17/12/2021 (296)
நட்பாராய்தலைத் தொடர்வோம். கொடுத்தும் கொளல் வேண்டும் என்று குறள் 794ல் சொன்ன வள்ளுவப் பெருந்தகை மேலும் தொடர்கிறார்.
நட்பு வளர வளர உரிமை இருக்கனும். மேம்போக்கான நட்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால், தக்க சமயத்தில் கைகொடுக்குமா என்றால் சந்தேகம்தான். அந்த மாதிரி நட்பு நட்பே இல்லை என்கிறார் நம் வள்ளுவப் பெருமான்.
நல்ல நட்புகள் அரிது என்ற காரணத்தால்தான் ‘நட்பாராய்தல்’ என்ற அதிகாரத்தையே வைத்துள்ளார் என்று நினைக்கிறேன்.
நாம் தவறுவது இயற்கை. உலக நடப்புகளின் அழுத்தத்தால்தான் பலர் மயங்கி விடுகிறார்கள். இதற்கு தவறு என்று பெயர். திருத்த முடியும். சிலர் வேண்டுமென்றே வம்படியாக இருப்பார்கள். அவர்கள் தப்பு செய்கிறார்கள். திருத்துவது கடினம். வருந்த வேண்டியவர்கள் அவர்கள்.
“தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கனும்
தப்பு செய்தவன் வருந்தியாகனும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி …” கவிஞர் வாலி; பெற்றால்தான் பிள்ளையா (1966)
ஒரு தவறு நிகழப்போகிறது எனும்போது அவர்கள் மனம் நெகிழுமாறு, உணருமாறு சொல்லி தடுப்பானாம் நல்ல நண்பன். அதற்கும் சரிப்பட்டு வரவில்லையென்றால் அடுத்த படிநிலைகள் இருக்கு.
சாம, தான, பேத, தண்டம் என்று கடைசிவரைச் சென்று இடித்து சொல்லும் உறுதியும் திறனும் இருக்கனுமாம் நம் நண்பர்களுக்கு. அந்த மாதிரி நண்பர்களைக் கண்டுபிடித்து நம்ம பக்கத்தில் வைத்துக் கொள்ளனுமாம். இந்த மாதிரி நண்பர்கள் அரிதான வகையைச் சேர்ந்தவர்கள்.
பக்கதிலே வைத்துக் கொண்டால் மட்டும் போதுமா? கிடையாது. அவங்க சொல்றதை நாம கேட்டாதான் பயன்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நான் எது சொன்னாலும் உடனே அதன் மறுபக்கத்தைக் காட்டுவார். ரொம்ப கடுப்பா இருக்கும். இருந்தாலும் யோசிக்க வைக்கும். ஒரு நிதானத்தைக் கொடுக்கும்.
சரி, நாம குறளுக்கு வருவோம்.
“அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.” --- குறள் 795; அதிகாரம் – நட்பாராய்தல்
அல்லது = தவிர்க்க வேண்டியதைச் (செய்ய முயலும் போது); அழச்சொல்லி =உணருமாறு எடுத்துச் சொல்லி; இடித்து = செய்துதான் ஆவேன் என்று நிற்கும் போது ‘இடித்து’; வழக்கு அறிய வல்லார் = உலக வழக்கும் நண்பனின் வழக்கும் அறியும் திறன் கொண்ட கில்லாடிகளின்; நட்பு ஆய்ந்து கொளல் = நட்பினை ஆய்ந்து நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
True No doubt Having yes .men type friends around gives short term pleasure, but at the expense of long term joy ; beyond that brings long term Pain too. But it is not unusual we had seen many political and professional Bosses who had been victim because they were surrounded by yes-men and -women.