06/09/2022 (556)
அழகிய மலர்களைக் காணும் போது கண்களால் இன்பம்;
இனிய இசையைக் கேட்கும்போது காதுகளால் இன்பம்;
நல்ல உணவுகளை உண்ணும்போது வாயினால் இன்பம்;
நறுமனங்களை நுகர்வதால் மூக்கினால் இன்பம்;
இளம் தென்றல் நம்மைத் தீண்டும்போது உடலினால் இன்பம்…
இப்படியெல்லாம் நாம் ஐந்து புலன்களைக் கொண்டு தனித்தனியாகவும் இவற்றில் சிலவற்றை கூட்டாகவும் சில நேரம் இன்பங்களை அனுபவிக்கலாம்.
ஆனால், ஐந்து புலன் இன்பங்களையும் ஒரு சேர, ஒரே நேரத்தில் அனுபவிக்க முடியுமா?
அதற்கு வழி இருக்கிறதா என்றால் அதற்கு ஒரே வழிதான்.
அதுதான் கூடல் இன்பம். ஆனால் அந்த இன்பத்தை ‘பேரின்பம்’ என்று சொல்லாமல் ‘சிற்றின்பம்’ என்று சொல்கிறார்கள்! என்ன மனுசங்க இவங்க? (அது ஏன் என்று பிறகு பார்ப்போம்)
அடடா, ஓ அடடா அந்த இன்பத்தை இப்போதுதான் என்னவளிடம், அந்த வளை குலுங்க வளையவரும் அவளிடம் கண்டேன் என்பது போல இந்தக் குறள்:
“கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண் தொடி கண்ணே உள.” --- குறள் – 1101; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
உயிர்த்து = நுகர்ந்து; ஒண் தொடி = மினு மினுக்கும் வளையல், ஒளி பொருந்திய வளையல்
இந்தக் குறளை ஏற்கனவே இருமுறை சிந்தித்துள்ளோம். காண்க 19/02/2022 (358), 11/06/2022 (470).
மேலும் அவனின் மகிழ்தல் தொடர்கிறது.
உடலுக்கு வரும் பிணிகள் பிற மருந்துகளால் அழியலாம்! அது என்ன பிற மருந்து? அதாவது, அந்த பிணிக்கு எதிரான ஒன்றைக் கொடுத்தால் சரியாகலாம் அல்லது மட்டுப்படலாம்.
ஆனால், அவள் இருக்கிறாளே அவளால் எனக்கு ஏற்படும் நோய்க்கு அவளைக் காணுவதும் கலப்பதுமே மருந்து. அவளேதான் மருந்து.
அவளால் வருவது ‘நோய்’ என்றும் மற்றவற்றைக் குறிக்கும் போது ‘பிணி’ என்றும் போட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.
பிணி என்பது நம்மை எப்போதும் பீடித்து இருக்கும். நோய் என்பது வரும் போகும். அதான் இந்த நோய்க்கு மருந்து பக்கத்திலேயே இருக்கே!
“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன் நோய்க்குத் தானே மருந்து.” --- குறள் 1102; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
பிணிக்கு மருந்து பிற = குளிர்ச்சிக்கு மருந்து சூடான பொருள். அதாவது பிணிகளுக்கு மருந்து அதன் மாற்றில் இருக்கும்;
அணியிழைதன் நோய்க்குத் தானே மருந்து = அவளினால் வரும் நோய்க்கு அவளே மருந்தாக இருக்கிறாள்.
மன் = ஒழி இசை.
இழை என்றால் வெளிப்படுதல். பஞ்சிலிருந்து வெளிப்பட்டால் அது பஞ்சின் இழை.
அணி என்றால் அழகு, ஒழுங்கு.
அணி இழை என்றால் அழகிலிருந்து வெளிப்பட்ட மிக அழகான அழகு. அதாவது:-
“அழகில் அழகு தேவதை ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை
கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும் கேள்வி ஆனது …”
அருமையான பாடல். ம்ம்.. ம்ம்ம்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
அழகில் அழகு.
(ராஜபார்வை 1981, கவியரசு கண்ணதாசன், இசை ஞானி இளையராஜா, கான கந்தர்வன் யேசுதாஸ்)
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments