இல்லறத்தானுக்கு உரிய அறங்களைப் பற்றி சொல்லிட்டு வந்த நம்ம வள்ளுவப்பெருந்தகை திடீர்னு ஒரு கருத்தை முன் வைக்கிறார்.
அது என்னன்னா ஒருத்தன் ‘அறம்’ங்கிற சொல்லை வாயால கூடச்சொல்லாதவனா இருக்கலாமாம் – அப்போ பாருங்க அறத்துக்கும் அவனுக்கும் அவ்வளவு தூரம் – ஆனால் அவன் புறம் கூறாமல் இருப்பானாயின் அதுவே சிறப்பாம்! அதுவே அவனுக்கு நன்மை தருமாம்.
நாம மூன்று வகையா இயங்கறோம். அதாவது மனம், மொழி(வாக்கு), மெய் ன்னு பிரிக்கலாம். அதிலே, நடுவிலே இருக்கு பாருங்க ‘வாக்கு’ அது தான் ரொம்ப முக்கியம். வாக்கு தான் எல்லாவற்றுக்கும் முதல்ன்னு சொல்றாங்க. வாக்கு சுத்தம் இருந்தால் மற்ற எல்லாம் தானா வருமாம்.
தேவாகமத்தில் ஒரு வசனம்: “ஆதியிலே ஒரு வார்த்தை இருந்தது; அது தேவனிடத்திலே இருந்தது; அது தேவனாய் இருந்தது”. ன்னு இருக்கு.
நம்ம வேதங்களிலும், முதல் தேவதையாய் கூறிப்பிடப்படுவது “வாக்தேவதை”.
பஞ்சபூதத் தத்துவங்களில் மேல்நிலையில் இருப்பது ஆகாயம். வாக்கு இருப்பதும் அதில் தான். உலகம் எல்லாம் பல ஆராய்ச்சிகள் நடக்குது.
‘வாக்கை’ப் பற்றி சமயம் கிட்டும் போது இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.
திருக்குறள் ஒரு சாதாரணமான அறநூல் இல்லைன்னு மட்டும் புரியுது.
இதைப் பற்றி ஔவையார் பெருந்தகை ‘நான்மறை முடிவு’ ன்னு சொல்றாங்க. இதை விரித்தாலும் விரியும்.
இது நிற்க. வாக்குச் சுத்தம் எல்லாவற்றுக்கும் முதல்ன்னு அறிஞர் பெருமக்கள் சொல்றாங்க. அதை அப்படியே எடுத்துக்கலாம். நாம அந்த கருத்து என்னன்னு பார்க்கலாம்.
மழைக்குகூட அறத்தின் முற்றத்தில் ஒதுங்காதவன், மற்றவங்களைப் பற்றி புறம் கூறாமல் இருந்தால் அதுவே போதும். அவன் நல்லவன்னு நம்ம பேராசான் சொல்கிறார்:
“அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது.” குறள் 181: அதிகாரம் - புறங்கூறாமை
அறம்கூறான் அல்ல செயினும்=அறம் ங்கிற வார்த்தையை வாயால்கூட சொல்லாதவன், பல அறமற்ற காரியங்களைச் செய்தாலும்கூட; அவன் புறம்கூறான் என்றல் இனிது = புறம் பேசவில்லை என்றால் அவன் நல்லவன்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்
Comments