14/02/2022 (353)
திருவள்ளுவப் பெருமான் ரொம்ப கெட்டின்னு நமக்குத் தெரியும். அறத்துப் பாலிலும், பொருட் பாலிலும் இருக்கும் பெரும்பாலானக் குறள்களில், தானே சொல்வது போலவோ அல்லது பொதுவாகச் சொன்னது போலவோதான் குறள்களை அமைத்திருப்பார்.
ஆனால். இன்பத்துப் பாலில் உள்ள குறள்களில் அதில் வரும் பாத்திரங்களைப் பேச விட்டு விடுவார். தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல ஒதுங்கிக் கொள்வார். இது நிற்க.
அகம் காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. அகம் இரு வகைப் படும். ஒன்று: களவு; இரண்டு: கற்பு.
‘களவு’ என்றால் திருடு என்ற பொருள் இல்லை இங்கே!
களவு என்றால் தாய், தந்தை, சுற்றத்திற்குத் தெரியாமல் காதல் கொள்வது.
‘கற்பு’ என்றால், களவாக வைத்திருந்தக் காதலை வெளிப்படுத்தி மணம் முடித்து மகிழ்வது.
வெளிப்படையாக இருத்தல் கற்பு, அவ்வளவுதான்.
மனிதர்களின் வாழ்க்கை களவில் தொடங்கி கற்பில் வளருவதுதான் இயற்கை. இப்படித்தான் தமிழ் இலக்கியங்களும், மற்ற பிற மொழி இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. அவ்வாறு இல்லாது போனால்தான் தாய், தந்தை, சுற்றத்தின் உதவி தேவைப்படும்.
சுதந்திரம் பேசும் இந்த சம காலத்தில், மனிதர்களின் அடிப்படை உரிமை கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது.
சரி, அவங்க அவங்க விருப்பத்திற்கு இருந்தால் சங்கடம் இல்லையா? என்று கேட்டால், அங்கேதான் தமிழ் இலக்கியங்கள் வேறுபடுகிறது.
களவிற்கும், கற்பிற்கும் அறங்களை வகுக்கிறது. என்னது அது? என்று கேட்பீர்களாயின் அதுதான் ‘அறத்தொடு நிற்றல்’ என்ற ஒரு பகுதி. இரண்டு பிரிவினருக்கு மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றி இருப்போர்களும் எவ்வாறு அவர், அவர் அறங்களைப் பேண வேண்டும் என்று அழகாக, தனித்தனியாக வகுத்து வைத்துள்ளன தமிழ் இலக்கியங்கள்.
எழுதி வைத்தது மட்டுமல்லாமல் அதை அந்தக்கால கல்வித்திட்டத்தில் இணைத்து, கற்பித்தும் வந்துள்ளது. ஆனால், இப்போதுதான், இந்த அறிவியல் சமுகம் “பாலியல் கல்வி’யை பாடத்திட்டத்தில் இணைக்கப் போராடுகிறது!
நல்ல வேளை இவர்கள் நினைக்கும் பாடத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது!
‘Something’ is better than ‘nothing’ என்போம்.
ஆனால், ‘Nothing’ is better than ‘nonsense’ -
'ஒன்றுமில்லை' என்பது 'முட்டாள்தனத்தை' விட சிறந்தது என்று தோன்றுகிறது.
இன்றைக்கு என் ஆசிரியப் பெருமானார் வருகை தராத காரணத்தால் அடியேனின் கருத்துகளை அளந்து விட்டுள்ளேன். பொறுக்க. உங்கள் கருத்துகளையும் பதிவிடுக.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments