14/08/2021 (172)
உயிர்கள் உய்ய உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருட்கள் நான்கு. அவையாவன: அறம், பொருள், இன்பம், வீடு. இவை நான்கும் புருடார்த்தங்கள் என்று அழைக்கப்படுகிறது.
இதில் ‘வீடு’ என்பது நேரடியாக விவரிக்க முடியாதது. வீட்டுப் பேறு என்பதுதான் உயிர்களுக்கு முக்தி நிலை என்கிறார்கள்.
கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை. விண்டுதல் என்றால் விவரித்தல்.
ஆகையால், வீட்டிற்கு தனியாக ஒரு பாலினை அமைப்பதைத் தவிர்த்துவிட்டு குறிப்புகளால் அங்காங்கே சுட்டியுள்ளார் நம் வள்ளுவப் பெருந்தகை.
எனவே திருக்குறள் முப்பாலனது!
அந்த முப்பால்களும், அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்ற ஒழுங்கிலே அமைத்துள்ளார்.
என்ன அடிப்படை என்றால் அதனால் விளையும் பயன்களைக் கருதி அவ்வாறு ஒழுங்கு படுத்தியிருக்கிறார் நம்ம பேராசான் என்கிறார்கள் அறிஞர்கள்.
திருக்குறளைக் கற்பதால் என்னென்ன பயன்கள் விளையும் என்றால் இம்மைப் பயன் – இந்த உலகத்திலேயே அடையக்கூடியவை, மறுமைப் பயன் – இந்த உலகத்தை நீத்த பிறகு வரும் பயன்கள், வீடும் எய்தலாம் – உண்மைப் பயன்.
என்ன நுட்பம் என்றால், அறத்துப்பாலின் மூலம் இம்மை, மறுமை, வீடு ஆகிய மூன்றினையும் அடையலாம். பொருட்பாலின் வழி நின்றால் இம்மை, மறுமைப் பயன்களைப் பெறலாம். இன்பத்துப்பாலின் வழியாக இம்மையில் இன்பம் எய்தலாம்! எது எது வேண்டுமோ அது அது உங்கள் சாய்ஸ் (choice)! அதனால்தான், அறம், பொருள், இன்பம் என்ற முறைமையில் அமைத்துள்ளாராம். என்ன அழகு! என்ன ஒழுங்கு!
அறத்துப்பாலிலே நான்கு இயல்கள் என்று நமக்குத் தெரியும். பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல். பாயிரவியல் அனவருக்கும் பொது. அது மட்டுமல்லாது பாயிரம்தான் நூலுக்கு அடிப்படை. ‘ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே’ என்கிறது நன்னூல். முன்னுரை, முகவுரை, என்னுரை என்று தற்காலத்தில் வழங்கிவருவதைப் பாயிரம் என்று அறிந்துகொள்ளலாம். பாயிரத்துக்கென்று இலக்கணங்கள் இருக்கின்றன. அந்த இலக்கணத்தைத் தகர்த்தவர்தான் நம் பேராசான். பாயிரத்திலே நூலாசிரியரின் குறிப்பு இருக்கும். அதைத் தவிர்த்துவிட்டார். இது நிற்க.
பாயிரவியலின் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களையும், நாம் ஒருவாறு முழுமையாகப் பார்த்துவிட்டோம். நம்மை நாமே பாராட்டிக் கொள்வோமாக!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments