20/02/2021 (34)
நன்றி, நன்றி, நன்றி
இதையெல்லாம் செய்யாம இருந்தாலும் அறமே!
நம்மாளு: விலக்கியன ஒழித்தல் அறம்னு சொன்னீங்க. எதையெல்லாம் விலக்கணும்?
ஆசிரியர்: நல்ல கேள்வி. தவிர்க்க வேண்டியதை, வள்ளுவப்பெருமான், நான்கு செயல்களிலேயே அடக்கிடறார். ஒன்று நாம் ஏற்கெனவே பார்த்தது ‘பொறாமை’. மற்ற மூன்று: பேராசை, கோவம், கடுஞ்சொல்! பேராசையை நீக்கினால் பொறாமையும், கோவமும் வராது; கோவத்தை தவிர்த்தா கடுஞ்சொல் வரவே வராது. இது எல்லாமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
இது எல்லாமே மனதோட தொடர்பு உடையது. குறள் 34 லே ‘மனத்துக்கண் மாசு இலன் அனைத்து அறன்’ ன்னு சொன்னவர் அந்த மாசுக்கள் என்னங்கறதை தான் குறள் 35 இல் பட்டியல் போடறார்.
அதுக்கு முன்னாடி, ‘செல்லா நின்ற இத் தாவரசங்கமத்துள்’ இந்த வரியிலே ‘செல்லா நின்ற’ க்கு என்ன பொருள்ன்னு சொல்லு.
நம்மாளு: (மைண்ட் வாய்ஸ் – out of syllabus sir) ‘செல்லாம நின்னுட்டான்’ சரியா ஐயா?
ஆசிரியர்: சரி இல்லை. ‘செல்லா நின்ற’ ன்னா ‘செல்கின்ற’ ன்னு பொருள். ‘ஆநின்று’ ‘கின்று’, ‘கிறு’ – இந்த மூன்றும் நிகழ் காலம் காட்டும் வினைமுற்று. (எ.கா: உண்ணாநின்றான், உண்கின்றான், உண்கிறான்). இப்போ இந்த ‘ஆநின்று’ பயன் பாட்டுல இல்லை. அதானாலே உங்களுக்கு தெரியலை. பரவாயில்லை. இது நாம் பார்க்க போகிற 35 வது குறளுக்கு தேவை அதானாலே இங்கே சொன்னேன். சரி, அந்த குறளை சொல்லு.
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்” ---குறள் 35
(அழுக்காறு = பொறாமை; அவா = பேராசை; வெகுளி = கோபம், சினம்; இன்னாச்சொல் = கடுஞ்சொல்; இழுக்கா = இழுக்கி, தவிர்த்து, நீக்கி; இயன்றது = செய்வது; ஒழுக்கம் –ன்ற சொல்லுக்கு எதிர்மறை ‘இழுக்கம்’; ஒழுக்கம் = இடையறாது கடை பிடிக்க வேண்டியது; இழுக்கம் = எப்பவுமே கடை பிடிக்க கூடாதது)
நம்மாளு: தள்ள வேண்டியதை தள்ளிட்டாலே அறம் பெருகும் சரியா ஐயா?
ஆசிரியர்: சரியா சொன்ன! இதை வள்ளுவப்பெருந்தகை சொல்லியிருக்காரு ‘தள்ளவேண்டியதை தள்ள அறம் பெருகும்ன்னு …” அது என்ன குறள்ன்னு பார்த்து வை. நாளைக்கு பார்க்கலாம். கண்டுபிடிப்போம் வாங்க!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன்,
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments