top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

அவையறிந்து இடைதெரிந்து 711, 712

21/05/2023 (808)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.” --- குறள் 711; அதிகாரம் – அவையறிதல்


தூய்மை = எந்தச் சொல் நன்மை பயக்கும், எது சரியான பலனைத் தராது என்று ஆராய்ந்து அதில் நல்ல சொல்களைச் சொல்லுதல்;


சொல்லின் தொகையறிந்த தூய்மையவர் = சொல்லின் தொகுப்பாகிய செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்பனவற்றை அறிந்து அதில் நன்மை பயக்கும் சொல்களைச் சொல்பவர்; அவையறிந்து = அவையை அறிந்து, அதாவது அவையில் உள்ளோர் அறிவில் சிறந்தோரா, ஒத்தோரா, மற்றும் வளர்ந்து கொண்டு வருவோரா என்பதையும் கருத்தில் கொண்டு

ஆராய்ந்து சொல்லுக = இப்படிச் சொன்னால் இப்படி நிகழும் என்பதனையும் ஆராய்ந்து சொல்லுக.


சொல்லின் தொகுப்பாகிய செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்பனவற்றை அறிந்து அதில் நன்மை பயக்கும் சொல்களைச் சொல்பவர்; அவையை அறிந்து, அதாவது அவையில் உள்ளோர் அறிவில் சிறந்தோரா, ஒத்தோரா, மற்றும் வளர்ந்து கொண்டு வருவோரா என்பதையும் கருத்தில் கொண்டு, மேலும், இப்படிச் சொன்னால் இப்படி நிகழும் என்பதனையும் ஆராய்ந்து சொல்லுக.


நம்மாளு: அப்பாடி! ஒரு அவைக்குள் நுழைவதற்கு இவ்வளவு இருக்கா ஐயா,?


ஆசிரியர்: கொஞ்சம் பொறுங்க தம்பி. இது ஒரு பகுதிதான். இதனை மேலும் விரித்து அடுத்தப் பாடலிலும் தொடர்கிறார்.


சொல்லை இடை தெரிந்து சொல்லணுமாம். அது என்ன இடை? அதாவது, நாம் சொல்லும் சொல் அந்த அவையினுள் ஒரு விருப்பத்தை ஏற்படுத்த வேண்டுமாம். அது மட்டுமல்ல, நன்குணர்ந்து சொல்லணும் என் கிறார். அதாவது, சொல்லும் சொல்லில் குற்றம் இருக்கக் கூடாதாம். குற்றம் என்பது இருவகை. அதாவது, சொற் பிழை, பொருள் பிழை.


அதாங்க, நம்ம திருவிளையாடல் திரைப்படத்தில் நக்கீர்ப் பெருமான் பாட்டில் பிழை இருக்கிறது என்பார். அதற்கு, சிவபெருமான் என்ன குற்றம் கண்டீர்? சொற் குற்றமா? பொருட் குற்றமா? என்பாரில்லையா அது போல!

ஈரண்டுமே இருக்கக் கூடாது. இருப்பினும், அந்தப் படத்தில், நக்கீரப் பெருமான் சொல்லில் குற்றம் இருப்பின் மன்னிக்கப் படலாம்; பொருளில்தான் குற்றம் என்பார். இதனையும் கவனிக்கணும். பொருள் குற்றம் இருக்கவே கூடாது.



அதுமட்டுமல்ல, சொல்லின் நடையையும் அறிந்திருக்க வேண்டும். சொல்லின் நடை என்றால் அந்தச் சொல்கள் தரும் பொருள். அவையாவன: செம்பொருள், இலக்கணப் பொருள், குறிப்புப் பொருள் என்பன.


ஒரு அமைச்சர், அவையறிந்து பேச, சொல்லின் தொகை, சொல்லின் நடை ஆகியனவற்றை நன்கறிந்தவராக இருக்க வேண்டும் என்கிறார்.


அந்தப் பாடலையும் பார்ப்போம்.


இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.” --- குறள் 712; அதிகாரம் – அவையறிதல்


சொல்லின் நடை தெரிந்த நன்மையவர் = சொல்லின் நடை என்பது மூன்று வகைச் சொல்களின் பொருள்களை (செம்பொருள், இலக்கணப் பொருள், குறிப்புப் பொருள்) ஆராய்ந்தறிந்து அதனின் நன்மையை அறிந்தவர்; இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக = அவையினர் விருப்பமுடன் கேட்கும் வகையில் குற்றமில்லாமல் சொல்லுக.


சொல்லின் நடை என்பது மூன்று வகைச் சொல்களின் பொருள்களை (செம்பொருள், இலக்கணப் பொருள், குறிப்புப் பொருள்) ஆராய்ந்தறிந்து அதனின் நன்மையை அறிந்தவர், அவையினர் விருப்பமுடன் கேட்கும் வகையில் குற்றமில்லாமல் (சொற் குற்றம், பொருட் குற்றம்) சொல்லுக.


மேற்கண்ட இரண்டு பாட்டாலும் அவையறிந்து சொல்லும் வகையைப் பொதுப்பட விளக்கினார்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comentários


Post: Blog2_Post
bottom of page