12/11/2023 (981)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வினை என்றால் விளைவு நிச்சயம். ஒருவர்க்கு நாம் அல்லவை செய்தால் நமக்கும் ஒருவர் அல்லவை செய்வார். இது நிச்சயம் என்றார் குறள் 319 இல்.
இவர்களை நம்பி ஏமாந்தேன், அவர்களை நம்பி பணம் கட்டினேன். எல்லாப் பணமும் போயிற்றே என்று வருந்துவர். இதற்கு அடிப்படைக் காரணம் அதீத ஆசை. ஒன்று போட்டால் பத்து வரும் என்பார்கள். எங்கிருந்து வரும்? இதுவும் நமக்குச் சொந்தமில்லாத பிறன் பொருளை வெஃகித்தானே! அப்போது, செல்வம் சுருங்காமல் என்ன செய்யும்? அதை நடத்தியவர்களும் சட்டத்தின்பிடியில் சிக்கிக் கொண்டு அல்லல்படுவர்.
அதற்குத்தான் நம் பேராசான், செல்வம் சுருங்காமல் இருக்க வழி சொன்னார். நாம் எதுவுமே செய்யத் தேவையில்லை. நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டு, பிறர் பொருளை விரும்பாமல் இருந்தால் அதுவே போதும் என்றார் குறள் 178 இல். என்ன ஒரு சுலபமான வழி! காண்க 11/11/2023.
சரி இது மட்டுமா? பிறர் பொருளை வெஃகாமல் இருப்பின் பணமும் சேரும் என்கிறார். அதுவும் சரிதான். செல்வம் குறையாமல் இருக்க ஓட்டையை அடைத்தாகிவிட்டது. நாம் நல் வழியில் உழைக்க உழைக்க பின் செல்வம் சேராமல் என்ன செய்யும்? அஃதாவது, நமது திறமைக்கு ஏற்றவாறு செல்வம் சேரும் என்கிறார். சொல்வது யார்? நம் பேராசான்!
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.” --- பாடல் 1434; செய்யுளியல்; தொல்காப்பியம்; புலவர் வெற்றியழகனார் உரை
நம் பேராசானும்
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.” --- குறள் 28; அதிகாரம் – நீத்தார் பெருமை
காண்க 17/06/2021, 11/08/2021.
திருவள்ளுவப் பெருமான் தன்னை மறைத்துக் கொண்டு வடித்தக் குறள் இது என்றே எண்ணத் தோன்றுகிறது.
வள்ளுவப் பெருமானின் குறள் காலத்திற்கு முரண் என்றால் நமக்கு விளங்கத் தெரியவில்லை என்றே பொருள்படும். மறைமொழிகள் சிலபோது நேரடியாக, உடனடியாகப் பொருள் விளங்காது. அனுபவம் வாய்க்கின் விளங்கக் கூடும். அவ்வளவே.
சரி நாம் வெஃகாமைக்கு வருவோம்.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு. - 179; வெஃகாமை
அறனறிந்து = இதுதான் அறம் என்று அறிந்து; வெஃகா = பிறர் பொருளை விரும்பா; அறிவுடையார் = நல்ல அறிவுள்ளவர்கள்; திறனறிந்து திரு ஆங்கே சேரும் = அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு செல்வம் அங்குவந்து சேரும்.
இதுதான் அறம் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பா நல்ல அறிவுள்ளவர்களின் திறமைக்கு ஏற்றவாறு செல்வம் அங்குவந்து சேரும்.
நம்மாளு: ஐயா, நான் எந்த வம்பு தும்புவிற்கும் போவதில்லை. பிறர் பொருளை மனத்தாலும் நினைப்பதில்லை. ஆனாலும், எனக்குச் செல்வம் வந்து சேரவில்லையே? ஏன்?
பேராசான்: அப்படியா? நீவீர் என்ன் செய்து கொண்டிருக்கிறீர்?
நம்மாளு: (மனசுக்குள்ளே … ஒரு கேள்விக்கு மற்றொரு கேள்வியைப் போடுவது.) ஆங்.. ஐயா, நான் எதுவுமே செய்வதில்லை!
பேராசான்: அப்போது, நீவிர் வீணே பொழுது போக்குகிறீர். அதுமட்டுமல்ல அருமையான காலத்தையும் விரையமாக்குகிறீர். உங்களுக்கு இருக்கும் செல்வமும் தேயும்; வரவேண்டியச் செல்வமும் வரா. விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல் அறம். பிறர் பொருளை விரும்பாமல் உங்கள் கடமைகளைச் செய்தால் காலம், இடம் அறிந்து உங்களுக்கு உரித்தானது வந்து சேரும். எழுந்து ஓடுவீராக.
இதுதான் நம்ம பேராசான் கெட்டித்தனம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
i do not seem to have recd. kural 178 posted on 11 th nov in Thinamum thirukkural
kodeswaran