14/10/2022 (592)
அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தின் முதல் குறள் நாம் ஏற்கனவே பார்த்ததுதான். காண்க: 01/09/2021 (190).
“அலர் எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர் அறியார் பாக்கியத்தால்.” --- குறள் 1141; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் = நாம உயிரைக்கூட விட்டுடலாம் என்று இருந்த நிலை, பலருக்குத் தெரியவில்லை. அது நம்ம பாக்கியம்; அலர் எழ ஆருயிர் நிற்கும் = அந்த ஊராரின் பழிப் பேச்சுகளால்தான் இப்போ ஒரு வழி பிறக்கப் போகிறது, நம்ம உயிரும் நம்மிடை இருக்கிறது.
இதற்கு அடுத்தக் குறளும் அதே.
அவன்: அந்த அருமையான பூ போன்ற கண்களை உடையவளை அடைவது அருமை என்று நினைந்திருந்தேன். (இங்கே ‘அருமை’ என்பது ‘கிடைப்பதற்கு அரிது’ என்னும் பொருளில் வருகிறது). ஆனால் இந்த ஊர் மக்கள் பழி பேசுவதால் அவள் எனக்குக் கிடைப்பது எளிதாகிவிட்டது. ஊரார் வாழ்க!
“மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்தது இவ்வூர்.” --- குறள் 1142; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது = மலர்அன்ன கண்ணாளை அடைவது கடினம் என்று நான் துவண்டு கொண்டு இருப்பது நல்ல வேளையாக இந்த ஊர் அறியாது இருக்கிறது;
அலர் எமக்கு ஈந்தது இவ்வூர் = அதனால் இந்த ஊர், பழிக்கும் பேச்சுகளை எங்களுக்கு ஒரு அருட்கொடையாக ஈந்தது.
தடைக் கற்களே படிக்கற்கள் ஆகுக!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments