13/01/2024 (1043)
அன்பிற்கினியவர்களுக்கு:
இன்னா செய்யாமையைத் தொடர்ந்து கொல்லாமையை வைக்கிறார்.
துறவறவியலை விரதம், ஞானம் என இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளார் என்று கண்டோம். காண்க 04/12/2023.
விரதம் என்பது தமது தகுதிக்கு ஏற்றவாறு விதிக்கப்பட்ட அறங்களைச் செய்தலும், விலக்கப்பட்ட அறமல்லாதவற்றைத் தவிர்த்தலுமாம். விரதத்தில் இறுதி அதிகாரம் கொல்லாமை. இது துறவறத்தின் உயரிய படிநிலை. இதிலிருந்து ஞானம் தோன்றுகிறது.
கொல்லாமை என்பது எந்த உயிர்களையும் கொல்லாதிருத்தல். இது துறவறப் பாதையில் உள்ளவர்களுக்கு மிக முக்கியம். இது இயலுமா?
இயலும் என்றே சொல்ல வேண்டும். பிற உயிரினைக் கொன்றுதான் நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சில விலங்கினங்கள் வேண்டுமானால் தவிர்க்க இயலா. அவையும், அடுத்த வேளை உணவிற்காக ஓர் உயிரைக் கொன்று குளிர்சாதனப் பெட்டிகளில் அடைத்து வைத்துக் கொள்வதில்லை!
மனிதன் தனக்குத் தேவையான உணவுகளை, எந்த உயிரினையும் கொல்லாமல், தானே ஆக்கிக் கொள்ள முடியும். இதைத் தவிர, மற்ற உயிரினத்திற்கும் நமக்கும் பெரிய வேறுபாடு கிடையாது.
இன்னுமொரு வேறுபாடு உள்ளதா என்று கேட்டால், மனிதன்தான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலாம். எல்லா உயிர்களும் தழைக்க வழி செய்யலாம். இதுவும், மனிதனுக்குக் கிடைத்த மாபெரும் வரம். பிற உயிர்களுக்குக் கிடைக்கா வரம்.
இந்த இரு பெரும் வேறுபாடுகளைத் தவிர்த்து ஏனைய வேறுபாடுகள் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள ஏற்பட்ட கற்பிதங்களே!
நாம்தான் பகுத்துண்டு பல்லுயுர் ஓம்புதலை விட்டுவிட்டு மிகுத்துண்டு மிதப்பாய் போகிறோம்! மேலும், நமக்குதான் அறிவு அதிகம் என்றும் சொல்லிக் கொள்கிறோம்.
ஐந்து அறிவு, ஆறு அறிவு என்பெதெல்லாம் நாம் வகுத்து வைத்திருக்கும் பாகுபாடு. நம்மை நாமே உயர்ந்த இனம் என்று மார்தட்டிக் கொள்ள நாமே செய்த ஒரு ஏற்பாடு. எல்லா உயிர்களுக்கும் எல்லா விதமான அறிவுகளும் இருக்கும்.
என்ன, நமக்கு அதனை அறியும் ஆற்றல் இல்லை என்பதுதான் உண்மை.
பிற உயிரினங்கள் பேசாதா என்ன? பேசும். அதன் மொழியை நாம் கற்கவில்லை அவ்வளவே! சிந்திக்கவில்லையா என்ன? சிந்திக்கிறது. ஆனால், நாம் அவை சிந்திக்கவில்லை என்று சாதிக்கிறோம். இதிலிருந்து என்ன தெரிகிறது, நாம்தாம் சிந்திக்க மறுக்கிறோம்.
இயற்கை என்பதே அனைத்து உயிர்களும் இயைந்துவாழும் ஒரு சூழல் என்றுதான் பொருள்படும்.
சரி, இவ்வளவு காலம்தான், ஏதேதோ காரணங்களால் உயிர்களைக் கொன்று உண்டு வாழ்ந்துவிட்டாய். இந்த ஓய்வெடுக்கும் பருவத்திலாவது கொல்லாமையைக் கடைபிடிக்க மாட்டாயா என்ற வினாவைத் தொடுத்ததோடு மட்டுமல்லாமல் கொல்லாமையால் வரும் பயன்களை நமக்கு எடுத்துக்கூறி நம்மை உயர்த்த நினைக்கிறார் நம் பேராசான்.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். – 321; - கொல்லாமை
கோறல் = கொல்லுதல்; அறவினை யாதெனின் கொல்லாமை = அறச்செயல் எது என்று கேட்டால் அது கொல்லாமை; கோறல் பிறவினை எல்லாம் தரும் = பிற உயிர்களுக்கு ஊறு விளைவிப்பது என்பது அறமல்லாத செயல்கள் அனைத்திற்கும் வழி வகுக்கும்.
அறச்செயல் எது என்று கேட்டால் அது கொல்லாமைதான். பிற உயிர்களுக்கு ஊறு விளைவிப்பது என்பது அறமல்லாத செயல்கள் அனைத்திற்கும் வழி வகுக்கும்.
கோறல் என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். நாம் வாழ பிற உயிரினங்களைக் நேரடியாகக் கொல்கிறோம். நம் சக மனிதர்களைக் கொல்லும் வழிகள் இப்போது ஏராளம். போர் காலங்களில் நேரடியாக மனித உயிர்களைக் கொல்கிறார்கள்.
நாம் வளர்ந்துவிட்ட சமுகமல்லவா, நாம் நேரடியாகத்தான் கொல்ல வேண்டும் என்றில்லை. உரிமைகளைப் பறி; குரல் வளையை நசுக்கு; வருவாயைத் தடு; கை ஏந்தும் நிலைக்குத் தள்ளு; ஒருவரது நன்மதிப்பைக் கொல் (Character assassination); நடை பிணமாக்கு என்றெல்லாம் பல வழிமுறைகள் உள்ளன. இவையெல்லாம் கோறலில் அடங்கும்.
கோறல் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஓர் உயிர்க்கு ஊறு விளைவிப்பது. இதனைத் தவிர்க்க என்கிறார்.
இதைத்தான் முன்பே குறித்தார். காண்க 20/12/2023. மீள்பார்வைக்காக:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. - 261; - தவம்
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Opmerkingen