top of page
Search

அழல்போலும் மாலைக்கு ... 1228, 25/03/2024

25/03/2024 (1115)

அன்பிற்கினியவர்களுக்கு:

 

எனது அன்பிற்கினிய நண்பர் ஒருவர், நேற்றைய பதிவில் இருந்து சில ஐயங்களை எழுப்பியுள்ளார். அஃதாவது, அழல் போலும் … குறள் 1228 இல் இருந்து.

 

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல் போலும் கொல்லும் படை. – 1228; - பொழுது கண்டு இரங்கல்

 

அவரின் முதல் வினா: "ஆயன் " என்றால் மாடு மேய்க்கும் சிறுவர் என்று பொருள் கொள்ளுதல் சரியா?

 

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்… சூத்திரம் 967, தொல்காப்பியம் – பொருளதிகாரம் பகுதி 1, புலவர் வெற்றியழகனார் உரை.

 

அஃதாவது, ஆடுவர், வேட்டுவர் முல்லை நிலத்தில் வாழ்கின்ற ஆண் மக்களின் தொழில் பெயர்கள்.

 

ஆயர் என்பார் நிரை மேய்ப்பவர்; வேட்டுவர் என்பவர் வேட்டைத் தொழில் செய்வார்.

 

நிரை என்றால் இங்கே கூட்டம், தொகுப்பு என்று பொருள்படும். ஆநிரை என்றால் பசுக்கூட்டம்.

 

ஆயர் என்ற சொல் ‘அன்’ விகுதி பெற்று ஆயன் என்றாகும். ஆயன் என்றாலும் மேய்ப்பவன். ‘அன்’ விகுதியால் வயதில் குறைந்தவர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

 

“மாடு மேய்க்கும்” என்ற சொற்றொடர் அவாய் நிலையால் வந்தது.

அவாய் நிலை என்பது ஒருசொல் தான் உணர்த்தும் சரியான பொருளை வெளிக் கொணர்வதற்கு அருகே இருக்கும் சொல்லினைச் சார்ந்து நிற்கும்.

 

மேய்க்கும் என்றால் எதனை மேய்க்கும் என்று குறிப்பிட, தகுதியான ஒரு பெயர் சொல்லைச் சேர்த்துக் கொள்ளும். எனவே மாடு மேய்க்கும் சிறுவர் என்றாகிறது.

 

ஆடு மேய்க்கும் என்றாலும் தவறில்லை!

 

எனவே, ஆயன் என்றால் மாடு மேய்க்கும் சிறுவர் என்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

 

இரண்டாவது வினா: "போலும் "என்ற சொல் பொருள் தராது என்கிறீர் எப்படி?

 

குறள் வெண்பா ஏழு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது விதி. நம் பேராசான், அந்த ஏழு சீர்களை விடவும் குறைவான சீர்களை வைத்துக் கொண்டே தாம் சொல்ல வந்த கருத்துகளைச் சொல்லிவிடுவார். அப்பொழுது, இலக்கண அமைதிக்காக, பொருள் இல்லா சில சொல்களை சீர்களாக இணைத்துக் கொள்வார். அச் சொல்களை அசை நிலை என்பர்.  

 

அசை நிலை என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச் சொல்லோடும் வினைச்சொல்லோடும் சேர்த்துச் சொல்லப்படுவது. பொருள் இல்லாததாக வரும் சொல் அசைச்சொல் என்பர்.

 

எடுத்துக் காட்டு: கற்றதனால் ஆய பயன்என் கொல்

இங்கே கொல் என்ற சொல்லிற்குப் பொருள் இல்லை.

 

யா, கா, பிற, பிறக்கு, போ, சின், போலும், இருந்து, இட்டு, தாம், தான், போன்ற பல அசைச்சொல்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களிலும் வரும்.

 

அவ்வாறு, இந்தக் குறளில் குறள் வெண்பா இலக்கணத்திற்காக “போலும்” என்ற அசைச் சொல் சேர்க்கப் பட்டுள்ளதாக பரிமேலழகப் பெருமான், புலவர் குழந்தை, புலவர் நன்னன் உள்ளிட்ட அறிஞர்கள் உரை சொல்கிறார்கள்.

 

“ஆயன் குழல் கொல்லும் படை” என்றாலே பொருள் விளங்கிவிடுகிறது. “ஆயன் குழல் போலும் கொல்லும் படை” என்று சொல்லத் தேவையில்லை என்பது அறிஞர் பெருமக்களின் கருத்து.

 

மூன்றாவது வினா: தேவையின்றி " போலும்" என்ற சொல் சேர்க்கப்பட்டு இருக்குமா?

 

மேற்கண்ட விளக்கத்தில் இருந்து இலக்கண அமைதிக்காக சில பொழுது அசைச் சொல்கள் சேர்க்கப்படும். அதிலும், நம் பேராசான், அவரின் கெட்டித்தனத்தால் குறைவான சொல்களைப் பயன்படுத்துவார். பின்னர், அந்தக் குறள்களை அசைச் சொல்களை இட்டு நிரப்பி முடிப்பார்! எல்லாப் புகழும் நம் பேராசானுக்கே!

 

அருமையாகத் தமிழிலேயே தட்டச்சு செய்து வினாக்களை எழுப்பிய எனதருமை நண்பருக்கு வாழ்த்துகள்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.






Comments


Post: Blog2_Post
bottom of page