08/12/2023 (1007)
அன்பிற்கினியவர்களுக்கு:
குறள் 244 இல் அருள் உடைமையை ஒழுகுபவர்களுக்குத் தீயவைத் தீண்டா என்றார். வரும் குறளில் அவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை என்கிறார். அது மட்டுமல்ல நிலைத்தும் இருப்பர்.
உங்களுக்குச் சான்று வேண்டுமென்றால் இதோ தருகிறேன். அது வேறு ஒன்றுமில்லை, இந்த உலகமே சான்று. உலகம் அனைவரிடமும் அருளைனைக் கொண்டு ஆட்சி செய்வதால் அழிவேதும் இல்லாமல் நிலைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் நம் பேராசான்.
அது எப்படி இந்த உலகம் உவமையாயிற்று? இந்தக் கேள்வி எழாமல் இல்லை.
இதற்கு நம் பேராசான் சொல்லும் கூடுதல் செய்தி என்னவென்றால் இந்த உலகம் இயங்குவதால் காற்று தோன்றுகிறது.
அந்தக் காற்றினை அது வாரி வழங்குவதால் உலகம் செழிப்பாக உள்ளது. காற்று இல்லையேல் உயிர்கள் இல்லை. இக் காற்றே உலகம் விடும் மூச்சுக் காற்று. இக் காற்றானது எதையும் சமன் செய்யக் கூடியது. நல்லனவற்றைப் பரப்பும்; அல்லனவற்றின் வீரியத்தைக் குறைக்கும். இந்த உலகம் தன்னைத்தானே சமன் செய்து கொள்ளும் வல்லமை பெற்றது என்பது கண்கூடு! எனவே, இந்த உலகிற்கு ஒருபோதும் அல்லல் இல்லை. அழிவும் இல்லை.
அதைப் போன்றே அருள் உடைமையை ஒழுகுபவர்களின் மூச்சுக் காற்றும் நல்லதைப் பரப்பும்; அல்லனவற்றை விலக்கும். அதனைத் தொடர்ந்து செய்வதில் அவர்களுக்கு எப்போதும் அல்லல் இல்லை. அவர்களின் உடல் அழியலாம். ஆனால், அவர்களின் மூச்சுக் காற்று என்றும் இயங்கிக் கொண்டே இருக்கும். அது, இந்த உலகம் போல நிலைத்து இருக்கும். அதற்கும் அழிவில்லை.
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி. – 245; - அருள் உடைமை
அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை = அருள் உடைமையை ஒழுகுபவர்களின் மூச்சுக் காற்று நல்லதைப் பரப்பும்; அல்லனவற்றை விலக்கும். அதனைத் தொடர்ந்து செய்வதில் அவர்களுக்கு எப்போதும் அல்லல் இல்லை. அந்த மூச்சுக் காற்றுக்கு அழிவும் இல்லை; வளி வழங்கு மல்லல் மா ஞாலம் கரி = (இதற்குச் சான்று வேண்டுமென்றால்,) அனைவர்க்கும் உயிர் மூச்சான காற்றினை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்த உயரிய உலகமே சான்று. இந்த உலகிற்கு அதில் ஒருபோதும் அல்லல் இல்லை. அழிவும் இல்லை.
அருள் உடைமையை ஒழுகுபவர்களின் மூச்சுக் காற்று நல்லதைப் பரப்பும்; அல்லனவற்றை விலக்கும். அதனைத் தொடர்ந்து செய்வதில் அவர்களுக்கு எப்போதும் அல்லல் இல்லை. அந்த மூச்சுக் காற்றுக்கு அழிவும் இல்லை. இதற்குச் சான்று வேண்டுமென்றால், அனைவர்க்கும் உயிர் மூச்சான காற்றினை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்த உயரிய உலகமே சான்று. இந்த உலகிற்கு அதைத் தொடர்ந்து செய்வதில் ஒருபோதும் அல்லல் இல்லை. அழிவும் இல்லை.
அருளுடையவர்களின் மூச்சுக் காற்று என்பது அவர்களுடைய சிந்தனைகள் மற்றும் செயல்களின் வெளிப்பாட்டின் கூறியீடு. அவ்வளவே.
இந்தக் குறளை முன்பொரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 05/03/2021. அப்போது:
அருளைக்கொண்டு ஒழுகுபவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை, எது போல என்றால், எந்த வித ஆதாரமும் இல்லாமல், துன்பத்திற்கு ஆட்படாமல், தன் மட்டிலே காற்றின் துணை கொண்டு இயங்குகின்ற, செழிப்பான உலகத்தைப் போல என்றோம்.
உலகம் இயங்குவதால் காற்றா? காற்றினால் உலகம் இயங்குகிறதா? இரு வேறு கருதுகோள்கள். இரு வேறு சிந்தனைகள்.
நம் பேராசான், வளி வழங்கும் ஞாலம் என்றதனால் காற்றை வழங்கும் உலகம் என்பதுதான் பொறுத்தமாகத் தோன்றுகிறது. அப்படித்தான் இருக்கவும் முடியும்.
உலகம் தன் மட்டில் ஏற்படும் விசையினால் இயங்குகிறது. இந்த விசை ஏற்பட அண்ட வெளியில் ஆயிரம் காரணிகள் இருக்கலாம்!
குறிப்பாகப் பால் வெளியில் தனித்தனியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் மற்றவற்றின் மீது செலுத்தும் மையவிலக்கு (Centrifugal) மைய நோக்கு (Centripetal) விசைகளின் நிகர விசையாக இருக்கலாம் (Net force). சூரியன் உள்ளிட்ட அனைத்துமே சுற்றிக் கொண்டுள்ளன என்பதுதான் அறிவியலாளர்கள் கண்டறிவது.
எனவே இன்றைய உரை ஏற்புடையதாக இருக்கலாம். உங்களின் கருத்துகளைத் தெரிவிக்க.
இந்தப் பிரபஞ்சத்தின்(Universe) தோற்றம் என்பது அறிவியலாளர்களின் கருது கோள்களாகவே (hypotheses) இருக்கின்றன. அவை யாவன: பெரு வெடிப்பு (Big bang), நிலையான நிலை பிரபஞ்சம் (Steady State Universe), ஊசலாடும் பிரபஞ்சம் (Oscillating Universe), பெரு வெடிப்பிற்குப் பின் எப்போதும் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம் (Eternal Expanding Universe), மேலும் பல.
இந்தக் கருது கோள்களெல்லாம் எவ்வாறு இருப்பினும், இந்த உலகம் தன் மட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை!
இது நிற்க.
ஞாலம் ஆகுபெயர். ஞாலம் என்ற சொல் இந்த உலகில் வாழும் மாந்தர்களுக்கு ஆகி வந்துள்ளது என்று அறிஞர் பெருமக்கள் சிலர் உரை காண்கிறார்கள். அவர்களின் உரைகள் வருமாறு:
மூதறிஞர் மு. வரதராசனார்: அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
ஞாலம் = உலகத்தில் வாழ்வோர்
பரிமேலழகப் பெருமான்: அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது; அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று.
ஞாலம் = உலகத்து வாழ்வார்.
புலவர் வெற்றியழகனார்: உயிரிரக்க அருளுடையவராக விளங்குபவர்க்குத் துன்பம் என்பதே இல்லை. அதற்குக் காற்றுலவும் இப்பேருலகினில் வாழ்கின்ற சான்றோரே சான்றாக விளங்குகின்றனர்.
ஞாலம் = உலகத்தில் வாழும் சான்றோர்.
ஒவ்வொரு குறளும் ஆராயத்தக்கன என்பதில் ஐயம் இல்லை!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários