top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

அழுக்காற்றின் அல்லவை ... 164, 166, 1144

04/11/2023 (973)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

தவளையார் தனது பொறாமையால் வெடித்துச் சிதறினார். அதைப் போலப் பொறாமையால் வீங்கிச் சிதறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.


அதனை உணர்ந்தவர்கள் பொறாமை கொண்டு எந்தச் செயல்களும் செய்யமாட்டார்கள் என்று சொல்கிறார்.


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.” --- குறள் 164; அதிகாரம் – அழுக்காறாமை


இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து = பொறாமையினால் செய்யப்படும் தீச் செயல்கள் துன்பத்தைத் தருவன என்பதை அறிந்திருப்பதனால்; அழுக்காற்றின் அல்லவை செய்யார் = (அறிவுடையார்) பொறாமையினால் உந்துதலால் ஏற்படும் எண்ணங்களை மற்றும் செயல்களைத் தவிர்ப்பர்.


பொறாமையினால் செய்யப்படும் தீச் செயல்கள் துன்பத்தைத் தருவன என்பதை அறிந்திருப்பதனால், அறிவுடையார், பொறாமையின் உந்துதலால் ஏற்படும் எண்ணங்களை மற்றும் செயல்களைத் தவிர்ப்பர்.


பொறாமையால், தாம் அல்லன செய்வது மட்டுமல்லமால் மற்றவர்கள் செய்யும் நல்லனவைகளையும் விழுந்து தடுப்பார்கள் சிலர். அவர்களின் சுற்றம் உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் என்றார். காண்க 18/02/2021 (32). மீள்பார்வைக்காக:


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.” குறள் – 166; அதிகாரம் – அழுக்காறாமை


அழுக்காறமை அதிகாரத்தில் இருந்து ஒரே தாவாகத் தாவி காமத்துப் பாலில் இருக்கும் அலர் அறிவுறுத்தல் அதிகாரத்திலிருந்து நாம் முன்பு பார்த்து ஒரு குறளைப் பார்ப்போம். காண்க 17/10/2022 (594).


கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.” --- குறள் 1144; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்


எங்கள் நெருக்கம் ஊராரின் பழிப்பேச்சுகளுக்கு (அலருக்கு) ஆளாகி உள்ளது; அது மட்டும் இல்லையென்றால் எங்களின் நோக்கம் தாவி, தாவிச் சென்று சேர வேண்டியவர்களுக்குப் போய் சேராமல் போகும்.


கவ்வை = அலர், பழிப்பேச்சு, கேலிப் பேச்சு; கவ்விது = கவரப்பட்டுள்ளது, ஆளாகி உள்ளது; அது இன்றேல் = அந்த அலர் என்னும் கிண்டல் கேலிப் பேச்சுகள் இல்லையாயின்; தவ்வென்னும் தன்மை இழந்து = தாவி, தாவிச் சென்று சேர வேண்டியவர்களுக்குப் போய் எங்கள் காதலைச் சேராமல் போகும்.


இந்தக் குறளுக்கு பெரும்பாலன அறிஞர் பெருமக்கள் வேறுமாதிரி பொருள் சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக:


மூதறிஞர் மு.வரதராசனார்: எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.


கவ்விது என்பதற்கு வளர்ந்துள்ளது என்றும் தவ்வு என்றால் சுருங்குதல் என்றும் பொருள் எடுக்கிறார்கள்.


ஆனால், நம் பேராசான், தவ்வென்னும் தன்மை இழக்கும் என்பதால் தங்களின் காதலானது தாவிச் சென்று சேர வேண்டியத் தன்மையை இழக்கும் என்பது பொறுத்தமாகவே தெரிகிறது. அதே போன்று கவ்வையால் கவ்விது என்பதும் அலருக்கு ஆளாகி உள்ளது என்பதும் பொறுத்தமாகவே தோன்றுகிறது.


இது நிற்க.


சரி, இந்தக் குறளுக்கு அழுக்காறாமையில் என்ன அவசியம் என்பதைத் தொடர்ந்து சிந்திப்போம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Comments


Post: Blog2_Post
bottom of page