24/10/2022 (600)
செயல்வகை வரைபடத்தை (System diagram) குறள் 461ல் சொன்னார்.
அதற்கு அடுத்தக் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 12/06/2022 (471).
“தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.” --- குறள் எண் – 462; அதிகாரம் – தெரிந்து செயல்வகை
அரும்பொருள் என்றால் அரிதான பொருள், உயர்ந்த பொருள் என்று பொருள். அதாவது தெரிந்த இனத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து செய்பவர்களுக்கு அடைய முடியாத அரிதான பொருள் ஒன்றும் இல்லை.
இது நிற்க.
வாரன் பஃபெட் (Warren Buffet) என்று ஒரு பெரும் முதலீட்டாளர் மற்றும் பெரும் பணக்காரர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் ஒரு கூட்டத்தில், “பணம் பண்ண இரண்டு விதிகளைச் சொல்லப்போகிறேன். யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அனைவரும் அருகில் வாருங்கள் என்றார்.”
யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அந்த அரங்கமே எழுந்தது.
“சரி அப்படியென்றால் இந்த அரங்கத்தின் கதவுகளை அடைத்துவிடுங்கள். காதை நன்றாகத் தீட்டிக் கொள்ளுங்கள்” என்றார்.
அரங்கம் அடைக்கப்பட்டது. எங்கும் அமைதி. அவர் அந்த இரண்டு விதிகளைச் சொன்னார்.
“இந்த விதிகளைப் பின் பற்றினால் நீங்களும் வெல்லலாம்” என்றார்.
அது என்ன விதிகள் என்கிறீர்களா? கொஞ்சம் கிட்ட வாங்க.
முதல் விதி: “முதலை இழக்காதே.”
இரண்டாவது விதிதான் மிக முக்கியமானது. இன்னும் கிட்ட வாங்க.
அது என்னவென்றால்: “முதல் விதியை எந்தக் காலத்திலும் மறக்காதே!”
1. Never lose money/capital; and
2. Never forget Rule – 1.
சரி நாம குறளுக்கு வருவோம்.
“ஒன்றை வைத்தால் பத்து.” “வந்தால் மலை, வரவில்லையென்றால் _____. அதாங்க “பரவாயில்லை!”. இந்த மாதிரி ‘பரவாயில்லை’ ஆளுங்க அந்தக் காலத்திலும் இருந்திருப்பார்கள். அவர்களைக் கவனித்த நம் பேராசான் சொல்கிறார்:
“தம்பி, இது வரும், அது வரும் என்று கையில் இருக்கும் காசை காலி பண்ணாதே! இந்த மாதிரி செயல்களை என்னாலே ஏற்றுக் கொள்ள முடியாது.”
“ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவு உடையார்.” --- குறள் 463; அதிகாரம் – தெரிந்து செயல் வகை
ஆக்கம் கருதி = கற்பனையில் முழம் போட்டு; முதல் இழக்கும் செய்வினை = இருக்கும் முதலை இழப்பது போன்ற செயல்களைச் செய்ய; ஊக்கார் அறிவு உடையார் = அறிவு சார் சான்றோர்கள் ஆதரிப்பதில்லை.
கற்பனையில் முழம் போட்டு, இருக்கும் முதலை இழப்பது போன்ற செயல்களைச் செய்ய அறிவு சார் சான்றோர்கள் ஆதரிப்பதில்லை.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
பின் இணைப்பு:
எச்சரிக்கை: நேரம் இருப்பின் தொடருங்கள்.
The heart of the discerning acquires knowledge; The ears of the wise seek it out. இந்த நீதி மொழியை கொஞ்சம் விரிக்கலாம் என்று நினைத்தேன். அதன் விளைவு தான் இது:
இந்த வசனத்தின் முதல் பகுதியில் “knowledge” என்று வருகிறது. அடுத்தப் பகுதியில் “wise” வருகிறது. ஒன்று அறிவு; மற்றொன்று ‘அறிவைவிட மேம்பட்டது’. அதாவது ஞானம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோன்று முதல் பகுதியில் ‘heart’ (இதயம்) என்று வருகிறது. இதயம் –மாறுபடுவது; துடித்துக் கொண்டே இருப்பது. நிதானமாக இருக்கத் தெரியாது. இதுவா, அதுவா என்ற குழப்பம் நிறைந்தது.
வசனத்தின் இரண்டாவது பகுதியில் ‘ears’ என்று வருகிறது. காது எந்த செய்தியைக் கேட்டும் வெளிப்பாடாக எதையும் காட்டாது. உள்ளே அனுப்பிவிட்டு அமைதியாக இருக்கும். குழப்பம் இல்லாதது.
வெகுசிலருக்கு காது துடிக்குமே என்பீர்கள். யோசனை பண்ணிப்பார்த்தால் அந்த நபர்களுக்கு இதயம் கொதி நிலையில் இருக்கும்!
அதனால்தான் இந்த வசனம் பல குறியீடுகளைக் கொண்டதாக நினைக்கிறேன். அதாவது அறிவைத் தேடும் நிலையில் நான் இருக்கிறேன்! ஞானம் அடைந்துவிட்டால் மௌனம்தான் மொழி. அதுவரை இந்த வழிதான்!
மோனம் என்பது ஞான வரம்பு.
நான் ஏதோ வேதாகமத்தைப் படித்தவன் என்று நினைக்க வேண்டாம். போகும் வழியில் ஒரு சுவற்றில் எழுதியிருந்தது இந்த நீதி மொழி. அவ்வளவுதான். என் கதையெல்லாம் அவ்வளவே.
Comments