகமானவை!
பொய்யில்லாமல் வாழ்ந்தால் அதுவே அனைத்து அறங்களுக்கும் வழி வகுக்கும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários