20/12/2023 (1019)
அன்பிற்கினியவர்களுக்கு:
நீங்கள் பலருக்கு உணவளிக்கலாம். ஏன், தேவர்கள் என்கிறார்களே அவர்களுக்கும்கூட தீயிட்டு வேள்வி நடத்தி அதில் “அவிர் பாகம்” என்று சொல்லி உணவினை நெருப்பிலே இடுவார்கள். அதுபோன்று ஆயிரம் முறை செய்யலாம். ஆனால் இவையெல்லாம் கழுவாயாக ஆகாது. ஆனால், எப்படிப்பார்த்தாலும், ஓர் உயிரைக் கொல்லாமலும் அந்த ஊனைத் தின்னாமலும் இருத்தல் நன்று என்கிறார்.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. – 259; - புலால் மறுத்தல்
செகுத்து = போக்கி; அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் = உணவைக் கொட்டி ஆயிரம் முறை விருந்து என்னும் வேள்வியை நடத்தலாம், இருப்பினும்; ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று = ஓர் உயிரைக் கொல்லாமலும் அந்த ஊனைத் தின்னாமலும் இருத்தல் நன்று.
உணவைக் கொட்டி ஆயிரம் முறை விருந்து என்னும் வேள்வியை நடத்தலாம், இருப்பினும் ஓர் உயிரைக் கொல்லாமலும் அந்த ஊனைத் தின்னாமலும் இருத்தல் நன்று.
இவ்வாறு இருப்பின் எல்லா உயிரும் உங்களைக் கை கூப்பித் தொழும் என்று புலால் மறுத்தல் அதிகாரத்தை நிறைவு செய்கிறார். இதனைத் தொடர்ந்து தவம் என்னும் அதிகாரம்.
நம்மாளு: தவம் என்றால் முனிவர்கள் காட்டிடைச் சென்று தவம் இயற்றுகிறார்களே அதுவா?
அது முனிவர்களுக்கான தவம்.
திருக்குறளில் துறவறவியலில் இருப்பவர்களுக்கு, அஃதாவது, இல்லறத்தில் ஓய்வு நோக்கி அருளை வளர்க்க நினப்போர்க்குத் தவம் என்பது வேறு பொருளைத் தரும். அதனைத்தான் இந்த அதிகாரத்தில் விளக்குறார்.
தவம் என்ற சொல்லுக்கு அடிச்சொல் “தவ்”. “தவ்” என்றால் தாவுதல், சுருங்குதல் என்றும் பொருள் என்பர். தவ்வுவதால் தவளை என்று பார்த்துள்ளோம். இடத்திற்கு ஏற்றார்ப்போல் பொருள் எடுக்க வேண்டும். இங்கே இரு பொருள்களுமே சிறப்பாக அமைகின்றன. “அம்” என்றால் அழகு.
இல்லறத்தில் இருந்து அழகாகக் கடந்துச் செல்வது தவம் என்பது ஒரு பொருள் விளக்கம். தம்மைச் சுருக்கிப் பிற உயிர்களுக்கு வழிவிட்டுப் பேணுவது என்றும் பொருள்படும். அவ்வாறு, நம்மைச் சுருக்கிப் பிற உயிர்களின் மீது அருளைச் செலுத்துதல் ஓர் அழகு.
“தவ்” என்ற சொல்லுடன் அகரம் சேர “தவ” என்றாகும். “தவ” என்னும் உரிச்சொல் மிகுதி என்னும் பொருள்தரும். தவம் என்றால் மிகுதியான அழகு என்ற பொருள்தரும்.
எப்படிப் பார்த்தாலும் தவம் என்பது ஒரு பெரிய அழகு. இல்லையா பின்னே! அருளாட்சி செய்தால் அது அழகுதானே?
இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க நம் பேராசான் இந்த அதிகாரத்தின் முதல் குறளில் சொல்லிய வரைமுறைதான் தெளிவானது
இங்கே, தவம் என்பது உற்ற நோய் நோன்றல்; உயிர்க்கு உறுகண் செய்யாமை அவ்வளவே. காண்க 06/01/2023.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. - 261; - தவம்
சரி, இந்த வரையறை யார்க்குப் பொருந்தும்?
மக்கள் மூவகையாக இருப்பர். உண்டென்பர் சிலர்; இல்லயென்பர் சிலர்; நமக்கில்லை அந்தக் கவலை என்பர் சிலர். மூன்றாவது பிரிவினர் முற்றும் துறந்தவர்கள். அவர்களைத் தவிர்த்து ஏனைய இரு பிரிவினரைத்தாம் திருக்குறள் எடுத்துக் கொள்வது. அப்படிப் பார்த்தால், தவம் என்பது யாருக்கு அந்தத் தவ உறுதி இருக்கிறதோ அவர்க்கு ஆகும். அந்த உறுதி இல்லாதவர்கள் தவத்தினை மேற்கொள்ள முயல்வது வீண் என்கிறார். இது எல்லாரையும் தூண்டிவிடுவதுபோல அமைந்தக் குறள்.
தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது. – 262; - தவம்
அவம் = வீண், பயனின்மை; தவமும் தவமுடையார்க்கு ஆகும் = உற்ற நோய் நோன்றல்; உயிர்க்கு உறுகண் செய்யாமை என்னும் தவ முயற்சிகள் செய்ய தவமென்னும் உறுதியான மன நிலை உடையவர்க்கே ஆகும்; அஃதிலார் அதனை மேற்கொள்வது அவம் = அவ்வாறான மன உறுதி இல்லாதவர்கள் அதனை மேற்கொள்ளவது வீண் முயற்சியே. பயன் தராது.
உற்ற நோய் நோன்றல்; உயிர்க்கு உறுகண் செய்யாமை என்னும் தவ முயற்சிகள் செய்ய தவமென்னும் உறுதியான மன நிலை உடையவர்க்கே ஆகும். அவ்வாறான மன உறுதி இல்லாதவர்கள் அதனை மேற்கொள்ளவது வீண் முயற்சியே. பயன் தராது.
அஃதாவது, நம் பேராசான் சொல்லவருவது என்னவென்றால் மனத்தைத் திடப்படுத்திக் கடந்துச் செல்லுங்கள். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று மனத்தை ஆட விடாதீர்கள் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments