02/01/2024 (1032)
அன்பிற்கினியவர்களுக்கு:
களவெடுத்துப் பழகிய கைகள் ஓயா. மிகச் சுலபமான வழியாகத் தோன்றும். அதன்மேல் விருப்பம் கூடும். சிறிய செயல்; பெருத்த இலாபம்! அதனால், வரும் பொருளுக்கு மதிப்பு இருக்காது. அவர்கள் ஒரு கட்டுக்குள்ளும் செலவு செய்யமாட்டார்கள். அவர்களின் செலவினங்கள் அறத்தின்பாலும் இருக்கா. பொருள் வரும், அழியும். மீண்டும் களவெடுக்கத் தூண்டும். இது ஒரு புதைகுழி.
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். – 286; - கள்ளாமை
களவின்கண் கன்றிய காதலவர் = களவெடுத்தலின் மீது நாட்டம் அதிகரிக்க அதிகரிக்க; அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் = விதிக்கப்பட்ட அற வழிகளில் நின்று செயல்பட முடியாத நிலையில் இருப்பர். (அழிவென்னும் புதைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சீரழிவர்.)
களவெடுத்தலின் மீது நாட்டம் அதிகரிக்க, அதிகரிக்க, விதிக்கப்பட்ட அற வழிகளில் நின்று செயல்பட முடியாத நிலையில் இருப்பர். (அழிவென்னும் புதைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சீரழிவர்.)
இந்தக் குறளுக்கு இன்னுமொரு வகையில் பொருள்:
விதிக்கப்பட்ட அற வழிகளில் நின்று செயல்பட முடியாத நிலையில் இருப்பர்களுக்குக் களவெடுத்தலின் மீது நாட்டம் அதிகரிக்கும்.
கோழியில் இருந்து முட்டையா? முட்டையில் இருந்து கோழியா? என்ற விதத்தில் அமைந்திருக்கும் குறள்.
களவெடுத்தல் முற்றி முதிர்ந்து நிற்பது, அறநெறிப் பிறழ்வாலா?
அறநெறிப் பிறழ்வினால் களவெடுத்தலில் நாட்டம் அதிகரித்ததா?
இந்தக் கேள்விகள் நம் பேராசானுக்குத் தோன்றியுள்ளது. எது முதல் என்பதனை அடுத்து வரும் குறள்களில் மிகவும் உறுதியாகத் தெளிவுபடுத்துகிறார்.
களவிற்கு எதிர்ச்சொல் அளவு என்கிறார். அளவாக வாழ்ந்தால் களவு தேவையில்லை என்று எடுத்துச் சொல்கிறார். இந்த அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களில் ஐந்து குறளகளில் களவினைத் தடுக்க அளவு என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
குறள் 283 இல், களவானது அளவிறந்து கெடுக்கும் என்றார். களவினில் ஆர்வம் மேலோங்குமானால் அளவாக வாழ முடியாது என்றார் குறள் 286 இல்.
அடுத்துவரும் மூன்று குறள்களிலும் உள்ள அளவினையும் பார்ப்போம்.
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில். – 287; - கள்ளாமை
கார் அறிவு = பிறழ் அறிவு, மயங்கிய அறிவு; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் = இதுதான் நமக்கு வகுத்த அளவு என்னும் அற வரம்பினை உணர்ந்து செயல்படுவர்களிடம்; களவென்னும் கார் அறிவு ஆண்மை = களவென்னும் பிறழ் அறிவின் வீச்சு; இல் = இருக்காது.
இதுதான் நமக்கு வகுத்த அளவு என்னும் அற வரம்பினை உணர்ந்து செயல்படுவர்களிடம் களவென்னும் பிறழ் அறிவின் வீச்சு இருக்காது.
அளவறிந்தார் நெஞ்சத் தறம் போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. – 288; - கள்ளாமை
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் = அற எல்லைகளை அறிந்தவர்களின் நெஞ்சத்தில் எப்படி அறம் தங்கி நிற்குமோ; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு = களவினைச் சுவைத்தவர்களின் நெஞ்சத்தில் வஞ்சனை குடிகொண்டு இருக்கும்.
அற எல்லைகளை அறிந்தவர்களின் நெஞ்சத்தில் எப்படி அறம் தங்கி நிற்குமோ, அது போலக் களவினைச் சுவைத்தவர்களின் நெஞ்சத்தில் வஞ்சனை குடிகொண்டு இருக்கும்.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். – 289; - கள்ளாமை
வீவர் = கெடுவர்; களவல்ல மற்றைய தேற்றாதவர் = களவினைத் தவிர ஏனைய அறச் செயல்களில் தமது மனத்தினைச் செலுத்தாதவர்கள்; அளவல்ல செய்து ஆங்கே வீவர் = அற அளவுகளை மீறிச் செயல்படுவார்கள். அதனால், ஆங்கேயே வீழ்ந்துவிடுகிறார்கள்.
களவினைத் தவிர ஏனைய அறச் செயல்களில் தமது மனத்தினைச் செலுத்தாதவர்கள், அற அளவுகளை மீறிச் செயல்படுவார்கள். அதனால், ஆங்கேயே வீழ்ந்துவிடுகிறார்கள்.
களவு மனத்தில் எழும்போதே வீழ்ந்துவிடுகிறார்கள் என்கிறார்.
எனவே, அளவினை மனத்தினில் வைப்போம். அனைத்திற்கும் ஓர் அளவு இருக்கத்தானே செய்கிறது.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments