22/05/2023 (809)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
முதல் குறளில் சொல்லின் தொகை என்றார்; இரண்டாம் குறளில் சொல்லின் நடை என்றார்.
மூன்றாம் குறளில் சொல்லின் வகை என்கிறார். சொல்லின் வகை அறியார் எல்லாராலும் இகழப்படுவர்களாம்.
சொல்லின் வகை அறியார் என்பது மூவகைச் சொல்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை முதலியன.
அதாவது, சொல்லப்புகும் ‘அவை’ எத்தன்மைத்து என்பதில் ஒரு தெளிவு இல்லாதவர்கள் சொல்லத் தலைப்பட்டால், அவர்கள் சொல்லின் வகைகளைக் கற்றிருந்தாலும் கல்லாதவர்களே!
அவர்கள் சொல்லுவதால் என்ன பயன்? நிகழப் போவது ஒன்றும் இல்லை.
“அவையறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.” --- குறள் 713; அதிகாரம் – அவையறிதல்
அவையறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகையறியார் = அவையினது தன்மையை அறியாதவர்கள் ஒரு செய்தியைச் சொல்லத் தலைப்படுவது என்பது எதைக்காட்டுகிறது என்றால் அவர்கள் சொல்லின் வகையையும் அறியாதவர்கள் என்பதை; வல்லதூஉம் இல் = (மேலும்,) விரும்பியதை நிகழ்த்தும் வல்லமையும் அவர்களிடம் இல்லை.
அவையினது தன்மையை அறியாதவர்கள் ஒரு செய்தியைச் சொல்லத் தலைப்படுவது என்பது எதைக்காட்டுகிறது என்றால் அவர்கள் சொல்லின் வகையையும் அறியாதவர்கள் என்பதை. மேலும், விரும்பியதை நிகழ்த்தும் வல்லமையும் அவர்களிடம் இல்லை. அவர்கள் இகழ்ச்சிக்குத்தான் உள்ளாவார்கள்!
விரும்பியதாவது, சொல்லுவதால் ஏற்படுத்த நினைக்கும் விளைவுகள், மற்றும் கேட்பாரிடம் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதில் தெளிவு.
மூன்றாம் பாடல் மூலம், அவை அறியாமல் பேசுவதால் வரும் குற்றம் என்னவென்று கூறினார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
very true